அறத்தை ஆக்குவது
தொல்காப்பியம் வேற்றுமையிலில் 2ம் வேற்றுமை உருபான ஐ உருபு பொருட்படும் இடங்களை சேனாவரையர் விளக்குகிறார்
காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின்
ஒப்பின் புகழின் பழியின் என்றா
பெறலின் இழவின் காதலின் வெகுளியின்
செறலின் உவத்தலின் கற்பின் என்றா
அறுத்தலின் குறைத்தலின் தொகுத்தலின் பிரித்தலின்
நிறுத்தலின் அளவின் எண்ணின் என்றா
ஆக்கலின் சார்தலின் செலவின் கன்றலின்
நோக்கலின் அஞ்சலின் சிதைப்பின்
....
மேற்குறிப்பிட்ட சொல்லதிகாரம் 72வது நூற்பாவில்
காப்பு (காத்தல்), ஒப்பு (ஒத்தல்)... என 28 இடங்களின் ஐ உருபு பொருள்படுவதைக் கூறுகிறார்
இவை மூன்று வகையான பொருள்கள்
1. இயற்றப்படுவது (i.e. உண்டாக்கப்படுவன)
a. இழைத்தல் -> எயிலை இழைத்தான் (எயில் என்றால் சுவர்)
2. வேறுபடுக்கப்படுவன (i.e. தன் இயல்பில் இருந்து திரிந்தன)
a. அறுத்தல் à நாணை அறுக்கும் (ஏற்கனவே இருந்த கயிறு எனும் பொருளை அறுத்து அதன் இயல்பை மாற்றுவது)
3. எய்தப்படுவன (பொருளின் இயல்பின் மாற்றமே இல்லை, அதை எய்தும் செயல் மட்டுமே நடக்கிறது)
a. நிறுத்தல் à பொன்னை நிறுக்கும் (நிறுக்கும் செயல், பொன்னில் தன்மையை மாற்றவில்லை)
b. btw: மனைவியை காதலிக்கும் என்ற எடுத்துக்காட்டையும் தருகிறார். நுட்பவாசகர் புரிந்துகொள்க!
இவற்றில் ஆக்கல் (ஆக்குதல்) எங்கு வருகிறது?
ஆக்கல் என்பது இயற்றும் செயல் அல்ல.
அது வேறுபடுக்கப்படும் செயல் என்கிறார் சேனாவரையர்.
இல்லாத ஒன்றை யாரும் ஆக்குவதில்லை. இருப்பவற்றின் தன்மையை மாற்றி அக்குகிறோம்.
இதற்கு சேனாவரையர் கூறும் எடுத்துக்காட்டு சுவாரஸ்யமானது: அறத்தை ஆக்கும்.
மிக எளிதாக அவர் ஒரு பருப்பொருளை எடுத்துக்காட்டாகக் கூறியிருக்கலாம் (e.g. சோற்றை ஆக்கும்) ஆனால் அவர் அதைச் செய்யவில்லை.
சொல்லப்போனால் அந்த எடுத்துக்காட்டை சேனாவரையரே வேறொரு இடத்தில் அழகாகச் சொல்லியிருக்கிறார்.
சொல்லதிகாரத்தின் முதல் இயல்: கிளவியாக்கம்
கிளவி என்றால் சொல். சொற்களை ஆக்குவதைப் பற்றிய இந்த இயலுக்கு விளக்கம் தரும்பொழுது இவ்வாறு கூறுகிறார்:
வழுக் களைந்து சொற்களை ஆக்கிக்கொண்டமையான் இவ்வோத்துக் 'கிளவியாக்க' மாயிற்று. ஆக்கம்-அமைத்துக்கோடல்; நொய்யும் நுறுங்கும் களைந்துஅரிசி அமைத்தாரை அரிசியாக்கினார் என்ப வாகலின். சொற்கள் பொருள்கள் மேல் ஆமாறு உணர்த்தினமையால் கிளவியாக்க மாயிற்று எனினும் அமையும்
அதாவது, அரிசியை அக்குதல் என்றால் என்ன?
நெல்லை அதன் இயல்பிலிருந்து வேறுபடுத்தி, நொய்யையும் நுறுங்கையும் களைந்து எடுத்து ‘ஆக்கப்படுவது’ அரிசி.
அதுபோல வழுவான சொற்களை நீக்கி, நல்ல சொற்களை ஆக்கிப் பொருள் கொள்வதால் இந்த இயல் (ஓத்து) ‘கிளவியாக்கம்’ எனப் பெயர் பெற்றது.
அறம்
மேற்சொன்னது போல ‘ஆக்கல்’ என்ற வினைக்கு எடுத்துக்காட்டு தரும்பொழுது, மிகச்சிறப்பான விளக்கப்பட்ட அரிசி ஆக்கல் என்ற பருண்மைப்பொருளைக் (physical object) கூறாமல், சேனாவரையர் ‘அறத்தை ஆக்கும்’ என்று ஒரு கருத்தை (concept) எடுத்தாட்டுக்காகக் கூறியிருக்கிறார்.
இவருக்கு முன்னர் உரை எழுதிய இளம்பூரணர், இவ்விடத்தில் ‘ஊரை ஆக்கும்’ என்று பருண்மைப்பொருளையே எடுத்துக்காட்டாய் கூறியுள்ளார். மூன்று வகை பொருள்வகைகளை அவர் விரிக்கவில்லை. சேனாவரையர் தான் இந்த நுட்பமான பாகுபாடைச் செய்கிறார்.
இங்கு சேனாவரையர் உத்தேசிக்கும் அறம் எது?
வாழ்நெறியா, அதன்பால் நின்று செய்யும் (ஈகை போன்ற) செய்கைகளையா?
செய்கைகள் பருண்மைப்பொருள் சார்ந்தவை. பொருட்களின் இயல்பிலிருந்து திரித்திச் செய்யும் ‘வேறுபடுக்கப்படும்’ செயல்களாக அவற்றைப் புரிந்துகொள்வது எளிது.
அதாவது, ‘அறம் செய்தான்’ என்பதை ‘தானம் செய்தான்’ என்று புரிந்துகொண்டால், தன் பொருளிலிருந்து சிலவற்றை பிறருக்குத் தருவதால் மொத்தப்பொருளின் தன்மை சற்று வேறுபடுக்கப்படுகிறது, என்பது சற்று வருந்தி பொருள்கொள்வதுபோல உள்ளது.
மாறாக அறத்தை ஒரு கருத்துப்படிவமாக உத்தேசித்தார் என்பதே முறையான பொருள்கோளாகத் தோன்றுகிறது.
அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் வள்ளுவர்
- அறத்தின் ஊங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு
- அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை
என்றதும் இணைத்து நோக்கத்தக்கது.
அறம் என்பது தனியொரு செயலல்ல. செயல்களைச் செலுத்தும் நெறி.
அறம் நாம் இயற்றக்கூடியதல்ல.
அறம் நாம் எய்தவேண்டிய ஒன்றும் அல்ல.
அது ‘நொய்யும் நுறுங்கும் களைந்து அரிசி ஆக்குவது’ போல நம்மால் வேறுபடுக்கப்படவேண்டியது.
Comments
Post a Comment