தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்திங்கு

சமீபத்தில் அமர் சித்ர கதா மகாபாரதத் தொகுப்பை படித்துக்கொண்டிருந்தேன் (எழுத்தாக்கம்: மார்கி சாஸ்த்ரி)

இடக்கரடக்கல் அனேகமாக தவிர்த்து அந்த வடிவத்தில் சாத்தியப்பட்ட முழுமையை எய்த முயன்றமை அதன் வாசகர்கள் மீது வைத்திருந்த மதிப்பாகத் தோன்றியது. அத்தியாயப் பிரிவுகளும், விரிவும் - வியாசபாரதத்தை ஒத்து இருந்தன. உதாரணமாக, சிசுபாலன் கிருஷ்ணன் மீது வீசும் அவச்சொற்கள், ஒவ்வொன்றுக்கும் படம் தீட்டி அளிக்கப்பட்டன. (பெண்ணைக் கொன்றான் - பூதணை வதம், மாட்டைக்  கொன்றான் - தேனுகாசுர வதம், போஷித்தவனைக் கொன்றனை - கம்சவதம்)


மூலச்சொல்லில் புகழ்மொழியாக வரும் விளிச்சொற்களை பல இடங்களில் பயன்படுத்தி இருந்தது ஒரு மிக அழகான அறிமுக உத்தி. உதாரணமாக யுதிஷ்டிரனை சந்திக்கும் சஞ்சயன் அவனை 'ப்ரிதா' என்று அழைக்கிறார். குந்திபோஜரால் தத்தெடுக்கப் படும் முன்பு, குந்தியின் இயற்பெயர் ப்ரிதா.அப்பெயரிலேயே யுதிஷ்டிரனை அழைக்கிறார் சஞ்சயன். ப்ரிதா --> பார்த்தன் என்ற பெயர் அர்ஜுனனுக்கு மட்டுமே உள்ள பெயர் என்று எண்ணியிருந்தேன். பாண்டவர்களுக்கான பொதுப்பெயர் என்று அறிந்திருக்கவில்லை. 
வயதாக ஆக யுதிஷ்டிரன் மீது ஒரு பரிவான புரிதல் ஏற்படுகிறது.

இளவயதில் சாகச அர்ஜுனன் நம்மைக் கவர்வது இயற்கையே. பாண்டவர்களின் மையப்புள்ளி, ஈடில்லா திறத்தவன், பிருஹண்ணளையாக தன்னந்தனியாக நின்று கௌரவர்களை விரட்டியடித்தவன் என்ற்றெல்லாம். பிறகு இளமையில், காதலும், கோவமும் பொங்கி நிறையும் பீமனோடு ஒரு ஒத்துணர்வு நமக்குத் தோன்றும். ஆனால் யுதிஷ்டிரன் மீது என்றுமே ஒரு ஒவ்வாமை. 

"எரிதழல் கொண்டு வா, கதிரை வைத்து இழந்தான் அண்ணன் கையை எரித்திடுவோம்"  என்ற பீமகர்ஜனையின் நிழலிலேயே யுதிஷ்டிரனைக் காண்கிறோம்.

'சரியான செய்கை' பற்றி சிந்தித்து சிந்தித்து செயல்களே ஸ்தம்பிக்கும் அளவு சிந்திக்கும் சலிப்பூட்டும் பாத்திரமாகவே அவன் தோன்றுகிறான். ஹாம்லெட் நிகர்த்த ஒரு cerebral தயக்கம் கதைநெடுக அவனிடம் காண்கிறோம். 

'திரௌபதி மீது கொண்ட ஈர்ப்பால், குந்திசொல்லை பின்பற்றி மணந்தான்' என்றவாறு ஒருகட்டத்தில் அவனைப் புரிந்துகொள்ள முனைகிறோம்.அவ்வாறு அவனை 'மனிதப்படுத்தி', குறுக்கி உள்வாங்கியதும் அவனைப் போன்ற ஒருவனை அணுக நாம் மேற்கொள்ளும் உத்தியோ?
கட்டளை-விதிகள் மீது தான் அவனுக்கு முதன்மையான பிரேமை என்றே படிக்கப்படிக்கத் தோன்றுகிறது.

