நிகழ் - பா.வெங்கடேசன்
பொதுவாக எனக்கு புதுக்கவிதைகள் பிடிப்பதில்லை. அதனால் படிப்பதில்லை.
அதனால் தான் - ஐம்பது வயது கடந்துவிட்ட பின்பும் -புது என்ற (என் புரிதலில்) perjorativeஆன முன்னொட்டைப் பிடிவாதமாக பயன்படுத்துகிறேன்.
புதுக்கவிதை எழுதும் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. அடுத்தவர் புதுக்கவிதைகளை படிக்கும் மனநிலையைக் கொஞ்சம் கூடப் புரிந்துகொள்ள முடியவில்லை.
"கவிதை சொல்லவருவது என்ன, என்று தேடாதே, அது தீட்டும் சித்திரத்தை ரசி" என்று பெரியவர்கள் ஆட்காட்டிவிரலை ஆட்டி அறிவுறுத்தியிருக்கிறார்கள். இதைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு "கவிதை என்பது எதையும் சொல்ல வரக்கூடாது, வெறுமனே இருக்கவேண்டுமாக்கும்" என்ற முனைக்குக் கொண்டு சென்று விட்டார்கள்.
ஆனால், தத்ரூப சௌந்தர்யம் மட்டும் எனக்குப் போதுவதில்லை. சொல்வதற்கு ஏதாவது கவிஞனிடம் இருந்தால் நன்றாயிருக்கும் என்றே தோன்றுகிறது. 'கவிஞன் படம் வரைவான், அதைப் பார்த்து கதையே நீயே சொல்லிக்கொள்ள வேண்டியது' என்பதே வரலாற்றின் தீர்ப்பாகி விட்டது என்று கருதுகிறேன்.
"அர்த்தம் சொல்லு" என்று சொக்காயைப் பிடித்து உலுக்கப்படுவதிலிருந்து தப்பிக்க, கவிஞன் "எழுதியபின் கவிதை உங்களுடையது" என்று அரச தோரணையில் சொல்லப்போக, "இரு மகனே" என்றபடி, எழுதிய மை காய்வதற்குள் கவிதையைப் பிடிங்கிச் சென்று அர்த்தம்புனைந்து சிலாகித்துக்கொள்கிறார்கள்.
அல்லது, அப்படி என்று நான் நினைக்கிறேன்.
அதனால்தான், கவிதையின் திசையை நோக்கி ஒரு கும்பிடு போட வேண்டியதாயிருக்கிறது.
ஆனால் எப்போதாவது கீழே கொடுத்திருப்பதைப் போல பிரமாதமான ஒரு கவிதை கிடைத்துவிடுகிறது. இப்படி புலம்பிக்கொண்டே தொடர்ந்து தேடுவதற்குத் திராணியைத் தந்துவிட்டுச் செல்கிறது
நிகழ்
கண் சுருக்கி உற்றுப் பார்த்து
எதிர்ப்பக்கம் கடந்து வந்தென்னைத்
தெரிகிறதா என்றான்.
தன்னைத் தெரியாமல்
மறந்து போனதற்காய்
கோபித்துக் குற்றம் சொன்னான்.
அப்போதெல்லாம் அவனென்றால்
உயிர் எனக்கென்றான்.
இரவில் கூடும்முன்
தவறாது மனைவியிடம் சொல்லவென்று
எங்கள் வகுப்பறைகளையெல்லாம்
நினைவு வைத்திருப்பதாகப் பெருமைப்பட்டான்.
இன்னும் பிடிபடவில்லையா நினைவு
எனக் கேட்டு
கவலையுடன் பிரிந்து போனான்
இந்தக் கணம் இனி ஒருபோதும்
மறவாதிருக்கச் செய்து.
- பா. வெங்கடேசன்.
(எட்டிப் பார்க்கும் கடவுள் - கவிதைத் தொகுப்பு)
Comments
Post a Comment