யாரென்று தெரிகிறதா
வ்யாஸபாரதத்தில் சிறப்பாக சில இடங்களில் ‘க்கூட ஶ்லோகங்கள்’ வரும்.
அதாவது நேராக படித்தால் பொருளற்ற சொற்றொடர் போலவும், பிரித்துப் படித்தால் பொருளுணரும்படியாகவும் அமைக்கப்பெற்ற ஶ்லோகங்கள்.
இவை பிரிமொழி ஶ்லேஷத்திலிருந்து (சிலேடை) வேறுபட்டவை. சிலேடையில் இருவேறு பொருள்கள் வரும். ஆனால் (நான் புரிந்துகொண்டவரை) க்கூட ஶ்லோகத்தில் மறைபொருள் புரியாவிடில் மிஞ்சுவது பொருளற்ற சொற்றொடரே.
இவ்வாறு அமைத்ததற்கு ஒரு அழகான புராண விளக்கம் உண்டு.
வ்யாஸர் சொல்லச்சொல்ல எழுத்திலாக்குவதற்கு ஒப்பிய விநாயகர் வைத்த ஒரே நிபந்தனை: புரியவில்லையென்றாலொழிய எழுத்து வேகம் குறையாது, ஆனால் தான் எழுதும்வேகத்துக்கு வ்யாஸர் சொல்லவேண்டும் என்பதே, அது.
(Painting by Sri Keshav)
அதனால் வ்யாஸர், தனக்கு சிந்தித்துத் தொகுத்துக்கொள்ள நேரம்வேண்டி, விநாயகவேகத்தை மட்டுப்படுத்த எழுதியவை இந்த கூட ஶ்லோகங்கள் என்பர்.
அவ்வகை ஶ்லோகங்களில் ஒரு ப்ரபலமானது:
நதீ³ஜ லங்கேஶவனாரிகேதுர்னகா³ஹ்வயோ நாம நகா³ரிஸூனு:
இது சிறப்புறுவது, கதையில் இது தோன்றும் கணத்தால்:
விராட பர்வத்தில் வெட்சிப் போர்க்களத்தை விட்டு உத்தரகுமாரன் தப்பி ஓடுகிறான்.
அவனைக் களத்துக்குத் திரும்புமாறு ப்ரஹண்ணளையாக வேடம் புனைந்திருக்கும் அர்ஜுனன் துரத்தி ஓடுகிறான்.
பேடியை சாரதியாகக் கொண்டு வெட்சிக்களம்புகுந்த இளவரசன் புறமுதுகிட்டு ஓடுகிறான். சாரதியானவள் அவனைத் துரத்தி போர்க்களத்துக்கு திரும்புமாறு கேட்பதைக் க்கௌரவ சேனை வேடிக்கையாகக் காண்கிறது.
போர் நடக்கும் இடம் ஊரின் எல்லை.
அங்குள்ள சுடலையை அடுத்துள்ள வன்னிக்காட்டில் காண்டீபம் முதலான போர்க்கருவிகளை மரத்தில் ஒளித்துவைக்கப்பட்டிருக்கின்றன.
தானே அர்ஜுனன் என்று ப்ரஹண்ணளை உத்தரகுமாரனுக்கு அறிவித்து, அப்போர்கருவிகளை எடுத்துத் தருமாறு பணிக்கிறான்.
இனி போர்க்களத்துக்குத் திரும்பப்போவது உத்தரகுமாரன் அல்ல, அர்ஜுனனே என்பதை குறிப்புணர்த்துமாறு, அவன் தேர்க்கொடியில் ஹனுமன் தோன்றுகிறான்.
இவை எவற்றையும், பயந்தோடிய உத்தரனைக் கண்டு கொக்கரித்து நிற்கும் க்கௌரவப்படை உணரவில்லை.
நிகழ்ந்துவிட்ட மாற்றத்தை, நிகழப்போகிற அதகளத்தை துரோணர் முதலில் உணர்ந்தார்.
அதை பீஷ்மருக்கு குறிப்புணர்த்தும் விதமாக இந்த ஶ்லோகம் சொல்லப்படுகிறது.
