உண்கள்வார்
மரணத்தருவாயில் வாலி ராமனிடம் ஒன்று கேட்கிறான்:
ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால்
பூ இயல் நறவம் மாந்தி புந்தி வேறு உற்ற போழ்தில்
தீவினை இயற்றுமேனும் எம்பிமேல் சீறி என் மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான்
ஓவியம் ஒத்த அழகுடையோனே! நான் உன்னிடம் கேட்டுப் பெறவேண்டியது ஒன்று உண்டு:
பூக்களில் இருந்து வரும் மதுவை அருந்தி புத்தி மாறி, என் தம்பி சுக்கிரீவன்,
பிழையான வினை ஏதும் செய்வானாகில் அவன் மேல் சினமுற்று, என் மீது
தொடுத்ததுபோல் அம்பு என்ற எமனைத் தொடுத்துவிடாதே.
ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால்
பூ இயல் நறவம் மாந்தி புந்தி வேறு உற்ற போழ்தில்
தீவினை இயற்றுமேனும் எம்பிமேல் சீறி என் மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான்
ஓவியம் ஒத்த அழகுடையோனே! நான் உன்னிடம் கேட்டுப் பெறவேண்டியது ஒன்று உண்டு:
பூக்களில் இருந்து வரும் மதுவை அருந்தி புத்தி மாறி, என் தம்பி சுக்கிரீவன்,
பிழையான வினை ஏதும் செய்வானாகில் அவன் மேல் சினமுற்று, என் மீது
தொடுத்ததுபோல் அம்பு என்ற எமனைத் தொடுத்துவிடாதே.
புந்தி வேறு உற்ற போழ்தில் என்று வரி கச்சிதமானது.
மது உண்டு வெளிப்படும் தன்மை, ஒரு மனிதனது இயல்புத்தன்மையா இல்லையா என்ற கேள்வி, நாட்படு தேறலினும் பழையது. அவனது இயல்பு பிறழும், ஆனால் அதுவும் அவன் தான் என்றே எண்ணுகிறோம். (எச்சரிக்கை: 'தொடர்ச்சியான ஆர்வமிகு ஒப்புதல்' போன்ற நவீன கருதுகோள்களிலும் இது இருபாலருக்கும் பொருந்துமா?- என்றெல்லாம் எண்ணிப்பார்த்து சங்கடமாகிக்கொள்ளாதீர்.)
வாலி சொன்னது போலவே ஆகிறது. சாதுர்மாஸ்யத்துக்கு பிறகும் படைதிரட்டிக் கொண்டு உதவிக்கு வரவில்லை சுக்கிரீவன். கள்ளும், கூத்துமாக அரசபதவி வகிக்கிறான். சினத்துடன் சென்று விசாரிக்கும் இலக்குவனை அனுமன் ஆசுவாசப்படுத்த, சுக்கிரீவன் மன்னிப்புக்கோரி தன் குடிப்பழக்கத்தால் வரும் கேடுகளை புலம்பும் சில பாடல்கள் வரும். அதில் ஒரு வரி
ஒளித்தவர் உண்டு, மீண்டு, இவ்உலகு எலாம் உணர ஓடிக்
களித்தவர் எய்தி நின்ற கதிஒன்று கண்டது உண்டோ
யாருக்கும் தெரியாமல் ஒளித்துக் குடித்துவிட்டு, பிறகு உலகம் முழுவதும் காணும்படி ஓடி
களித்து கூத்தாடியவர் நற்கதி எய்தியதே இல்லை (அப்படி ஒருவர் எய்தியதைக் கண்ட வரலாறே கிடையாது)
ஒளித்துச் செய்தது இயற்கையா? ஒளிக்கச் சொல்லிய பிரக்ஞை இயற்கையா? ஒளித்துச் செய்ததால் வெளிவந்தது இயற்கையா? அவ்வாறு வந்து தொலைத்துவிட்டதே என்று வருந்துவது இயற்கையா? எது அவன் இயற்கை? எது அவன் 'அது தான் இல்லை' என்று வருந்தும் செயற்கை?
No Mr.Puntilla this மலையமான்
புறம் 123ல் கபிலர் மலையமான் திருமுடிக்காரியை இவ்வாறு பாடுகிறார்
நாட் கள் உண்டு, நாள்மகிழ் மகிழின்,
யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே;
தொலையா நல்லிசை விளங்கு மலயன்
மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்
பயன்கிழு முள்ளூர் மீமிசைப் பட்ட
மாரி உறையினும் பலவே.
பொழுதுகாலத்திலேயே கள்ளுண்டு மகிழ்ந்திருக்கும்ப்போது
தேர்களை பரிசளிப்பது யார்க்கும் எளிதே.
ஆனால், குறையாத புகழுடைய மலையன் திருமுடிக்காரி
கள்ளுண்ணாது 'நிலை'யாக இருக்கும்போது அளித்த,
நன்கு அலங்கரிக்கப்பட்ட தேர்களின் எண்ணிக்கை
அவனது முள்ளூர் மலைமீது பொழிந்த மழைத்துகளினும் எண்ணிக்கை அதிகம்.
