கல் தோன்றிய காலம்


அகலிகை எப்போது கல்லானாள்?

புள்ளமங்கை - அகலிகை சாபவிமோசனம்
பரிபாடல் 19ல்  திருப்பரங்குன்றத்தில் உள்ள ஓவியங்களைப் பார்த்துக்கொண்டே அவற்றைப் பற்றிப் பேசிச்செல்லும் காட்சி வருகிறது

50-52 வரிகள்:

... இவள் அகலிகை இவன்
சென்ற கவுதமன் சினன் உறக் கல் உரு
ஒன்றிய படி இது என்று உரை செய்வோரும்
இன்ன பல பல எழுத்து நிலை மண்டபம்

துன்னுநர் சுட்டவும்  சுட்டு அறிவுறுத்தவும்

கவுதம முனிவன் கோபத்தால் கல் உரு பெற்ற அகலிகை இவளே....... என்றெல்லாம்...(இதைப் போல பல) சித்திரங்கள் உள்ள மண்டபத்தில், சுட்டிக்காட்டி அறிவுறுத்திக் கொண்டு போகிறார்கள்.

பரிபாடல் காலத் தமிழகத்தில்  referential ஓவியக்கலை செழித்தமையைக் காட்டுவதாக இதை மேற்கோள் காட்டுவதுண்டு. அவ்வோவியம் குறிக்கும் கதை தமிழகத்தில் பரவலாக அப்போதே அறியப்பட்டிருக்கவேண்டும்.

சரி அதற்கென்ன ? ராமாயணக்கதை தான் சங்ககாலத்திலேயே  தெரிந்தது தானே?
ஆம். ஆனால் எந்த ராமாயணம்?

வால்மீகி இடும் சாபம் இதுவே (பாலகாண்டம் 48:30)

அத்ரிஷ்யா ஸர்வ பூதாணாம் ஆஷ்ரமே அஸ்மின் வஷிஸ்யஸி
 “....யாராலும் காண இயலாவகை இந்த ஆசிரமத்திலயே உழல்வாய்”

புழுதியோடு புழுதியாக, பல்லாயிரமாண்டு, வருந்தி, காற்றை மட்டுமே உண்டு, யாருமே காணமுடியாதபடி இருப்பாய் - என்பது முழுச்சாபம்.

ஆசிரமத்துக்குள் இராமன் சென்றதும் உருப்பெருகிறாள்.

கல்லாக எல்லாம் ஆகவில்லை.

ஆனால் காளிதாசர் ரகுவம்சத்தில், அஹல்யா கல்லானதாக எழுதுகிறார் (ரகுவம்சம் 11-34):

ஷிலாமயி கௌதம வதூ: 
கல்லுருவான கௌதமனின் மனைவி 

இதை வைத்து, காளிதாசனுக்குப் பின்பட்டதே பரிபாடல் என்று வையாபுரிப்பிள்ளை (காவியகாலம் பக்.49) கூறுகிறார். தமிழன்பர்களுக்கு எச்சரிக்கை:  இந்நூலை, இருந்தகோலத்தில் படிக்கவும்; கையெட்டும் தூரத்தில், குடிப்பதற்கு தண்ணீர் வைத்துக்கொள்ளவும்.

கம்பன்


கண்ட கல்மிசைக் காகுத்தன்  கழல்-துகள் கதுவ.-

உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு. உருவம்

கொண்டு...

என்று, ராமன் கால்பட அகலிகை கல்லுரு நீங்குவதாகவே கம்பன் பாடுகிறார்.  
முன்னொரு இடுகையில் கும்பகோணம் நாகேஸ்வரஸ்வாமி கோவில்/ புள்ளமங்கை கோவில், ஆகியவற்றில் இராமாயணச் சிற்பங்கள் வால்மீகியில் இருந்து வேறுபட்டு, ஆனால் மிக மிகத் துல்லியமாக கம்பனுடன் ஒத்திருப்பதைக் குறிப்பிட்டு இருந்தேன். கம்பனுக்கு சுமார் 200 ஆண்டு முற்பட்ட சிற்பங்கள் அவை. 

வான்மீக மூலக்கதை தமிகழத்தில் பல தலமுறைகளாக வழங்கப்பட்டு, முக்கிய கணங்களுக்கு ஒரு துல்லியமான காட்சிப்படுத்துதல்கள் (visual specificity), வளர்ந்து (அதாவது கதைசொல்லலிலேயே) எழுந்தபின்னர், அவற்றை சிற்பிகளும், புலவர்களும் வடித்தார்கள் என்று இந்த ஒற்றுமைகள் எண்ணத்தோன்றுகிறன.

அவ்வளவெல்லாம் கூட complexஆக இல்லாமல்,  இவற்றிற்கு ரகுவம்சம் போன்ற எழுதப்பட்ட பிரதிகளே பொதுமூலமாக (common source)  இருந்திருக்கலாம். இல்லாவிடில் இத்தனை துல்லியமான ஒற்றுமை சாத்தியம் இல்லை என்றே எண்ணுகிறேன். படிக்கவேண்டும்; ஆர்ஸ் லொங்கா விடா ப்ரெவிஸ்

பி.கு: ஒப்புநோக்க கம்பனில் அகலிகைப் படலம் படித்தபோது ஒன்று தட்டுப்பட்டது: கம்பர் விஸ்வாமித்ரனை: பொன்னை ஏய் சடையான்  என்கிறார். Was viṣvāmitrā blond?

Comments

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

Kamal - the writer/director

The Legend of Butler Kandappar