கற்பில் இரவுக்குறி இடையீடு
பீடிகை :
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு
எனக்கு மிகப்பிடித்த குறள்களில் ஒன்று
நமது மெய்யியல் புலத்தில் வழங்கிவரும் த்ரிவர்க்க பகுப்புகளான: தர்மம்-அர்த்தம்-காமம் (முறையே அறம், பொருள், இன்பம்) ஆகியவை ஒன்றுதிரண்டு வரும் குறள் இது.
இப்போது இக்குறளைக் குடலாபரேஷன் செய்வோம்:
பருண்மையான பொருட்களை உவமையாக்கி கருத்துகளைப் புலப்படுத்தும் உத்தியை நாம் கவிதைகளில் காணலாம் (அகழ்வாரைத் தாங்கும் நிலம் - பொறுமை, தொட்டனைத்து ஊறும் மணற்கேணி - அறிவு).
ஆனால் இங்கு தலைவன் இங்கு விவரிப்பது தலைவியை அணைப்பதை.
அழகிய மாமை நிறத்தாளை, அரிவை பருவத்தாளை அணைத்தல் (பருண்மை) எத்தகையது?
ஒருவன் தனக்கு சொந்தமான இல்லத்தில், தனக்கு உரிய உணவை உண்ணும் இன்பத்தைப் போன்றதாம்.
பொருட்செல்வத்தை, அறத்தின் வழி நின்று நுகர்வதைப் போல இவளை அணைத்தல், என்ற வருணனையின் நுட்பத்தை என்னவென்பது. Propriety, moderation என்ற வழக்கொழி நிலையெய்திய கல்யாண குணங்களைத் தன்னுள் குறுகத் தரித்த குறள்.
சரி இதுக்கென்னப்பா இப்போ?
சொந்த ஸாஹித்யத்துக்குப் பீடிகை ஸ்வாமி
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
நம்மில் எவர்க்கும் எளிதன்று - பெம்மான்
பயக்க அறுவரே பேணினர் மற்று
மயக்குறு மக்கட்கே நாம்
(நேரிசை வெண்பா)
நேர்ப்பொருள்
தம் இல்லத்தில் இருந்துகொண்டு தமக்கே உரித்தானதை உண்பது
நம்மில் எவர்க்குள் எளிது அன்று
(சிவபெருமான்) முருகனைப் படைத்தானே ஒழிய
அவனை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்டிரான அறுவர் அன்றோ?
மாறாக
மயங்கவைக்குமளவு இன்பத்தை தரும் குழந்தைகளுக்கு
(பெற்றோராகிய) நாம் தானே இருக்கிறோம் (பேணுவதற்கு)
துணைப்பொருள்
தம் இல்லத்தில் இருந்துகொண்டு தமக்கே உரித்தானதை உண்பது
நம்மில் எவர்க்குள் எளிது அன்று
இறைவன் உலக உயிர்களைப் படைத்தானே ஒழிய
அவற்றின் இயக்கம் அவற்றின் ஆறறிவினால் ஆனது
(அதில் அவனது நேரடி இடையீடு இல்லை)
மாறாக நாம் படைத்ததாக நாம் மயங்கும் (மிகையாக எண்ணும்)
நம் குழந்தைகளுக்காகவே நாம் இருக்கிறோம் (என்று எண்ணி இடையீடு செய்து கொண்டே இருக்கிறோம்)
------
இவ்வகையாக 'தம் இல் இருந்து', நாம் எங்கே ஐயா 'தமது பாத்து' உண்பது?
Also Ref.
..கே நாம்: நல்வழி 19
மயக்குறு மக்கள்: புறம் 188
Comments
Post a Comment