எட்மண்ட் பர்க்க்


சமீபத்தில் தாவித்தாவி மீள்படித்துக்கொண்டிருப்பது எட்மண்ட் பர்க்கின்  'ஃப்ரெஞ்சுப் புரட்சி பற்றி சில சிந்தனைகள்'.கன்ஸர்வேடிவ் வட்டங்களில் மூலநூலாகக் கொண்டாடப்படுவது இந்நூல்.

ஃப்ரெஞ்சுப் புரட்சி, ஆங்கிலகத்திலும் பரவலாகப் புளகாங்கிதப் பாராட்டுகள் பெற்றுக்கொண்டிருந்தபோது 'இதன் விளைவுகள் மோசமாக இருக்கும்' என்று தீர்க்கமாக சொன்னார் பர்க்க். இதனாலேயே புறக்கணிக்கப்பட்டார்.


எட்மண்ட் பர்க்க்

சொல்லப்போனால், அறிவொளிகாலத்து 'தனிமனிதத்துவத்தை' அப்படியே ஒத்துக்கொண்ட அரசியல் சிந்தனையாளர்களுக்கு மத்தியில், அதன் ஆகர்ஷணத்துக்கு ஆட்படாத பர்க்கைத் தான் அக்காலத்து  'புரட்சிகர' எதிர்சிந்தனையாளர் என்று சொல்லலாம். 

நீங்கள் ஒரு  'புதியன விரும்பு' ஆசாமியாக இருந்தால், எட்மண்ட் பர்க்க் உங்களை சர்வநிச்சயமாக எரிச்சலடைய வைப்பார். பர்க்க் உங்களை 'உடைத்துப்போட்டு மீள அடுக்கச் செய்யும்' சிந்தனையாளர் அல்லர். உங்களுக்குள் அங்கும் இங்குமாக மிதக்கும், தெளிவற்ற சிந்தனைகளுக்கு சட்டகம் அளிப்பவர். ஒருவித ஏற்பு மனநிலை முன்னரே உள்ளவர்களுக்குத் தான் பர்க்க் பிடிக்கும் என்று கூட சொல்லலாம்.  'எங்கும் புரட்சி, எதிலும் புரட்சி', 'முடிவிலா புரட்சி' என்ற  தொடர்தாக்குதலால் சிதறிக்கிடக்கும் நம் எண்ணங்களையும்,  தயக்கங்களையும்  தர்க்கச்சரடில் கோர்த்தளிப்பது அவரது ஆதார வசீகரம்.  


பர்க்கை இன்று பலர் சொந்தம் கொண்டாடுகின்றனர். 'அவரவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி, இவரிவர் எம்பெருமான்' என்று சிலாகிக்க, யார் தான் இந்த பர்க்க் என்று நாம் குழம்பிவிடக் கூடும். இதற்கு பல காரணங்கள் தருபவை அவர் எழுத்துக்கள்  (இதைப் பற்றி நியூயார்க்கரில் ஆடம் காப்நிக் எழுதிய ஒரு செறிவான நீள்கட்டுரை). 

வாரன் ஹேஸ்டிங்க்ஸ்


எட்மண்ட் பர்க்க், பிரித்தனியாவிலிருந்து அமெரிக்க விடுதலையை ஆதரித்தார்,  பிரித்தானியாவில் கத்தோலிக்கர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை எதிர்த்த்தார். 

கிழக்கிந்தியக் கம்பெனியின் வங்காள நிர்வாகி வாரன் ஹேஸ்டிங்க்ஸ் செய்த குற்றங்களுக்காக அவருக்கு எதிராக பிரத்தானிய நாடாளுமன்றத்தில் வழக்காடினார். அதன்வழி 'இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனியின் செயல்பாடு' இங்கிலாந்து மக்களிடையே பேசுபொருளானது. காலனிகள் பற்றிய அறம்சார் அக-விமர்சனத்தின் காத்திரமான தொடக்கமாக இன்றளவும் பார்க்கப்படுவது இந்த முன்னெடுப்பு.


அப்படிப்பட்ட பர்க்க் ஏன், தன் சமகால அரசியல் சகாக்களைப் புளகாங்கிதம் அடையச்செய்த  ஃப்ரெஞ்சுப் புரட்சியை விமர்சித்தார்?

இதை விளக்க முயல்பவர்கள், பர்க்கின் நிலைப்பாடுகளின் பரிணாமவளர்ச்சி, சந்தர்ப்பவாத மேட்டிமை என்றெல்லாம் பல வாதங்களை முன்வைக்கிறார்கள். ஆனால் அவர் நிலைப்பாடு தெளிவாகவும், சீராகவும் இருப்பதாகவே தோன்றுகிறது.