திரௌபதிக்கு அவைக்கள அவமரியாதை மீண்டும் ஒரு முறை விராடன் அவையில் கீசகனால் நிகழும்போதும் கூட விதி பேசியவன் யுதிஷ்டிரன். பொங்கும் பீமனை அடக்கியவன், சாய்ரந்திரியான திரௌபதி அருவருகிறாள் என்று அறிந்தும் மனம் மாறாதவன். ஆனால் அவன் மனம் நோகாதவன் அல்லன். "அறைகழல் அலங்கல் வீரர் புரிவது ஆண்மை/ துறை என் ஆயிற்று" என்று கம்பராமாயண வாலி ராமனை இடித்துரைப்பது போல் வரும் பழிக்கு அஞ்சுபவன். அதற்காக மட்டுமே தன் தம்பியரைக் கட்டுப்படுத்துபவன். இதன் பொருட்டு  திரௌபதியும், தம்பியரும் வனமேகி வருந்துவதை எண்ணி எண்ணி துயருருபவன். 

சஞ்சயன் தூது

திருதராட்டினனிடம் இருந்து தூதாக வரும் சஞ்சயன், 'நிலையற்ற செல்வத்தை நாடுவதை விடுத்து, ஏற்கனவே காடேகிய நீவிர் பரம்பொருள் தேடுதலில் நுமது கவனத்தைக் குவிமின்' என்றெல்லாம் அறிவுரை செய்கிறான்.



'உங்கள் உரிமைகளை விட்டுக்கொடுத்து, உள்ளது உள்ளபடி விட்டுவிடு தர்மா. இதனால் போரைத் தவிர்க்கலாம். எத்தனையோ உயிர்கள் போவதை தவிர்க்கலாம்' என்று சஞ்சயன் சொல்கிறான்.

இவ்வாறு அவன் சொல்வது மேலோட்டமாக பார்த்தாலே ஒருபக்கச் சார்புடையது, அநியாயமானது என்று புரியும். இதைச் சொல்ல ஒரு தூதுவனா?
அதுவும் சஞ்சயன் போன்ற ஒரு ஞானியா?
அவ்வளவு மிகை எளிமையானதா என்ன வியாசபாரதம்?

இல்லை, சஞ்சயன் உந்துவது ஒரு மீறலை: 'உன் உறுதியால் விளையப்போகும் அழிவுக்கு நீ பொறுப்பேற்கத்தயாரா? துறக்கம் எய்தும் நல்வழி நோற்பது நிச்சயமாக  பாவம் அற்ற வழி. பீஷ்மரையும், துரோணரையும், கிருபாசார்யாரையும், விகர்ணணையும்  கொல்லும் போரும், ராஜாங்கமும் பாவத்திற்கான சாத்தியங்கள் நிறைந்தவை. ஏன் இவ்வேலை உனக்கு? ' என்பது போல சஞ்சயன் பேசுகிறான்.

இன்னும் ஒரு படி மேலே சென்று தத்துவர்த்தமாக 'இக உலகில் நீ எதுவுமே செய்யாமல்' இருந்துவிடுதலே சிறப்பு என்கிறான். வனவாசம் புகும்போதும் 'உன் கட்டளைக்கு ஆட்பட்டபடி இருந்த சேனையை பயன்படுத்தாது இருந்தாய். உன் ஆணையை ஏற்று நடக்க ஆயத்தமாக இருந்த யதுகுல நண்பர்களான கிருஷ்ணன், சத்யகி போன்றோரை பயன்படுத்தாமல் இருந்தாய். இவ்வழி பீடு கொண்ட நீ. இனி ஏன் களங்கம் எய்தும் போரை விரும்புகிறாய்' என்று கேட்கிறான். 

(உத்யோக பருவம் - 27/28): கிஸாரி மோஹன் காங்குலி

இதற்கு விடையாக யுதிஷ்டிரன் கூறும் பதில் தான் அவன் பாத்திரத்தைத் துலங்கச் செய்வது. 'இது என்ன நடுநிலை தவறிய பேச்சு சஞ்சயரே? இது என் உரிமை அல்லவா?' என்றெல்லாம் அவன் சொல்லவில்லை.

