சிவராத்திரி 2022
வண்டிலங்கு குழல்
கெண்டையொத்த விழி
பெண்டமைந்த விடம் மருள்தீர
பண்டிலங்கை பதி
வண்டிடப்பு யமும்
தண்டிருப்ப தியில் பழுதாக
அண்டமுய்ய விடம்
உண்டமர்ந்த கறை
கண்டவுந்த னரு ளெமைசேர
உண்டெமெக்கு பகை
எண்டுரைப்ப ரிலை
எண்டிசைக் கரியுங் கரியாமே
வகை: எழுசீர் விருத்தம்
பதம் பிரித்து:
வண்டு இலங்கு குழல்
கெண்டை ஒத்த விழி
பெண்டு அமைந்த இடம் மருள்தீர
பண்டு இலங்கை பதி
வண் திடப் புயமும்
தண் திருப்ப தியில் பழுது ஆக
அண்டம் உய்ய விடம்
உண்டு அமர்ந்த கறை
கண்ட! உந்தன் அருள் எமை சேர
உண்டு எமக்குப் பகை
எண்டு உரைப்பர் இ(ல்)லை
எண் திசைக் கரியும் கரியாமே
பொருள்
- வண்டு மொய்க்கும் (பூங்)குழலும், கெண்டை மீனைப் போன்ற விழியும் உள்ள பெண் அமைந்த இடப்பாகம், அடைந்த மருட்சியைக் நீக்குமாறு (அம்மருட்சிக்குக் காரணமான)
- பண்டு (முன்பொருநாள் (அல்லது) பழமை வாய்ந்த) இலங்கையின் பதியான (அரசனான) இராவணனின் அழகிய வலிமையான தோள்களைச் சோர்வு எய்தும்படி, தண்மையான (குளிர்ச்சியான) திருவிடத்தில் (கைலாயத்தில்), செய்தவன்
- ஆலகால விஷத்தால் இந்த அண்டம் அழியாமல் இருப்பதற்காக, அதை உண்டு (நிலையாக) அமர்ந்து, (அதனால்) நீலக்கறை கொண்ட மிடற்றோனே (கறைகண்ட!), உனது அருள் சேர்ந்தால்.
- “உண்டு எமக்கு பகை” என்று உரைப்பவர் இல்லை. இதற்கு எட்டுத்திக்குகளைத் தாங்கும் யானைகளும் (கரியும்) சாட்சியாமே (கரியாமே)
தொடர்புள்ள பழைய இடுகைகள்:
Comments
Post a Comment