அச்சிந்தனைகளின் ஆதாரக்கரு இது தான்: சமுதாயம் பற்பல நூற்றாண்டுகளாக, மனிதமனத்தால் கிரகிக்கவே முடியாத பல விசைகளால் செலுத்தப்பட்டு, சிடுக்கின்மேல் சிடுக்காக பதிந்து மேற்செல்கிறது. அரூபமான சித்தாந்தங்களின் பெயரால் மேற்கொள்ளப்படும் எந்த புரட்சியும், ஒற்றைக்கணத்தில் தன்னை வரலாற்றிலிருந்து அறுத்துக்கொண்டு புதிதாக வார்த்துக்கொள்ள முனையும் எதுவும், வெகுவிரைவில் ஒரு சின்னஞ்சிறு குழுவின் கையிலும், பின்னர் தனிநபர் கையிலும் சிக்கி, பெருங்காவுகள் வாங்கித்தான் சீரழியும். இதுதான் பர்க்கின் தரப்பு. 

ரொபெஸ்பியெர்

ஃப்ரான்சில் ஜகோபின்களின் கொள்கைப் புரட்சி ஒரு நெபோலியனுக்குத் தான் கட்டியம் கூறுயது, பின் லெனின், மாவோ. போல்போட் என்று விரியப்போகிறது என்று துல்லியமான கணித்த தீர்க்கதரிசியாக அவரை அதிசயித்துப் பார்ப்பதை அவரே சட்டை செய்ய மாட்டார். 

மனிதனை பேரறிவளானாக, பேரன்புக்காரனாக எல்லாம் பார்க்காமல் இருந்தாலே போதும், சந்தேகத்தையும், தயக்கத்தையும் மதித்தாலே போதும் என்பார் அவர். 


சமுதாதய இயங்கியலைப் பற்றிய மனிதனின்  எல்லா கோட்பாடுகளும்  வெறும் அனுமாமனங்கள் மட்டுமே; திட்டவட்டமாக எதையும் கூறிவிட முடியாது. கோட்பாடுகள் எவற்றைக் கொண்டும் சமுதாயத்தின் இன்றைய நிலையை முழுவதுமாக புரிந்துகொண்டுவிட்டதாக எண்ணுவது மிகையான நம்பிக்கை, அது சந்தேகத்துக்குரியதே. அப்புரிதலின் போதாமை எந்த ஒரு தனி மனிதனின்/கொள்கைச்சாய்வின் போதாமை அல்ல, தனிமனிதத்துவத்தின் போதாமை.  இது தான் பர்க்கிய சிந்தனையின் சுருக்கம்.

தனிமனிதத்துவத்துக்கு மிகைமுக்கியத்துவம் அளித்து, அவனது அறிவால்/கொள்கையால் 'புதியதோர் உலகம் செய்வோம்' பிரக்ஞைபூர்வமாக படைக்கமுனையும் எந்த முயற்சியையும் பர்க்க் சந்தேகித்தார்.

'விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் - என்ற முழக்கம் குதூகலகம் அளிக்கும் வெற்று
அறிவுமுழக்கமே' என்றும்,  'ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சியில் அதை தொடர்புபடத்தாவிட்டால் அதன் இயல்பான முரண்கள் வெடித்தே தீரும்' என்றும் அவர் கருதினார். 


அதென்ன அடிப்படை முரண்கள்: விடுதலை என்ற கருத்தை தனிநபர்களின் திறன்வெளிப்பாடு என்றுகொண்டால் முதலில்  முகத்தில் அரையும் உண்மை மனித இயல்பு சமமில்லாது என்பது. சமமில்லாதவர்களை சமமானவர்களாக நடத்த தேவைப்படுவது சகோதரத்துவம். ஆனால் பண்பாட்டுச் சகோரத்துவம் போல அல்லாது ஃப்ரெஞ்சுப் புரட்சியாளர்கள் முன்வைப்பது ஒரு கொள்கைசார் சகோதரத்துவ கற்பிதம். அதன் போதாமை வெகுசீக்கிரம் தெளியும், அடக்குமுறை மேலோங்கி விடுதலை கறையும் என்று உறுதிபட கணித்தார் பர்க்க்.

