ஒரு தேரில் இரு கிருஷ்ணன்கள்
உத்யோக பர்வத்தில் ஒரு இடம்.
பார்த்தனுக்கு சாரதியாக இருக்க கிருஷ்ணன் சம்மதித்துவிட்டான் என்ற செய்தி அறிந்த த்ரிதராஷ்ட்ரர் புலம்புகிறார்:
ஒரு ரதத்தில் இரு கிருஷ்ணன்களும் (அர்ஜுனனும் கரிய நிறத்தவன் என்பதால் அவனுக்கும் கிருஷ்ணன் என்ற பெயர் உண்டு), காண்டீபமும் சேர்ந்துவந்தால் நிகழப்போகும் தாக்குதலை யாராலும் தாங்கமுடியாது என்பது எனக்குக் கண்கூடாகத் தெரிகிறது, ஆனால் இதைக் க்கௌரவர்கள் உணரவில்லையே, என்று அங்கலாய்க்கிறார்.
- ஒரு ரதத்தில் இருகிருஷ்ணன்களும், நாருள காண்டிவமுமாகிய - மூன்று விசைகளின் இணைவைக் கேள்வியுற்றோம்.
- அதுபோன்ற வில்லோ, வில்லாளியோ, பாகனோ நாம் கொண்டோமில்லை.
- மடமைமிகு துரியோதனாதிகள் இதை அறிந்தாரில்லை.
- ஸஞ்சயா, மின்னல் இடி தலையில் விழுந்தாலும் ஏதாவது மிஞ்சும், ஆனால் கிரீடீ (அர்ஜுனன்) செலுத்தும் அம்போ எதையும் மிச்சம் வைக்காது.
- தனஞ்சயனின் ஶரமழைகள் உடல்களிலினின்று தலைகளைக் கொய்வதை இப்போதே என்னால் காணமுடிகிறது
- காண்டீபம் பற்றவைக்கும் அம்புத்தீ, சமர்க்களத்தில் என் மகன்களைச் சூழ்வதை இப்போதே என்னால் காணமுடிகிறது
- ஸவ்யஸாச்சியின் (அர்ஜுனன்) தேர் எதிர்பட சிதறியோடும் பல்வகைப் படைகளை இப்போதே என்னால் காணமுடிகிறது
- பெருந்தீ, காற்றோடு வளர்ந்து, காய்ந்த சரகுகளையும், புற்களையும் பருகிப் பெருகுவதை புகழ்மிக்க அர்ஜுனாயுதங்கள் என் படைகளை உண்டு அழிக்கும்.
- ஊழின் படி நடக்கும் கூற்றுவன் போல, அமரிடை எதிர்ப்படும் பெரும்பகைவனாக க்ரீடி உமிழும் வாளிகளை, யாராலும் எதிர்க்கவியலாது.
அருமறையத னுருபயனென திருமகளுறை கரியும்
திருநிறையெழில் பரிரதமதை விரட்டிடபகை மருளும்
இருகறுநிற வரைநெருங்கிட விரிசிலைதழல் பருகும்
சருகெனவிழு சரமழையெதிர் அரிபடையது சிதறும்
வகை: கலிவிருத்தம்
சந்தம்: கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்கனி புளிமா
ஓசை: ஏந்திசை துள்ளல்
வண்ணம்: இயைபு வண்ணம் (உத்தேசமாக!)
பதம் பிரித்து
அரு மறை அதன் உருபயன் என திருமகள் உறை கரி உந்து
இருநிறை எழில் பரி ரதம் அதை விரட்டிட பகை மருளும்
இரு கறுநிற வரை நெருங்கிட விரி சிலை தழல் பருகும்
சருகு என விழு சர மழை எதிர் அரி படை அது சிதறும்
- அருமையான மறைகளால் உரும் பயனான, திருமகள் (நெஞ்சில்) உறையும் ஆண் யானை போன்றவன் (திருமாலான கிருஷ்ணன்) உந்த
- இருநிறை- பரிபூர்ண நலங்களுக்கு இருப்பிடமான குதிரைகள் (பூட்டப்பட்ட) தேரை வேகமாக ஓட்டி வருவதைக் (கண்டாலே) பகைவர்கள் (க்கௌரவப்படை) மருள்வர்
- இரண்டு பெரிய கருப்பு மலைகள் ஒன்றுக்கு ஒன்று நெருக்கமாக இருக்க (அல்லது) இந்த இரண்டு கருப்பு மலைகளை (எதிரிகளான க்கௌரவப்படையை) நெருங்கும்போது, விரிந்த வில்லான காண்டீபம், தழலால் பருகப்படும்
- (காய்ந்த) சருகுகளைத் போல(த் தீப்பிழம்புகளாக) அம்பு மழைகளைப் பொழிய எதிர்நிற்கும் பகைவர்கள் (க்கௌரவர்கள்) படை சிதறிவிடும்.
Comments
Post a Comment