40

நாற்பதில் கனிவு

மறுநாள் விடுப்பு எடுத்துக்கொள்ள மேலதிகாரியின் அனுமதியைப் பெற்றுக்கொண்டார் ராமாராவ்.

ஹேப்பி ரிடர்ன்ஸ்! உங்களுக்கு நாற்பது ஆகிவிட்டது என்று நான் நினைக்கவில்லை

பேருந்துநிறுத்தத்தை நோக்கி சாலையில் நடந்த ராமாராவ், சற்று நின்றார்; முடிதிருத்தகம் ஒன்றின் வாசலை அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆளுயர கண்ணாடியில் தன்னை பார்த்துக்கொண்டு, “பார்த்தால் நாற்பது போல் இல்லைதான்” என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு நடந்தார்.

வீட்டை விட்டுக் கிளம்பும்போது, மறுநாள் பிறந்தநாள் என்று அவருக்கு நினைவில்லை. ஒரு அலுவல் குறிப்பை எழுதும்பொழுது தான் மறுநாள் ஏப்ரல் 14ம் தேதி என்பதை உணர்ந்தார். 

பொதுவாக பிறந்தநாட்களுக்கு வீட்டில் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் இது ஒரு சிறப்பான நிகழ்வு. நாற்பதைக் கடப்பது முக்கியமான மைல்கல், விடுப்பெடுத்து கொண்டாடத் தகுதியானது தான்.

பாரிமுனையில் தள்ளுமுள்ளைச் சமாளித்து பேருந்தில் ஏறி, கைப்பிடியைப் பற்றித் தொங்கிக்கொண்டார். “நல்லவேளை, ஒருகாலத்தில் குரங்குகளாய் இருந்தோம்” என்று எண்ணிக்கொண்டார். “இல்லையெனில்  அசல் குரங்குச்செயல்களான இடிப்பதும், தொங்குவதும் எப்படி சாத்தியப்படுகின்றன? என்ன ஒன்று, குரங்குகள் கூட்டங்களாக எளிதில் செயல்படுகின்றன” 

நடத்துனர் இவரை வெளியே தள்ள முயன்றார், யாரோ ஒருவர் இவரை குறுக்குவாட்டில் அழுத்திவிட்டு முறைத்தார், இன்னொருவர் இவர் கால்விரல்களில் மீது நிற்க தொடர்ந்து முயன்றுகொண்டிருந்தார்,  ஓட்டுனரோ பேருந்தை தடாலடியாக நிறுத்தியும், கிளப்பியும் பிரயாணிகளின் எலும்புகள் அதிரவைத்தார். பேருந்து செண்ட்ரலில் நின்றதும் ராமாராவ் நெளிந்து, முண்டியடித்துக்கொண்டு இறங்கி, மூர்மார்க்கெட்டை நோக்கி நடந்தார்.

வீட்டில் யாருக்கும் அவர் பிறந்தநாளைப் பற்றித் தெரியாது.  வீட்டார் அனைவருக்கும் பரிசுப்பொருட்கள், பட்டு ஜவுளி, வண்ண ரிப்பன்கள், விளையாட்டுப்பொருட்கள், இனிப்பு பலகாரம் – என்று ஒவ்வொருவருக்கும் வாங்கித் தந்து ஆச்சரியப்படுத்தலாம்.  பிறந்தநாளுக்கு பரிசுகளைப் பெற்றுக்கொள்வதற்கு பதில் பரிசுதருவது புதுமையாக இருக்கும்.  காய்கறி, மளிகைகளும் வாங்கிக்கொள்ளவேண்டும் – ஒரு சிறு விருந்துக்கு.  விருந்து கொண்டாட்டம் அடக்கமாக, குடும்பத்துடன் வைத்துக்கொள்ளலாம். பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல விரும்பாவிட்டால், நாளை கட்டாயபடுத்த வேண்டாம் – என்றெல்லாம் உத்தேசித்தார்.

காய்கறிகளை கடைசியில் வாங்கிக் கொள்ளலாம்” என்று எண்ணியபடி மூர்மார்கெட்டை ஒரு சுற்று சுற்றி வந்தார்.. ஒரு ஜவுளிக்கடைக்குள் சென்று,  பட்டுத்துணிகளை காட்டுமாறு அதிகாரமாக் கேட்டு, அவற்றிலிருந்து மூன்று-நான்கு துணிகளைத் தேர்வு செய்துகொண்டார். பில் தயாராகி வந்து. பொருட்களை சரிபார்த்துக்கொண்டே மணிபர்சைத் தேடி பாக்கெட்டில் கை துழாவினார். அது அதன் இடத்தில் இல்லை.