உரிமை மீது ஆண்மை பாராட்டாதார் சாந்தம்
பொறுமையின் பிணத்தில் பிறந்ததோர் சீதம்

என்று மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை சொன்னது போல வெகுளவில்லை.

மாறாக,  'நல்லொழுக்கத்தம் தீயொழுக்க வேடம் பூண்டும், தீயொழுக்கம் நல்லொழுக்க வேடம் பூண்டு வரும்பொழுதே கற்றோர் ஆராய்ந்து உணர்ந்து நடக்க வேண்டும்' என்கிறான்.
துயறுறு வேளையில் க்‌ஷத்திரிய தர்மத்தைக் கடைபிடித்திலிலிருந்து விலக்கு உண்டு.  அப்போது மட்டும் மறையவர் வழியை நாங்கள் கடைபிடிக்கலாம் அந்நிலை விலகியதும் அதைக் கடைபிடிக்க விலக்கு இல்லை. ஆதலால் என் வழியினின்று நான் விலகுதல் தகாது என்கிறான். "இகவுலகச் செல்வமோ, (நீர் ஆசை காட்டும்) வானுலகச் செல்வமோ - எதுவாக இருந்தாலும் தர்மம் பிறழ்ந்து அதை அடைய விரும்பேன்" - என்கிறான்.

இதை அடுத்து கிருஷ்ணர் செயல்-ஞானம் பற்றி கூறும் அருமையான சிற்றுரை அடுத்த அத்தியாயத்தில் (29ல்) வரும் 

தாகம் எடுப்பவன் நீரை அருந்தும் செயலாலேயே அவன் தாகம் அடங்குகிறது ('நீரால் தாகம் அடங்கும்' என்ற ஞானத்தால் மட்டும் அல்ல). இவ்வாறு தான் காரியம், அதன் காரணமான செயலால், நிறைவு பெருகிறது. எவனொருவன்  'செயலைத் தவிற பிரிதொன்று உயர்ந்தது' என்று எண்ணுகிறானோ, அவனது செயலும், சொல்லும் அர்த்தமற்றவை என்றே எண்ணுகிறேன்.

வில்லிப்புத்தூரார் தருமன் பதிலை இரு பாடல்களில் அடக்கி விடுகிறார். 

அவர் மொழிபெயர்த்தது பாலபாரதத்தை. அதனால் அனேக இடங்களில் விரிவாக இல்லாமல், சுருக்கமாக இருப்பதையே காணலாம்.

அவ்விரு பாடல்களில் ஒன்று இது

நின் அறத்தினின் நீர்மைதன்னை விளங்குமாறு நிகழ்த்தினும், 
மன் அறத்தினை விட்டு, நல் அறம் மன்னர் ஆனவர் முயல்வரோ? 
என் அறத்தினின்நின்று, தெவ்வரை இரு விசும்பினில் ஏற்றினால், 
பின் அறத்தினில் நினைவு கூரும்' எனக் கனன்று, இவை பேசினான்.

(சஞ்சயரே) நீர் நும் துறவு அறத்தை கூறுகிறீர், மன்னர்களான யாம் எம் அறத்தை விடுத்து உமதை பின்பற்ற முனைவமோ? என் அறத்தில் நின்று எதிரிகளை கொன்று வானேற்றிய பின்பே துறவறைத்தைப் பற்றி யாம் எண்ண இயலும். 

'வேட்கை தீர்ந்துழி..துறவறம் காப்ப' என்ற நம்பியகப்பொருளின் அழகான சொல்தேர்வு சொல்வதுபோல வேட்கை 'தீர்ந்து' - பற்று இயல்பாகத் தளரப்பெற்று - வாய்ப்பதன்றோ நிலையான துறவு. பொருளின்ப புருஷார்த்தங்களை மூர்க்கமாக வீசி அடைந்திடுவிடவல்லதோ அது?

சொல்லப்போனால் அனுஷாசன பருவத்தில், பிணமலி போரைக் கண்டு, சோர்ந்து துறவெய்த முனையும்  பீஷ்மாசார்யார் செய்யும் அறிவுரை'க்கு முன்னோட்டமாக இதைக் காணலாம்.

