உண்கள்வார்
மரணத்தருவாயில் வாலி ராமனிடம் ஒன்று கேட்கிறான்: ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால் பூ இயல் நறவம் மாந்தி புந்தி வேறு உற்ற போழ்தில் தீவினை இயற்றுமேனும் எம்பிமேல் சீறி என் மேல் ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான் ஓவியம் ஒத்த அழகுடையோனே! நான் உன்னிடம் கேட்டுப் பெறவேண்டியது ஒன்று உண்டு: பூக்களில் இருந்து வரும் மதுவை அருந்தி புத்தி மாறி, என் தம்பி சுக்கிரீவன், பிழையான வினை ஏதும் செய்வானாகில் அவன் மேல் சினமுற்று, என் மீது தொடுத்ததுபோல் அம்பு என்ற எமனைத் தொடுத்துவிடாதே.