அகீல் பில்க்ரமி
ஃப்ரெஞ்சுப் புரட்சிகோஷத்தின் இந்த அடிப்படைப்புள்ளிகளுக்கு இடையே உள்ள இந்த இறுக்கத்தை காந்தியச் சிந்தனை எப்படிக் கையாள்கிறது என்பதை பற்றி பேராசிரியர் அகீல் பில்க்ரமி, ஃப்ரண்ட்லைனுக்கு அளித்த இப்பேட்டி சுவாரஸ்யாமானது. படிக்கத் தந்தமைக்கு நன்றி: ஈக்வானிமஸ்





எட்மண்ட் பர்க்கை நடைமுறைவாதி என்று வகைபடுத்துவது கொள்கை மேட்டிமைவாதிகளின் வழமை. 'பச்சை சந்தர்ப்பவாதி' என்பதற்கு இடக்கரடக்கல் அது. 

அவரை மரபுவாதி என்று அடையாளப்படுத்துவது  மற்றொருவித குறுக்கல்.  'பழைமை எக்காரணத்தின் கொண்டும் பேணப்படுதல் வேண்டும்' என்ற குற்றச்சாட்டுத்தொனி,  'மரபுவாதம்' என்கிற முத்திரைக்குள் பொதிந்துவைக்கப்பட்டது. பர்க்க் அதற்குப் பொருந்தார்; அவர் மாற்றத்தை எதிர்த்தவர் அல்லர். 'தன்னை நியாயப்படுத்திக்கொள்ளத் தேவை மாற்றத்திற்கு தான் உண்டு, இயல்புநிலை (status-quo)க்கு அல்ல' என்பதே  அவர் நிலைப்பாடு.

மாற்றம் நிகழ்ந்தேதான் தீரும், ஆனால் அதை முளையிலேயே அள்ளி அணைத்துப் போற்றவேண்டிய கடமை எவருக்கும் இல்லை, 'இயல்பாக அது அதன் கதியில் வந்து மக்களை ஆகர்ஷித்தால் உண்டு' என்பது போன்ற நிலைப்பாடு அவருடையது.  மனிதனால் முனைந்து முடுக்கி துரிதப்படுத்தும் மாற்றங்களைக் காட்டிலும் மிதகதியில் ஏற்புமனநிலையை பரவலாக வளர்த்து, அதில் வேர்பிடித்து எழும் மாற்றங்களே நிலைக்கும் என்றார். 

------------------------

A Sidenote:

காந்தியவாதிகளின் முதன்மையான நடைமுறைவாதியான ராஜாஜியை, எட்மண்ட் பர்க்க் வெகுவாகக் கவர்ந்தது ஆச்சரியமில்லை.

 எதிலும் நாலுகால்பாய்ச்சலாக (நேரு, அம்பேட்கர்) முன்செல்லாது,
மரபுத்தொடர்ச்சியைப் பின்படையாக வைத்துக்கொண்டு  (traditional rearguard) முன்நகர்வுகளைப் பற்றி சிந்தித்தவர் ராஜாஜி. தன் சமகாலத்தவர் பலர் கணிக்கத் தவறிய போக்குகளை முன்கணித்தவர் (1942  படுதோல்வி, பாகிஸ்தான்), முன்பின் முரண் நிலைப்பாடுகளுக்காக விமர்சிக்கப்பட்டவர்  (ஹிந்தி),  தொடர்ச்சியுடன் கூடிய மாற்றத்தை விரும்பியவர் (கல்வி),  தார்மீக சமாசாரங்களில் கூட நடைமுறைவாதத்தை முதன்மைப்படுத்தியவர் (ஹரிஜன் முன்னேற்றம்), சந்தர்ப்பவாதி என்ற முத்திரையைப் பெற்றவர், ஒரு கட்டத்துக்குமேல் அரசியல் சகாக்களால் ஒதுக்கப்பட்டவர் - என்று கிட்டத்தட்ட ஒருவருக்கொருவர் இணையான வாழ்சரித்திரம். ட்டி.ஆர்.விவேக் போன்ற ராஜாஜி ஆர்வலர்கள் இதை விரித்து எழுதலாம். 

-------------------------------------

'பண்பாட்டுத் தொடர்ச்சி' என்ற சொற்றொடரை, அதைப் பயன்படுத்துபவரை சந்தேகத்தோடு பார்ப்பது  இன்றைய நிலை. 

'தொன்று' என்பது எல்லார்க்குமானதா?
யாருடைய பண்பாட்டுத் தொடர்ச்சி பேணப்பட வேண்டும்?
இதற்கெல்லாம் எளிதான பதில்கள் கிடையாது. உறுதியான 'பதில்கள் உள்ளன' என்று சொல்பவர்களை சந்தேகிக்கவேண்டும் என்பதே பர்க்கின் வாதம்.

'இன்றிலிருந்து' புதிதாக ஒன்றைத் தொடங்குவோம், அதை நம் அறிவாலும்,  சக மனிதர்கள் மீதான நமது பெருங்கருணையாலும் சிருஷ்டிப்போம் என்ற தன்நம்பிக்கை மிகுந்த தனிமனித முனைப்புகளின் ஆபத்துகளை பர்க்க் தெளிவாகக் கண்டார்.

