படிமக்கோவை
ஒரு மாலைப்பொழுதில் நுங்கையிலிருந்து வடபழநி நோக்கி நடந்து கொண்டிருந்தேன். புழுதிக்களேபரத்தைத் தாண்டி கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக ஏறினால் உச்சியில் நின்றபடி மனிதப்புழுக்களைப் பார்க்கலாம். லொயோலா கோபுரத்தைப் பார்க்காமல் கீழே ரயிலிலும், தி.நகரிலும், மேனகா வாழ்த்து அட்டை சமீபக்கட்டிடங்களின் மாடியிலும் என்று அடைத்துக்கொண்டு இருக்கிறவர்களைப் பார்த்தபடி தொடர்ந்து நடந்தால், புழுதிசூழ் பயங்கெழு மாநிலமாம் சேகர் எம்போரிய வாசலில் தரையிறங்கிவிடுவேன். மன்னா போளிக்கடை, ஹாலிவுட் பிரியாணிக்கடை, அம்பேத்கர், நெற்றியில் விபூதி வரைந்து கழுத்துப்பட்டி அணிந்த கைரேகை ஜோதிடர் என்று வரயிருப்பவற்றின் அட்டவணை வேகமாக முன்னால் ஓடியது.
மனதின் முன்னோட்டத்தை முறியடிக்கும்படி ரங்கராஜபுரத்தில் காலிட்டுச்செல்லும்படி செல்ல வேண்டும் என்று எண்ணம். பாலத்தின் கீழ் உஸ்மான் சாலையில் போகாத சந்து எதற்குள்ளாவது போயிருக்கலாம். ஆனால் பாலம் ஏறியாகி விட்டது, இனி இறங்கிய பிறகு தான் பாதையை மாற்றிக்கொள்ள முடியும்.
உஸ்மான் சாலை முடிவில் குளியல் சாதனக்கடையின் பெயர் கில்மா (சின்னி ஜெயந்த் பங்குதாரர் என்பது என் துணிபு), அதைத் தாண்டி ஸ்டாலோனும், லெக்ஸ் லூகரும் பரிந்துரைக்கும் உடற்பயிற்சி நிலையம். அதற்கும் டாடா உடுப்பி ஓட்டலுக்கும் இடையில் ஒரு கோவில் உண்டு. பாலத்தில் ஏறி நடக்கும்போது இடக்கப்பக்கம் இதெல்லாம் வரும். அதே நடைபாதையில் எதிரில் ஒருவர் நடந்து பாலம் இறங்கிக்கொண்டிருந்தார்.
சாம்பல் அரைக்கைச்சட்டை, அதை கால்சட்டைக்குள் புகுத்துவதைக் கடினமாக்கும் புஷ்டி, இடது தோளில் ஒரு தோல் பை. நடந்து வந்துகொண்டிருந்தவர் கோவிலை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தார். மெதுவாக நடை தளர்த்தி நின்றார்.செறுப்பை கழட்டி, தனக்கு கீழிருந்த கோவிலை நோக்கி, கண்ணை மூடி கும்பிட்டார். அது ஒரு விநோதமானக் காட்சி. நான் பார்க்கும் கோணத்தில் அவர் நின்று கும்பிடுவது தெரிந்தது, கோவிலையோ, சிலையையோ நான் பார்க்கவில்லை. அவர் நின்றுகொண்டிருந்த தளத்தில் தனக்குக் கீழாக இருக்கும் ஒரு விக்ரஹத்தை நின்று வணங்கிக்கொண்டிருந்தார்.
துரதிர்ஷ்டவசமாக இது என் கற்னையில் நிகழாமல், நிஜத்தில் நடந்த ஒன்று.