போரில் என்ன நடக்கும் என்று சஞ்சயன் கூறியது நடந்தது. அப்போது சஞ்சயன் கணித்த துன்பத்தை யுதிர்ஷ்டிரன் அடைகிறான். சஞ்சயன் தூது வந்தபோது, போரின் க்ரூரம், வெறும் சாத்தியங்களாகவே வீர யுதிஷ்டிரனுக்கு தெரிகின்றன. ஆனால் போர் நிகழ்ந்ததும், களக்குருதி கண்டதும் அவன் தடுமாறுகிறான். வாழ்க்கையே இது தானே. எதிர்பாராத நிகழ்வுகள் நடப்பதை விட, எதிர்பார்த்தவற்றின் உண்மைத்தன்மை அரையும்போது,  தாமே உணரும்பொழுது, முன்னரே பெரியோர் கூறிய அறிவுரைகளை நாமே நம் கண்டடைவாகக் காணப்பெறுகிறோம். புதுச்செய்தி என்று எதுவுமே இல்லை. 

தர்மம்

ஒரே ஒரு வாழ்க்கை வாழக்கிடைக்கும் இந்த வினோத வாய்ப்பில் சரி/தவறை  தனி ஒரு மனிதன், எவ்வாறு தேர்ந்தெடுப்பது? யாரையும் புண்படுத்தா நடத்தை,  தம் காலத்தில் உயிருடன் உள்ள பெரியோரின் ஆசி, தம் காலத்தாரின் இழிமொழிக்கு அஞ்சல், மிகை எளிமையான பரஸ்பர சமத்துவ செய்கைகள் - இவை எவையுமே ஒரு பூரணமான வழிகாட்டுதலை வழங்காததன் பொருட்டு, உறுதியான நியதிகளின் மேல் அவன் வைக்கும் ஆதாரமான பற்றுதலைப் புரிந்து கொள்ளலாம். அதனால் வரும் அலைக்கழிப்புகள், காழ்ப்புகள், தூற்றுதல், மிக நெருக்கமானவர்களால் கூட புரிந்துகொள்ளப்படாமல் வெறுக்கடுதல்  போன்ற யாவற்றையும் தாங்கினான்.

வில்லிபாரதத்தில், இவ்விடத்தில் சஞ்சயனுக்கு பதில் அளிக்கும் தர்மன், எள்ளல் புன்முறுவல் செய்கிறான், பிறகு சற்று கோபமாகவே பதிலுரை செய்கிறான். வியாசபாரதத்தில் அவன் அப்போதும் சாந்தமே உருவாக பதில் அளிக்கிறான். தர்மப்பற்றுதலின் சாந்தம்; இது என் முடிவு என்று சொல்லாது - இதுவே நான் செய்யவேண்டியது - என்று சொல்வதினால் பிறக்கும் சாந்தம். புரிதலுக்கு உட்படுத்தியே தீருவேன் என்று முரண்டி முனையா முதிர்ச்சியின் முகிழ்வு.


கலிவிருத்தம்

அரியணை கவுரவர் கொள்ள நீரெலாம்
துரியனை தலையென கொண்டு நீங்கினால்
தருமனே அமர்தரு அழிவு நீங்குமே
பெருங்கொலை தவிர்த்திட எதுவும் நியாயமே

திருவிழி உடையவ இதுவும் நீதியோ?
திருவழி மறையவர் வழியி(து) எம்மனோர்
வெருவரு வறுமையை உற்ற போதுதான்
அருமருந் தனையதம் கடமை நீங்குவார்

சரிதவ றெதுவென தேர்ந்தெ டுப்பது
ஒருதனி மனிதனின் முடிவிற் பாலதோ?
வரும்பயன் கருதிசெய் தொழிலில் பூரணம்
ஒருவரும் அடைந்திட போவ தில்லையே

மரித்திடும் நொடிவரை ஏன் எதற்கென
புரிபட விலையென நோதல் இன்றியே
உரிதொழில் அவரவரர் அர்ப்பணிப்புடன்
புரியவே அமைதியும் அறனும் ஓங்குமே

Comments

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

The Legend of Butler Kandappar

Kamal - the writer/director