மலையரையன் பெற்ற மடப்பாவை
சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம், வாழ்த்துக் காதையில்
மலையரையன் பெற்ற மடப் பாவை-தன்னை
நில அரசர் நீள் முடிமேல் ஏற்றினான் வாழியரோ
என்று வஞ்சி நகரத்துப் பெண்டிர் பாடி வாழ்த்துகின்றனர்
கண்ணகிக்கு சிலை வடிக்க, வடக்கே சென்று கல் எடுத்து, அக்கல்லை கனக-விசயரின் தலையில் வைத்துக் கொணர்ந்த, தங்கள் மன்னனான சேரன் செங்குட்டுவனை இவ்வாறு வாழ்த்துகின்றனர்.
இதில் 'மலையரையன் பெற்ற மடப்பாவை' என்ற சொற்றொடர் என்னை ஈர்த்தது.
சிலம்புக்கு சிறப்பான உரை எழுதிய ந.மு.வேங்கடசாமி நாட்டார் அதை இவ்வாறு விளக்குகிறார்.
மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை
நிலவரசர் நீண்முடி மேல் ஏற்றினான் வாழியரோ
-மலையரனாகிய இமவான் பெற்ற இளமை பொருந்திய பாவையை நிலமாளும் மன்னரது நெடிய முடியின்கண் சுமத்தினோன் நீடு வாழ்க.
இமயமலைக் கற்கொணர்ந்து படிவஞ் செய்தமையான், ''மலை யரையன் பெற்ற மடப்பாவை'' என்றார்.
என்று விளக்குகிறார்.
இவ்விளக்கம் எனக்கு நிறைவளிக்கவில்லை.
வடக்கே இமய மலையினின்று கல் எடுத்துப் படிமம் செய்ததால், மலையரையன் பெற்ற, என்ற பொருள் பதிந்துவிடுமா என்ன? படிமத்துக்கான அக்கல்
எந்த பாண்டியன்?
நாம் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டியது, இளங்கோவடிகள் பாண்டியனை இன்னான் என்று பெயரால் அடையாளப்படுத்தவில்லை.
வழக்குரை காதையில், வாயில்காப்போன்: 'செழிய வாழி' என்று மன்னனை வணங்குகிறான்.
செழியன் என்பது பாண்டியர்களுக்கான பொதுப்பெயர். பிற இடங்களில் தென்னவன், பாண்டியன் என்றெல்லாம் தான் அவன் குறிக்கப்பெறுகிறான்.
உரையாசிரியர்கள் தான் அவனை 'நெடுஞ்செழியன்' என்று குறிப்பாக அடையாளப்படுத்துகிறார்கள்.
இளங்கோவடிகளுக்கு அவன் பாண்டியன். அவ்வளவே.
அவன் மனைவி கோப்பெருந்தேவி (கோ - அரசன், அவனது பெருந்தேவி). அவ்வளவே.
கோவலன், கண்ணகி இணையரின் தந்தையர்கள் பெயர்களும் இப்படி பொதுப்பெயர்களே.
மாசாத்துவான் என்றால் (தரைவழி) வணிகம் நடத்துவோரில் பெரியன்.
மாநாய்கன் என்றால் (நாவாய் வழி) வணிகம் நடத்துவோரில் பெரியன்.
இளங்கோ என்பது கூட 'இளைய மன்னன்' என்ற பொருள்பொடும் ஒரு பாத்திரப்பெயர்.
இந்த broad brushstrokesஐ எவ்வாறு நாம் அர்த்தப்படுத்திக்கொள்வது?
சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறாஅர் என்ற தொல்காப்பிய அகத்திணை மரபின் அடுத்தகட்ட நீட்சியோ?
அரசன் ஒரு மக்கள்கூட்டத்தின் அடையாளம், அக்குழுவின் உன்னத அங்கம் என்ற நிலையைக் கடந்து, அரசன் என்பான் அற நிலைநாட்டுநன் (தர்ம பரிபாலனன்) என்ற நிலையை சமுதாயம் நெருங்கத்தொடங்கிவிட்டதை, இக்காப்பியத்தின் உச்சக்காட்சியான: வணிகர்களின் 'நியாயம் கேட்டல்' சித்தரிப்பு உணர்த்துகிறது எனலாம்.
பாண்டியன் மகள்
தெய்வ நிலை எய்திவிட்ட கண்ணகி, பாண்டியன் குற்றமற்றவன் என்றும், தேவர்களின் விருந்தினராக தற்போது உள்ளான் என்றும், அவன் என் தந்தை (போன்றவன்) என்றும் அறிவிக்கிறாள்:
தென்னவன் தீது இலன்; தேவர் கோன்-தன் கோயில்
நல் விருந்து ஆயினான்; நான் அவன்-தன் மகள்
அவளே அப்படிச்சொன்னதால், அவளை வாழ்த்துப்பாடும் வஞ்சிப்பெண்டிர்
பாண்டியன்-தன் மகளைப் பாடுதும்
என்று பாடுகின்றனர்.
மேலும் தெளிவாக, அங்கு குழுமி இருக்கும் ஆயத்தார் இவ்வாறு பாடுகின்றனர்
வானவ னெங்கோ மகளென்றாம் வையையார்
கோனவன்றான் பெற்ற கொடியென்றாள்-வானவனை
வாழ்த்துவோம் நாமாக வையையார் கோமானை
வாழ்த்துவாள் தேவ மகள்
பொருள்: 'இமயத்தினின்று கல் கொணர்ந்து அவளது படிமத்தை செய்வித்ததால், கண்ணகி, நம் மன்னனாகிய சேரனின் மகள் ஆகிறாள். மேலும் 'வையை நதியின் மன்னனாகிய பாண்டியனின் மகள் யான்' என்று அவளே கூறுகிறாள். நாம், நம் சேர மன்னனை வாழ்த்துவோம். பாண்டியனை அந்த தேவ மகளான கண்ணகி வாழ்த்தட்டும்'
மன்னரின் மரபைப் பாடுதல்
இவ்வாறு கண்ணகி 'பாண்டியன் மகள்' என்று வாழ்த்தப்படுவது புலப்படுகிறது.