கற்பனையாக இருந்திருந்தால் இது கவிதைக்கு வாட்டமாக என்ன ஒரு படிமத்தைத் தருகிறது பாருங்கள்: இவ்வுலகம் பொறுப்புகளாலும், அர்த்தம் நீர்த்த முன்செலுத்துதல்களாலும், அவற்றால் ஆட்கொண்ட மனிதர்களாலும் ஆனது. அவர்களுக்கு பிடிப்பாகவோ, அழகியல் தொகுப்பாகவோ, அர்த்தசாத்தியமாகவோ இருக்கும்படி அவன் சமைத்ததே 'கடவுள்' எனும் கருதுகோள். அந்தத் தனி மனிதனை மனித இனத்தில் குறியீடாகக் கொள்வோமானால், கடவுள் என்ற அவனது தயாரிப்பு, அவனை விட கீழ்நிலையில் இருப்பதாகக் கொள்ளலாம். அவன் அதை வழிபடுவது - அவனது அழகியல் வேட்கை, தனிமனிதனின் அறிவுக்குன்றல், தன் படைப்பே தனக்கு விடுதலை தர வல்லது என்ற நம்பிக்கை - என்று பற்பல வகைகளில் வாசிப்புகளை உருவாக்கலாம். உரைநடை ஆக்கலாம், சந்தம் கைவந்தால் மட்டும் கவிதை ஆக்கலாம்.
இப்போது முடியுமா ? நிகழ்தருணத்தை எடுத்துக்கொண்டு அப்படியே எழுதும்போது அதை பொதுமைப்படுத்துதல்களுக்கு உட்படுத்துகிறோம். சாம்பல் நிறச்சட்டைக்காரரை பிரதிநிதித்துவப்படுத்த நான் யார்? முதல்பத்தி குறிப்பிட்ட மனிதப்புழு எள்ளலை விட (என் குறுகல் பார்வையைப் பற்றிய சுயஎள்ளல் என்றும் கொள்ளலாம்), இது எந்த வகையில் மேலானது? பிரதிநிதித்துவப்படுத்துதலில் மேலான/கீழான என்ற பேதமெல்லாம் இல்லை. 'அனேக கல்யாண குணங்கள் பொருந்திய ஒருவர்' என்று ஒரு நபரைப் பற்றி சொன்னாலும் அதுவும் ஒரு பொதுமைப்படுத்துதலே. உண்மையின் விஸ்தீரணத்தை எழுத்தில் அடைக்க முடியாது என்பதால் எதுவுமே எழுதுபவனைக் கூச்சமடையச்செய்யும்.
மேலும் குறியீடுகள் எப்படி வாழ்க்கையில் வரும் ? கற்பனையில் தானே வாழ்க்கையை, கருதுகோள்களை குறிக்கும் வகையாக கலைஞன் சித்தரிக்க முடியும் ? உண்மையில் ஒன்று ஒருவாறு நிகழ்ந்ததென்றால் அதன் உண்மை அதுவே. அது வேறொன்றைக் குறிப்பதாகக் கொள்வது கலைஞனின் வசதிக்கு உகந்ததாய் இருக்குமே ஒழிய அது 'உண்மை' அல்ல.
என் இரண்டாம் பத்தியின் கடைசி வரி கூட பலபொருள் கொள்ளக்கூடியது. ஆனால் இது கதை அல்லவே, நிகழ்வாயிற்றே. அதை அதற்கு எப்படி குறியீட்டு அர்த்தப்படுத்துதல்கள் சாத்தியமாகும் ? மேலும் உண்மையை, வாழ்க்கைநிகழ்வுகளை ஒரு படிமக்கோவையாகப் பார்ப்பதும் ஒரு வகைப் பிறழ்வுதானோ?
நிற்பதுவே, நடப்பதுவே என்று அவற்றை நோக்கி முழுப்பாடல் பாடியவரின் கடைசி வரியை முத்தாய்ப்பாக்கிக்கொள்கிறேன்.
"காண்பது சக்தியாம். இந்தக் காட்சி நித்யமாம்".
Comments
Post a Comment