படிமக்கோவை
ஒரு மாலைப்பொழுதில் நுங்கையிலிருந்து வடபழநி நோக்கி நடந்து கொண்டிருந்தேன். புழுதிக்களேபரத்தைத் தாண்டி கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக ஏறினால் உச்சியில் நின்றபடி மனிதப்புழுக்களைப் பார்க்கலாம். லொயோலா கோபுரத்தைப் பார்க்காமல் கீழே ரயிலிலும், தி.நகரிலும், மேனகா வாழ்த்து அட்டை சமீபக்கட்டிடங்களின் மாடியிலும் என்று அடைத்துக்கொண்டு இருக்கிறவர்களைப் பார்த்தபடி தொடர்ந்து நடந்தால், புழுதிசூழ் பயங்கெழு மாநிலமாம் சேகர் எம்போரிய வாசலில் தரையிறங்கிவிடுவேன். மன்னா போளிக்கடை, ஹாலிவுட் பிரியாணிக்கடை, அம்பேத்கர், நெற்றியில் விபூதி வரைந்து கழுத்துப்பட்டி அணிந்த கைரேகை ஜோதிடர் என்று வரயிருப்பவற்றின் அட்டவணை வேகமாக முன்னால் ஓடியது. மனதின் முன்னோட்டத்தை முறியடிக்கும்படி ரங்கராஜபுரத்தில் காலிட்டுச்செல்லும்படி செல்ல வேண்டும் என்று எண்ணம். பாலத்தின் கீழ் உஸ்மான் சாலையில் போகாத சந்து எதற்குள்ளாவது போயிருக்கலாம். ஆனால் பாலம் ஏறியாகி விட்டது, இனி இறங்கிய பிறகு தான் பாதையை மாற்றிக்கொள்ள முடியும். உஸ்மான் சாலை முடிவில் குளியல் சாதனக்கடையின் பெயர் கில்மா (சின்னி ஜெயந்த் பங்குதாரர் என்பது என் துணிபு), அதைத் தாண்டி ஸ்டால...