நதீ³ஜ லங்கேஶவனாரிகேதுர்னகா³ஹ்வயோ நாம நகா³ரிஸூனு:
இதன் முதல் பாதி
நதீ - ஆறு
ஜலங் – ஜலம் à நீர்
கேஶவ – கேசவன் (திருமாலின் நாமம்)
னாரி – நாரி (பெண்)
கேதுர் - கொடி
ஆறு, நீர் , கேசவன், பெண், கொடி – என்ற சொற்குவியல். பொருளில்லை.
ஆனால் இதை வேறுமாதிரி அலகிட்டால்
நதீ³ஜ லங்கேஶ வனாரி கேது
நதீஜ – நதியில் ஜனித்தவனே (கங்கையில் ஜனித்த காங்கேயர் பீஷ்மருக்கான விளி)
லங்கேஶ - இலங்கேஸ்வரனான (ராவணின்)
வனாரி à வன + அரி (பகைவன்)....இலங்கேஶ்வரனின் அஶோகவனத்தின் பகைவனான ஹனுமன்
கேது -> கொடி
அதாவது: கங்கை மைந்தரே, இலங்கேஶ்வரனின் அஶோகவனத்தை அழித்த ஹனுமன் அக்கொடியில் (வந்துவிட்டான் பாறீர்)
னகா³ஹ்வயோ நாம நகா³ரிஸூனு:
நகராத மலைகளின் பகைவனான (இந்திரனின்) மகனான, மரத்தின் பெயர்கொண்ட (அர்ஜுனன்) வந்துவிட்டான்
முன்பொருகாலத்தில் பொன்மலையான மைனக்கின் சகோதரமலைகள் 99 மலைகளின் சிறகுகளை அறுத்து அவை அசையாது ஒரே இடத்தில் இருக்கும்படி செய்தான் இந்திரன். அதனால் அவன் மலைகளில் பகைவன். அவனது மகனான, மருதமரமான அர்ஜுன மரத்தின் பெயரைக் கொண்டவன் வந்தான்.
இவ்வாறு தனது பெருவில்லாளி மாணவனைப் பதிமூன்று வருடம் கழித்துக் கண்ட களிப்பை, இந்தச் செருகளத்திலும் ஒத்துணரக்கூடிய பீஷ்மரிடம் மறைமொழியில் தெரிவிக்கிறார் துரோணாசார்யார்.
இது போர்க்களமும் (கதைக்களமும்) மாறும் தருணம்.
துரியோதனாதிகளை அர்ஜுனன் நேருக்கு நேராக சந்திக்கப் போகும் முதல் கணம்.
வில்லிபாரதத்தில் (அது பாலபாரதத்தை முதல்நூலாகக் கொண்டு எழுதியபடியால்) இந்தக்கணம் விரிவாகப் பாடப்படவில்லை.
கங்கைமக நங்கையுரு வங்கொளரி தங்களவன்
லங்கைவனம் பங்கமுற பொங்கிடுகு ரங்குகொடி
தங்குரதன் தங்கமலை பங்கர்கெடு துங்கனது
அங்கனிவன் கங்குபொதி வெங்கணைக ளிங்கினியே
(கலிவிருத்தம்)
பதம் பிரித்து
கங்கை மக! நங்கை உருவம் கொள் அரி தங்களவன்
லங்கை வனம் பங்கம் உற பொங்கிடு குரங்கு கொடி (தங்கும் ரதன்)
....தங்கமலை பங்கர் கெடு துங்கனது
அங்கன் இவன் கங்குபொதி வெங்கணைகள் இங்கு இனியே
- கங்கை மகனானே பீஷ்மரே நங்கை (பேடி) உருவத்தில் உள்ள எதிரி தங்கள் (வழி) வந்தவனே
- இலங்கையை பங்கம் செய்யுமாறு பொங்கி (எழுந்த) குரங்கைக் கொடியில்
- தங்கும் தேரை உடையவன். மைனாக் என்ற ஹிமயமலையைத் தவிற அம்மலையில் சகோதரர்களான எல்லா மலைகளின் சிறகுகளை அறுத்த உயர்ந்தவன் (இந்திரனின்)
- மகன் இவன். கங்குகள் பொதிந்துள்ள வெம்மையான (அவனது) கணைகளே இனி (இக்களத்தில்) பறக்கப்போகின்றன
Comments
Post a Comment