ஒன்றியமும் அம்பேட்கரும்
இன்றைய தேதியில் பிரபலாமன வார்த்தை: ஒன்றியம்.
'மத்திய' என்கிற சொல்லுக்கு பதில் 'நடுவண்' என்ற மாற்றுச்சொல்லைப் பயன்படுத்தாமல் 'ஒன்றிய' என்ற சொல்லைப் பயன்படுத்துவதன் மூலம் முன்வைக்கப்படுவது, 'மாநில உரிமை நிலைநாட்டல்' முழக்கத் தொனி.
மேலோட்டமாக அவ்வளவுதான் என்றாலும், அதன் அடிநாதம் 'இந்தியா என்பதோர் வெற்றுக் கற்பிதம் மட்டுமே, மாநிலங்களே (மக்களே!) பௌதீக உண்மை ' என்ற மீசார்வாக சிலம்பாட்டம்.
'பல தேசிய இனங்களின்(!) சிறை இந்தியா' என்கிற ரீதியில் சங்குமுழங்கின், தமிழ்கூறு நல்லுலகில் வாக்குமகசூல் சிறக்கும் என்பது சமீபத்திய மீள்கண்டடைவு.
"வேற்றுமையில் ஒற்றுமை போற்றுதும்!" என்ற நேருவியத்தை பழித்து ஒதுக்கியதால் பூதாகரமாக வளர்ந்துவிட்ட ஹிந்துத்வ எழுச்சி, இத்தகைய எதிர்வினைக்கு காரணம் என்பது உண்மை. ஆனால் அது மட்டும் காரணம் அல்ல. இதற்கு அடிநாதமாக இருப்பது இந்த தேசியஇனச்சிறை சமாசாரங்களை உண்மையென்று நம்பக்கூடிய - தாட்சண்யமாகச் சொல்வதென்றால் - அப்பாவி மனங்களின் பெரும்பெருக்கம்
இச்சொல்லைப் பூரித்துப் பயன்படுத்துவோர் 'அரசியலமைப்பில் உள்ளச் சொல்லைத் தானேய்யா சொல்றோம், இதற்கேன் பதறுகிறீர்கள்?' என்று கொக்கரிப்பதால், அதன் உண்மைத் தன்மையைச் சற்று நோக்கலாம்:
அம்பேட்கர் - ராஜேந்திர பிரசாத் |
இந்திய நாடு, அதன் வளர்நிலை/செல்பாதை போன்றவற்றைப் பற்றி திட்டமான அபிப்ராயங்கள் கொண்டிருந்தவர் அம்பேட்கர்.
மாற்றத்தின் வேகம் குறித்த பாரதூரமான அவநம்பிக்கைகள் அவரிடம் இல்லாமல் இல்லை; ஆனால் மாற்றம் விளையவேண்டிய களத்தின் (புவியியல்/சட்ட/நிர்வாக) வரையறைகள் பற்றி அவர் மிகத் தெளிவாக இருந்தார்.
அரசியலமைப்பு வரைவுச்சபையில் 4 நவம்பர் 1948ல் அவர் கூறியதாவது:
சட்டவரைவின் ஆர்ட்டிக்கிள் 1, இந்தியாவை 'மாநிலங்களால் ஆன ஒன்றியம்' என்று கூறியிருப்பதற்கு சிலர் ஆட்சேபணை தெரிவித்திருக்கிறார்கள். 'மாநிலங்களின் கூட்டமைப்பு' என்று சொல்லவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
ஒற்றையாட்சி நாடான தென்னாஃப்ரிக்கா தன்னை ஒன்றியம் என்று வர்ணித்துக்கொள்வது உண்மைதான். ஆனால் மாநிலங்களின் கூட்டமைப்பான கனடாவும் தன்னை ஒன்றியம் என்று கூறிக்கொள்கிறது. அதனால், கூட்டாட்சி அடிப்படையிலான சட்டவரைவு கொண்ட இந்தியாவை ஒன்றியம் என்று கூறிக்கொள்வதும் ஒன்றும் பாதகமில்லை.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், 'ஒன்றியம்' என்ற இந்தச் சொல்லை நாம் கையாளும் முறை. கனடா எதற்கு தன்னை 'ஒன்றியம்' என்று சொல்லிக் கொள்கிறது என்பது எனக்குத் தெரியாது. ஆனால், இந்த சட்டவரைவுக் குழு ஏன் 'ஒன்றியம்' என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறது என்று சொல்ல முடியும்.
(அரசியலமைப்புச்) சட்டவரைவுக்குழு தெளிவுபடுத்த விரும்பியது இதைத்தான்: இந்தியா ஒரு கூட்டமைப்பு என்றாலும், இந்த கூட்டமைப்பானது ஏதோ தனித்தனி மாநிலங்கள் ஒப்பந்தத்தின்பேரில் ஏற்பட்டதல்ல; அவ்வாறு ஒப்பந்தத்தின்பேரில் ஏற்படாத காரணத்தால், இந்த ஒன்றியத்தில் இருந்து பிரிந்து போக எந்த மாநிலத்துக்கும் உரிமை இல்லை.
உடைக்கமுடியாத காரணத்தால் தான் இக்கூட்டமைப்பு ஒன்றியமாக உள்ளது.
இந்நாடும் இம்மக்களும், நிர்வாக வசதிக்காக பல்வேறு மாநிலங்களாகப் பிரிக்கப்படலாமே ஒழிய, இந்நாடு முழுமையான ஓர்மை கொண்டது, இதன் மக்கள் ஓர்மக்கள், இம்மக்கள் எந்த ஆளுகையின் கீழ் வாழ்கிறார்களோ அதன் வேர் ஒன்று தான்.
அமெரிக்காவில், "மாநிலங்களுக்கு ஒன்றியத்திலிருந்து பிரிந்துபோகும் உரிமை இல்லை, அந்நாட்டு கூட்டமைப்பு பிரிக்கமுடியாதது" , என்பதை நிலைநாட்ட அவர்களுக்கு ஒரு உள்நாட்டுப் போர் தேவைப்பட்டது.
பிற்காலத்தில் நம்மிடையே இதைப்பற்றி எவ்விதக் குழப்பமோ, விவாதமோ வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தான் (அரசியலமைப்பு) சட்டவரைவுக் குழு இதை முதலிலேயே தெளிவிபடுத்திவிடுகிறது.
Comments
Post a Comment