நம்மாளு
இன்று வைகாசி அனுஷம். அதனால் ஒரு திருவள்ளுவர் இடுகை என் வருடாந்திர வழமை.
இம்முறை ஒரு Recycle. ஒரு இணையநண்பரின் blogல் இட்ட commment.
அதன் ஞானப்ரகாசம் குடத்திலிட்ட விளக்காய் இராமல், வருங்காலச் சந்ததிகளைச் சென்றடையும் பொருட்டு இங்கு இட்டு சாஸ்வதப்படுத்துகிறேன்.
/“அவிசொரிந்தாயிரம் வேட்டலினொன்ற னுயிர்செகுத்துண்ணாமை நன்று” /
போன்ற வரியை வைத்து வள்ளுவரை யாக-மறுப்பாளர் என்று நிறுவ சமணத்தரப்பு முயன்றமையை வை.மு.கோ குறிப்பிடுகிறார்(ராம்).
Quite amusing.
ஒன்றை விடச் சிறந்தது மற்றொன்று என்று சொன்னால் என்ன பொருள்? உயர்ந்தது என்று கொள்ளத்தக்க ஒன்றைக் காட்டிலும் இது உயர்ந்தது என்று தானே பொருள்படும்? வள்ளுவர் சொன்னது எப்படி 'யாக மறுப்பு' என்று பொருள்படும்?
உதாரணமாக பாரதியின் வரிகளைப் பார்ப்போம்:
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
எழுத்தறிவித்தல் ௸ உயர்ந்த தர்மங்களை விட மிக உயர்ந்தது என்றல்லவா பொருள்படும்? இதிலிருந்து ‘பாரதி பிற தர்மங்களை இடித்துரைத்தார்’ என்றா பொருள்கொள்வோம்?
இதற்கு இவ்வளவு விளக்கமெல்லாம் தேவையில்லை. 'ஒரு சட்டகத்தில் திணித்தே தீருவேன்' என்று முன்முடிவுடன் வாசிக்காத எல்லாருக்கும் எளிதாகவே புலப்படும் விஷயம் தான் இது.
அவர் ‘சந்த்’ திருவள்ளுவர் என்றெல்லாம் எவ்வாறு உறுதிபட சொல்லமுடியாதோ, அதுபோலவே அவர் சொற்களைக் கொண்டு அவர் வேதமறுப்பாளர் என்றெல்லாம் நிறுவிவிடமுடியாது.
எல்லாரும் தங்கள் தர்மம், மார்க்கம் திரட்டித்தரும் உச்சம் என்று எண்ணுவதை குறளில் காணமுடிவதனால் தான் ‘இவர் எம்மவர்’ என்று அணைத்துக்கொண்டு கொண்டாடும் முனைப்பாக வெளிப்படுகிறது என்று (to put it charitably) எடுத்துக்கொள்ளலாம்.
வள்ளுவர் கோட்டம் தேர் |
பொறை உடைமைக்கு என்ன சிற்பம் தெரியுமா: The Passion of the Christ .
மயிலையில் முண்டகக்கண்ணி அம்மன் கோயில்பக்கம் வள்ளுவர் ஜாகையில், தோமையார் சிலநாள் பேயிங் கெஸ்டாக இருந்தபோது, குறட்சாரத்தை அவருக்கு போதிக்க அதைத்தான் வள்ளுவர் எழுதினார் என்று ‘நிறுவி’ பிஹெச்டி வாங்கிய தரப்பின் மோசகார சதியாக மேற்படி சிற்பத்தைக் கண்டு ஹிந்துத்வர்கள் கொதிப்பார்களோ என்னவோ.
பொறை உடைமை |
இயேசுநாதரின் மலைப்பிரசங்கத்தில் ஒரு வரி:
உங்கள் சகோதரரை மாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்கள் அல்லவா? (மத்தேயு 5:47)
இதேதானே நம்மாள் எழுதுகிறார்:
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு
Comments
Post a Comment