புதுத்துணிகள் நிறைந்த பையை திருப்பிக் கொடுத்தார். மூர்மார்க்கெட்டை  விட்டு வெளியேறினார்,  மனம் நிலைகொள்ளவில்லை. இலக்கின்றி நடந்து ஒரு பார்க் பெஞ்சைத் தேடி அடைந்து அமர்ந்து, ‘எப்போது மணிப்பர்ஸை கடைசியாக வெளியில் எடுத்தோம்?’ என்று யோசித்தார். பேருந்தில் எவனோ ஒரு பிக்பாட்டை உரசியிருக்கவேண்டும் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். மனம் சோர்வடைந்து.

சுற்றும் முற்றும் பார்கத்தார்: இன்னொரு பெஞ்சில் ஒரு பிச்சைக்காரன் படுத்து உறங்கிக்கொண்டிருந்தான், சில குழந்தைகள் பூங்காவில் வளர்ந்துவரும் பூக்கொத்துகளை மகிழ்ச்சியாக நாசம் செய்து கொண்டிருந்தனர். “எவனோ ஒரு பிக்பாக்கெட் என் நாற்பதாவது பிறந்தநாளைப் பறித்துக் கொண்டுவிட்டான்” என்று, தான் தீட்டிய திட்டங்களை குலைக்கும் தாறுமாறான விதியை எண்ணி கோவமுற்றார்.

நாற்பது தான் மனிதனின் சிறந்த வயது என்பார்கள். எல்லாரும், உடலாலும் மனத்தாலும் முதிர்ச்சி அடையும் வயது. மனிதனின் பழக்கங்களும், விருப்புவெறுப்புகளும் கெட்டிப்பட்டு என்றைக்குமாக இறுகும் வயது. அதிர்ச்சிகளுக்கும், ஆச்சரியங்களுக்கும் இடமின்றி அவனது அனைத்து மனித உறவுகளும் திருத்தமாக வரையறுக்கப்பட்டுவிடுகின்றன.

நாற்பதில் கைகூடும் இக்கனிவுகளை எண்ணிய ராமாராவுக்கு சந்தேகங்களே  மேலோங்கின. “இந்த நாற்பதில், என்ன சாதித்துவிட்டேன்? சராசரி இந்தியனுக்கு  புள்ளியியல் நிபுணர்களால் விதிக்கப்பட ஆயுட்காலத்தை விட பதினாறு ஆண்டுகள் அதிகம் வாழ்ந்தாகிவிட்து. என் முன்னோர்கள் வாழ்நாளில் முக்கால்வாசியை வாழ்ந்தாகிவிட்து.  என்ன சாதித்தேன்?"

கொஞ்சம் முனைந்து பதில்சொல்லிக்கொண்டார்: “நான்கு குழந்தைகள். பெரியவன் கல்லூரியில் வாசிக்கிறான். மனைவி இதுவரை கேட்ட எல்லா நகைகளையும் பெற்றிருக்கிறாள். அலுவலகத்தில் என் பிரிவில் தலைமைப்பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறேன். ….என்ன இன்னும் வாடகை வீடு தான். இன்னும் ஐந்து வருஷத்தில் பெண்ணின் கல்யாணத்தையும், பையனின் வேலையையும் சமாளிக்கவேண்டியிருக்கும். என்னால் முடியுமா?” முதிர்ச்சி அடைந்துவிட்டவன் என்று தான் கருதப்பட்டு, தன்னிடம் சில கடமைகள் எதிர்பார்க்கப்படுவதை எண்ணி சற்றே பதட்டமடைந்தார். 

அவருக்கு இன்றும் நினைவில் இருக்கும் தனது இளம்பிராயத்து பிறந்தநாள், அவர் தந்தை அவருக்கு மினுமினுக்கும் ஜரிகைக்குல்லா ஒன்றைப் பரிசளித்த பிறந்தநாள் தான்; அது அவரது இருபதாவது பிறந்தநாள்., பிஏ முடித்தவுடன் வந்து.  “இதைச் செய்யமாட்டேன், அதைச்செய்ய மாட்டேன்” என்று சூளுரைத்த காலம். “இன்னின்னதைச் செய்யமாட்டேன் என்று நீண்ட அந்த பட்டியலில் இன்று அவருக்கு நினைவு இருப்பது இரண்டே விஷயங்கள்: “என்றைக்கும் கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன்”, “முந்நூறு ரூபாய்ச் சம்பளமும், கண்ணாடி கதவுக்கு அப்பால் ஒரு சுழல்நாற்காலியும் தராத ஒரு வேலையை ஏற்கமாட்டேன்”.