இதனை அடுத்து தான், இவ்விடுகையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட பாடல் வரி. அந்தப் பாடல் வரிசையில் வைத்தால் மேலும் துலங்கும்
தொல்லை வினையான் துயர் உழந்தாள் கண்ணின் நீர்
கொல்ல, உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ!
வாழியரோ, வாழி, வரு புனல் நீர் வையை
சூழும் மதுரையார் கோமான்-தன் தொல் குலமே!
மலையரையன் பெற்ற மடப் பாவை-தன்னை
நில அரசர் நீள் முடிமேல் ஏற்றினான் வாழியரோ!
வாழியரோ, வாழி, வரு புனல் நீர் ஆன்பொருநை
சூழ்தரும் வஞ்சியார் கோமான்-தன் தொல் குலமே!
இவை அடுத்தடுத்து வரும் இரு பாடல்கள் என்பதை கவனம் கொள்ள வேண்டும்:
முதல் பாடல்: "பழவினையால், துயருற்ற கண்ணகியின் கண்ணீரால் கொல்லப்பட, உயிநர்நீத்த பாண்டியன் வாழ்க! வையை நீரால் சூழப்பட்ட மதுரையினது அரசனான பாண்டியனது பழமையான குலம் வாழ்க!
அடுத்த பாடல் தான் : "மலை அரசன் பெற்ற மடப்பாவையை நில அரசர்களான (கனக விசயன்) நீள் முடி மேல் ஏற்றிய (சேரமான்) வாழ்க. ஆன்பொருநை (அமராவதி) சூழ்ந்து வரும் வஞ்சி நகரத்தை ஆளும் சேரர்களின் பழமையான குலம் வாழ்க.
- "மலையரையன் பெற்ற" என்பதில் "பெற்ற" என்ற சொல் கண்ணகி படிமத்தை வடிக்க, சேரன் எடுத்த கல் இருந்த இமயமலைப்பகுதியை ஆண்ட அரசனுக்குப் பொருந்தாமையையும்
- வையையார் கோன் அவன் தான் பெற்ற கொடி என்றாள் - என்று இதற்கு முன் உள்ள பாடலில் ஆயத்தார் பாடுவதையும்
- "மலையரையன் பெற்ற" என்ற வரிக்கு முந்தைய பாடலில் பாண்டியன் குலத்தை வாழ்த்தி பாடப்பட்டிருப்பதையும்
இமவான் - மலையத்துவச பாண்டியன்
ஹலாஸ்ய மஹாத்மியத்தில் தடாடகை அவதாரக் கதை |
சிலம்பில் (சங்க இலக்கியத்திலும்) மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் பற்றி எந்த குறிப்பும் இல்லை.
திருப்பரங்குன்றம் உள்ளது. கூடலழகர்/ கள்ளழகர் பற்றி குறிப்பு உள்ளதாக கொண்டுகூட்டி பொருள்சொல்லவாவது ஓரிரு இடங்கள் உள்ளன. ஆனால், மீனாட்சி இல்லை.
ஆக, இந்த மலையத்துவச-இமவான்-தடாடகை கதை, சங்கம் மருவிய சிலப்பதிகார காலத்தில் வேர்விடவில்லை.
மலையத்வஜ பாண்டியன் என்று ஒரு அரசன் பாரதப்போரில் பாண்டியன் தரப்பில் போரிட்டு, அஷ்வத்தாமாவால் கொல்லப்படுகிறான். அதைத்தவிற அவனைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. ஹிமவானின் மகளை வேள்வி செய்து பெற்ற புராணக்கதையில் தோன்றும் மலையத்வஜ பாண்டியன் இவன் தான் என்று கூற எந்த இணைப்புக்கதையும் புராணங்களில் இல்லை.
ஆக, மலையரையன் பெற்ற மகள் பாண்டியன் மகளாக ஆனது, முதலில் நிகழ்ந்தது சிலப்பதிகாரத்தில் எனலாம்.
பதிவீழ முலையெறிந்தாள் வாழி!
பதிகாண முலையிழந்தாள் வாழி!
பின்குறிப்பு:
பிற்காலத்தில் தோன்றிய 'கோவலன் கதை' என்ற நாட்டுப்பாடலில், சொக்கரும், மீனாச்சியும் கதாபாத்திரங்களாகவே வருகின்றனர்! கோவலன் -கண்ணகை மதுரைக்கு வந்ததும், 'இந்நகரம் அழியப்போகிறது, வா மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு காசிக்கு போவோம்', என்று மீனாச்சியிடம் சொல்கிறார் சொக்கர்!
References
- சிலப்பதிகாரம் - நாவலர். ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரை
- திருவிளையாடற் புராணம் - நாவலர். ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை
- ஹாலாஸ்ய மஹாத்மியம் - translated by Radhakrishna Sastri
- Picture of the incarnation of Thadādakai - Shaivam.org
- Mahabharatha Karna Parva XX - translated by Kisari Mohan Ganguli
- Kanaka Vijaya sculpture from Poompuhar exhibit - courtesy blogger Maya
- கோவலன் கதை (PDF) - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
Comments
Post a Comment