அதாவது இதுவே இயற்கையான கொடை பிறவெல்லாம் செயற்கைக் கொடைகள் என்று கபிலர் புகழ்கிறார்.
கள்ளும் வேலையும்
அரசனுக்கு சரி, உழைக்கும் மக்களுக்கு?
சீவகசிந்தாமணியில் நாமகள் இலம்பகத்தில், நாட்டு வளத்தைப் பாடும்போது திருத்தக்கத் தேவர், வயலில் இறங்கி களை எடுக்க முயன்ற மள்ளர்களின் நிலையை இவ்வாறு பாடுகிறார்:
கண் எனக் குவளையும் கட்டல் ஓம்பினார்
வண்ண வாள் முகம் என மரையின் உள் புகார்
பண் எழுத்து இயல் படப் பரப்பி இட்டனர்
தண் வயல் உழவர் தம் தன்மை இன்னதே
- களையாக இருக்கும் குவளை மலர்களெலாம் அவர்கள்தம் காதலிகளின் கண்களை நினைவுபடுத்தியதால் அவற்றைக் கொய்ய முடியாமல் தயங்கினர்.
- களையாக முளைத்த தாமரை மலர்கள் அவர்கள்தம் காதலிகளின் வண்ண வாள் போன்ற முகத்தை நினைவுபடுத்தியதால் அவற்றையும் அகற்ற முடியவில்லை
- பண்களை, எழுத்துகளின் தன்மை தோன்ற பாடினர் (என்கிறது உரை. இதன் பொருள் என்ன? ராகங்களை ஸ்வரசுத்தமாக பாடினர் என்று பொருளா?)
- குளிர்ந்த வயல்களில் இருந்த உழவர்களின் தன்மை இதுவாக இருந்தது.
உணவு இயற்கை கொடுக்கும் என்றெல்லாம் மகாகவிகள் வேண்டுமானால் எழுதலாம்.
அதனால்:
ஆய் பிழி விருத்து வண்டு அயிற்றி உண்டு தேன்
வாய் பொழி குவளைகள் சூடி மள்ளர்கள்
தேய் பிறை இரும்பு தம் வலக்கை சேர்த்தினர்
ஆய் செந் நெல் அகன்ற காடு அரிகுற்றார்களே
- உழவர்கள், சிறந்த கள்ளை வண்டுக்கும் (வண்டுக்கே!) விருந்தாக அளித்து தாமும் உண்டு
- தேனை பொழியும் குவளை மலர்களைச் (அறுத்து) சூடி
- தேய்பிறை வடிவிலான கதிரறிவாளை வலக்கையில் ஏந்தி
- செந்நெல் காட்டை அரியத் தொடங்கினார்
பிழைப்பு
நம் சக்ரவத்தியார் இந்தக் காட்சியைப் படித்துப் பூரிக்கிறார். மள்ளர்களின் தவிப்பு அவர்க்குப் பிடித்துப் போகிறது. ஆனால், ஒரு மொந்தை கள்ளில் அவர்கள் சஞ்சலம் தீர்வதை அவரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
பாலகாண்டம் நாட்டுப்படலத்திலேயே மள்ளர்கள் நிலைமையைப் பாடும்போது, இச்சித்திரத்தை எடுத்தாள்கிறார்:
பண்கள்வாய் மிழற்றும் இன்சொல் கடைசியர் பரந்து நீண்ட
கண் கைகால் முகம் வாய் ஒக்கும் களையலாற் களையி லாமை
உண்கள்வார் கடைவாய் மள்ளர் களைகிலாது உலாவி நிற்பார்
பெண்கள் பால் வைத்த நேயம் பிழைப்பாரோ சிறியோர் பெற்றால்
- பண்கள் இசைப்பதுபோன்ற இனிய சொற்களைப் பேசும் உழத்தியர்களின் பரந்து நீண்ட
- கண், கை, கால், முகம் வாய் போன்றவற்று உவமையாகத் திகழும் களைகள் அல்லால் வேறு களை இல்லாத காரணத்தாலே
- உண்ட கள் கடைவாயில் இருக்கும் மள்ளர்கள் களையெடுக்காது இங்கும் அங்குமாக உலாவிக் கொண்டிருப்பர்
- பெண்கள் பால் வைத்த நேசத்தை சிறியோர் பெற்றால் பிழைப்பரோ?
- பெண்கள் பால் நேயம் வைத்த சிறியோர்க்கு பிழைக்கத்தான் முடியுமோ - என்றும்
- தவிர்க்க வேண்டிய நேரங்களில் கூட தவிர்க்காமல் (பிழைக்காமல்) உறுதியாக இருப்பார்கள்.யார் இருப்பார்கள் சிறியோர்/எளியோர் - என்றும்
"The noble ruin of her magic..." என்று க்ளியோபாற்றாவைப் பற்றி ஷேக்ஸ்பியர் சொற்களை இன்னதென்று பிரித்துவிடத்தான் முடியுமா என்ன.
Comments
Post a Comment