இன்று  அறிவுலகில்/அரசியலில் செல்வாக்கு பெற்றுவரும் 'எதிர்கலாசாரம் சமைத்தல்'கள் முயற்சிகளும் அவர்க்கு உவப்பாக இரா. இவையும் பிரக்ஞையுடன் மனிதனால், ஏதோ ஒரு சட்டகத்தில் கலாசாரம்/வரலாறு/சமூகம் ஆகியவற்றைப் புரிந்து கொண்டு அதற்க்கெதிராக கிளர்பவையே.

உன்னத லட்சியவாதம் என்று நாம் எவ்வளவு தான் மனதார நம்பினாலும்  நாம் சின்னஞ்சிறு மனிதப்பூச்சிகள்,  'நமக்கென்ன தெரியும்?' - என்பதே அவர் நிலைப்பாடு. சொல்லப்போனால், லட்சியவாதத்தின் கிளர்ச்சியே அதன் போதாமைக்கு நிரூபணம் என்பார் பர்க்க். 

இயற்கையின் வழியைத் தொடர்தல் என்பது அறிவுமுனைப்பின்றி நமக்குக் கிட்டும் ஞானம்; அறிவுக்கும் மேற்பட்ட ஞானம். மாற்றத்திற்கான (தனிமனித மனத்தின்) முனைப்பு என்பது பொதுவாக ஒருவித குறுகிய சிந்தனையினின்றும், சுயநல மனநிலையினின்றும் வருவதே. தம் முன்னோர்களை (மதித்து) நோக்கா மக்கள் எவரும் நாளையை எதிர்நோக்கத் தகுந்தார் இல்லை.

இருப்பவற்றைக் காப்பதும், அடுத்த தலைமுறைக்கு கடத்துவதும், தேவைக்கேற்ப மாற்றுவதும் நமக்குச் சாத்தியப்படுவது மரபுரிமைச் சிந்தனையால் மட்டுமே, என்பதை ஆங்கிலகத்தின் மக்கள் நன்கறிவர். 

.............

உலகத்தின் அமைப்பும், மானுட இருத்தலின் முறைமையும், அவ்வப்போது மாறும் பகுதிகளைக் கொண்டிருக்கும் பட்சத்திலும், ஒருவகை நிரந்தர வடிவம் கொண்டுள்ளன. வழமைத்தொகுதியான மாபெரும் ஞானத்தால், விளங்கவொண்ணா மனித இனம் பிணைக்கப்பட்டிருக்கும் காரணத்தால், எந்த ஒரு கணத்திலும் அது பழையதாகவோ, இளையதாகவோ, இடைப்பட்டதாகவோ இராமல், மாற்றவியலா நிலைத்தன்மை கொண்டதாகவும், காலத்தின் போக்கில் தேய்ந்து , வீழ்ந்து, மாறி, முன்நகர்வதற்கு வெகு பொருத்தமாய் நமது  அரசியலமைப்பின் ஒழுங்கமைதியும், சீர்மையும் உள்ளது. 

 

தர்க்கத்தின் உரைநடைத்தன்மையைத் தாண்டி கவிதைநிகர் மொழியே பர்க்கின் எழுத்துக்களின் தனி அடையாளம்.  

Our 'founding fathers', one has to grudgingly admit - were thoroughly prosaic. 


Comments

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  2. Comparison between Rajaji and Edmund Burke is apt. While Burke was a MP, Rajaji held much higher posts and started his own party which at largest Opposition party at one time in Lok sabha. Burke warned the Bitish govt not to take American colonies for granted and get recoinciled to the US once it declared independent. Rajaji asked Congress to take Mulsim League Pakistan demand seriously and have talks with them , for this he was thrown at rotten eggs by Congress workers

    ReplyDelete
    Replies
    1. Yes. I crave for a rigorous scholarly work of Rajaji's later years. It is a fascinating descent. As you may know, Rajaji quoted Burke often and is said to have had his books on his table till his final days. But I don't think he has written at length about him.

      I have been reading some of his speeches from his days as Governor General. One can see that he is very cautious about drastic changes. He sees no point in fashioning a Western society in Free India. That will be seen today (as was alleged by sections back then) as a covert way to perpetuate structural difficulties. But anyone with a cursory familiarity with Rajaji could see the truly Gandhian bull-headedness to approaching things from first principles.

      Perhaps I'll write a blogpost about them next.

      Delete

Post a Comment

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

The Legend of Butler Kandappar

Kamal - the writer/director