அதன்பிறகு நினைவிருந்தது முப்பதாவது பிறந்தநாள்: மூன்று பிள்ளைகளுக்கு அப்பனாகிவிட்ட பீதி பற்றியது அன்று. எப்படியும் நாற்பதுக்குள் எல்லாம் ஒருமாதிரி தெளிவாகி சமன்நிலை அடைந்துவிடும் என்று நம்பினார்.

இதோ வந்தாகிவிட்டது. ஐம்பதிலோ, அறுவதிலோ எப்படி இருக்கப்போகிறது? எல்லாம் அப்படியேதான் இருக்கும்.

தன்னைப்பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக, பிள்ளைகளைப் பற்றியும், பேரன்பேத்திகளைப் பத்தியும் கவலைப்படுவோம். எதுவும் மாறுவதில்லை. ஜரிகைக்குல்லாவுக்கு சந்தோஷப்பட்ட ராமாராவுக்கும், அலுவலகத்தில் சம்பள-உயர்வு தகவல் கேட்டதும்  மகிழ்வான குறுகுறுப்பு எய்தும் ராமாராவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அடிக்கப்போகும் டியூஷன் வாத்தியாரின் இறுக்கமானப் பிடி தந்த அச்சமும், இன்று மேலதிகாரி கோவமாக அழைக்கும்போதும் ஏற்படும் உணர்வும் ஒன்றுதானே. ஆழமாக தனக்குள் அவர் உணரும் பதட்டமும், துணிவின்மையும் அதே தான். தன் மனைவி மக்களுக்கு என்ன ஆதரவு அளித்திட முடியும் ?

அவர் வளர்ச்சியோ, மாற்றமோ அடையவில்லை என்று அவருக்கு திடீரென்று தோன்றியது. அவர் சுருள்முடி நரைத்ததாலும், உடுத்தும் துணி நீண்டதாலும் அப்படி ஒரு தோற்றமாயை உண்டாகியிருக்கிறது. இதை உணர்ந்ததும்  ஓரளவுக்கு அவர் மனம் ஆசுவாசம் அடைந்தது, இத்தனை ஆண்டுகள் கொண்டிருந்த கருத்துகள் அழிந்தன.  

ஒரே நொடியில் பிறந்தநாள் முக்கியத்துவமும், நிலைத்தன்மையும்  அற்றுப் போனது - விரல்கள் காற்றில் கிழிக்கும் கோடுகள் போல.   வீட்டில் யாரிடமும் தன் பிறந்தநாளைப் பற்றிச் சொல்லவேண்டாம் என்று முடிவெடுத்தார்.

வீட்டைநோக்கி நடக்கையில், மணிப்பர்ஸைப் பற்றிய கவலை மறுபடி அவரை ஆட்கொண்டது. மிஞ்சிப்போனால் இருபதுரூபாயும், சில ரசீதுகளும் இருந்த பழைய மணிபர்ஸ் தான் என்றாலும், தொலைந்துபோனது கேள்விப்பட்டால் மனைவி நிச்சயமாக கலக்கமடைவாள்.  ஒருமுறை கடைவீதிக்கு போய்விட்டு வந்துவிட்டு ஒரு ஐந்து ரூபாய்க்கு இவர் கணக்கு சொல்லமுடியாமல் போனபோது உடைந்து அழுதே விட்டாள். எக்காரணத்தைக்கொண்டும் இன்றைய விஷயம் அவளுக்குத் தெரியக்கூடாது. அவள் மனது அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கவிடுவதே அவளுக்கு தான் தரும் பிறந்தநாள் பரிசாக எண்ணிக்கொண்டார். எப்படி  மணிபர்ஸ் திருடனுக்கு அளித்த பரிசாக ஆனதோ, அதுபோல.

வீட்டுவரை நடக்கவேண்டி இருந்ததால் தாமதமாகத்தான் போய்ச்சேர்ந்தார். “வர வழியில கொஞ்சம் எதிர்பாராத வேலை” என்று விளக்கமளித்தார். மறுநாள் வழக்கம்போல அலுவலகத்துக்குப் போனார்.


“உங்க பிறந்தநாள் ஆச்சா?”

”ஆமாம் சார். எதிர்பார்த்ததை விட முன்னாடியே முடிஞ்சது”

“நல்லதாப் போச்சு. நீங்க இன்னைக்கு அரை நாளாவது வந்தா நல்லா இருக்கும்னு நானே நினைச்சிகிட்டு இருந்தேன். நிறைய வேலை இருக்கு”

“தெரியும் சார்” என்றபடி தன் மேஜைக்கு சென்று அமர்ந்தார் ராமாராவ்.



ஆர்.கே.நாராயண் எழுதிய Fruition at Forty சிறுகதையின் மொழிபெயர்ப்பு

An Indian writer R. K. Narayan


3937363432313029282726

Comments

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

The Legend of Butler Kandappar

Kamal - the writer/director