வேதநாயகம் பிள்ளை - சிவனும் சுப்ரமணியரும்
உ.வே.சா'வின் என் சரித்திரத்தில் மாயூரம் முன்சீப் சாமுவேல் வேதநாயகம் பிள்ளை பல இடங்களில் தோன்றுகிறார்.
அவர் எழுதிய பாடல்கள் சிலவற்றையும் உ.வே.சா எடுத்துக்காட்டுகிறார். அவற்றில் இரண்டு:
சீகாழிக் கோவை சிறப்புப் பாயிரம்
என் சரித்திரத்தின் கணிசமான பகுதி 'என் ஆசிரியர்' என்றே கூட இருக்கலாம். உ.வே.சா'வுக்கு தனது ஆசிரியர் மகாவித்வான் மீனாட்சிசுதரம்பிள்ளையைப் பற்றி எழுதி மாளவில்லை. என்னைப் போல கொஞ்சம் அந்தக்கால ஆசாமிகளுக்கு இந்த உறவின் சித்திரம் பல இடங்களில் உருக்கம் தரும். என் தனிப்பட்ட போதாமைகளை முற்றிலும் மறந்து ஒரு கோமாளித்தனமான பொறாமை கூட எழுந்தது.
மீனாட்சிசுந்தரபிள்ளை எழுதிய சீகாழிக் கோவைக்கு வேதநாயகம் பிள்ளை எழுதிய சிற்று பாயிரத்தை உ.வே.சா படிக்கிறார்:
விதியெதிரி லரிமுதலோர் புகல்புகலி யீசரே விண்ணோர் மண்ணோர்
துதிபொதிபல் பாமாலை பெற்றிருப்பீர் மீனாட்சி சுந்த ரப்பேர்
மதிமுதியன் கோவையைப்போற் பெற்றீர்கொல் இக்காழி வரைப்பில் நீதி
யதிபதிநா மெனவறிவீர் நம்முன்னஞ் சத்தியமா அறைகு வீரே
(அறுசீர் ஆசிரிய விருத்தம்)
பதம் பிரித்து:
விதி எதிரில் அரி முதலோர் புகல் புகலி ஈசரே விண்ணோர் மண்ணோர்
துதிபொது பல்பாமாலை பெற்றிருப்பீர் மீனாட்சிசுந்தரப் பேர்மதி
முதியன் கோவையைப் போற் பெற்றீர்கொல்? இக்காழி வரைப்பில்
நீதி அதிபதி நாம் என அறிவீர் நம் முன்னம் சத்தியமா அறைகுவீரே
பொருள்: ஹரி முதலானோருக்கும் புகலிடமாக விளங்கும் காழிநாதா, விண்ணவர் மண்னவர் பலர் எழுதிய துதிகள் பொதி பொதியாக பல பாமாலைகளை பெற்றிருப்பீர். ஆனால் சிறப்பான மதி உடைய முதியன் மீனாட்சிசுந்தரம்பிள்ளையின் சீகாழிக்கோவையைப் போல் ஒன்றை நீர் பெற்றதுண்டா? நாம் இந்த வட்டாரத்தில் நீதிபதி என்பதை அறிவீர், என்னிடம் உண்மையாகச் சொல்லுமய்யா.
தாது வருஷ பஞ்சம்- சுப்ரமண்ய தேசிகர்
மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இறந்தபிறகு, உ.வே.சா திருவாவடுதுறை சந்நிதானமாக இருந்த சுப்ரமண்ய தேசிகரிடம் நேரடி மாணவராக இருக்கிறார். ஆங்கிலம் மேலேறி வரும் காலத்தில் தமிழ்க்கல்வியைத் தொடர்ந்து ஆதரிக்கும் தேசிகரை, வேதநாயகம் பிள்ளை போற்றி பாடல்கள் இயற்றுகிறார். தாது வருஷம் (1877ல்) மாபெரும் பஞ்சம் நிகழ்ந்த போது, தேசிகர் அதை எதிர்கொள்ள பல நடவடிக்கைகள் எடுக்கிறார். உ.வே.சா சொற்களில்:
அப்போது அயலூரிலிருந்து உணவுக்கு வழியின்றி வந்தவர்களுக்கு வேலை கொடுப்பதற்காகச் சுப்பிரமணிய தேசிகர் பல புன்செய் நிலங்களை நன்செய்களாக்கினர். பல இடங்களில் கஞ்சித் தொட்டிகளை வைத்து ஜனங்களுக்குக் கஞ்சி வார்க்கச் செய்தார்.
அக்காலத்தில் தேசிகரைப் பாராட்டி வேதநாயகம் பிள்ளை பல பாடல்கள் பாடினர். அவற்றுள் ஒன்று வருமாறு
எரியொத்த பஞ்ச மிடங்கரை யொத்த திடங்கர்பற்றும்
கரியொத் தனபல் லுயிர்களப் பஞ்சக் கராமடிக்க
அரியொத் தனன்சுப் பிரமணி யைய னரிசக்கரம்
சரியொத் தனவவ னீந்திடும் பொன்வெள்ளிச் சக்கரமே
இது கட்டளை கலித்துறை.
பதம் பிரித்தால்:
எரி ஒத்த பஞ்சம் இடங்கரை ஒத்தது இடங்கர் பற்றும்
கரி ஒத்தன பல்லுயிர்கள் அப்பஞ்சக் கரா மடிக்க
அரி ஒத்தனன் சுப்பிரமணி ஐயன் அரிசக்கரம்
சரியொத்தனவ அவன் ஈந்திடும் பொன்வெள்ளிச் சக்கரமே
பொருள்:
நெருப்பு போன்ற பஞ்சம் இடங்கரை ஒத்தது (இடங்கர் -> முதலை)
இடங்கர் பற்றும் கரி ஒத்தன பல்லுயிர்கள் (முதலை பற்றூம் யானையை ஒத்தன பல உயிர்கள்)
அப்பஞ்சக் கரா மடிக்க (பஞ்சமாகிய அம்முதலை மடிக்க ...கடிக்க?)
அரி ஒத்தனன் சுப்பரமணியையன் (ஐயன் என்றால் தலைவன் என்ற பொருளில் மடாதிபதி விளிக்கிறார் என பொருள்கொண்டேன்)
அரிசக்கரம் சரியொத்தனவ (ஹரியின் சக்ராயுதத்துக்கு சரியான உவமையாக விளங்கியவை)
அவன் ஈந்திடும் பொன் வெள்ளி சக்கரமே - அவன் கொடையளித்த பொற்காசும், தங்கக்காசும்
முதல் வாசிப்பில் கொஞ்சம் சிறப்பற்றதாகத் தோன்றியது. ஒரே உவமையை நாலு வரியாக போட்டு உருட்டியிருக்கிறாரே என்று. ஆனால் மீண்டும் படித்தால் தெரிவது: வேதநாயகம் பிள்ளை இங்கே பல வகை உத்திகள் கையாண்டிருக்கிறார். இதுவும் ஒரு ரசமே. அதை ரசிக்க ஒரு பழக்கம் வேண்டும்.
- எரி ஒத்த பஞ்சம் இடங்கரை ஒத்தது : உவமானம்--> உவமேயம் --> மற்றொரு உவமானம்
- பஞ்சம் இடங்கரை ஒத்தது என்று உவமையாக சொல்லி அடுத்த வரியே அந்த பஞ்சக்கரா - என்று உருவக அணியாக மீண்டும் ஒரு முறை சொல்கிறார்.
- ஒரே சொல் ஒரே பொருள்- சொல்பொருள் பின்வருநிலையணி
- இடங்கரை ஒத்தது, இடங்கர் பற்றும்
- அரி ஒத்தனன், அரி சக்கரம்
- ஒரே பொருள் வெவ்வேறு சொற்கள் - பொருள் பின்வருநிலையணி
- இடங்கர், கரா
- சிலேடை: அரிசக்கரம் - பொன்வெள்ளி சக்கரம்
இவ்வாறு பல வகை அணிகள் ஒரே செய்யுளில் வருவது சங்கீர அணி.
எப்போதோ எல்லாம் அல்ல, மிகச்சமீபத்தில்.
'..என்றோர் மானுடன் வாழ்ந்ததும்' என்று அதிசயிக்கத்தகவரால் அல்ல, (வெறும்) நன்கு கற்றோரால்.
காதால் இயற்றி இழைக்கப்பட்டதய்யா கவிதை என்கிற சமாசாரம்.
Comments
Post a Comment