தெள்ளிய சிங்க தேவு
இன்று நரஸிம்ஹ ஜெயந்தி.
இவ்வவதாரத்தின் வசீகரத்தை விளங்கிக்கொள்வதே கடினமாக இருக்கிறது. 'வசீகரம்' என்றால் காட்சி அழகைச் சொல்லவில்லை. அதை ரசிக்கும் வழிவகை அறியேன். கருத்தும், குறிப்புணர்த்துபவையும், அவை எழுப்பும் எண்ணங்களுமே அலாதியானவை.
Dasavatara Cave, Ellora. Shot in 2015. |
விளங்கவொண்ணா முரண்களின் தொகையாக: ஹிரண்யனுக்கு கொடியவனாக, ப்ரஹலாதனுக்கு காருண்யனாக வந்தவன் - என்று பரிபாடல் முதற்கொண்டு பாடப்பட்டது நரஸிம்ஹ அவதாரம்.
ஆனால் அது ஒன்றும் இவ்வவதாரத்துக்கு மட்டுமான ப்ரத்யேக குணாதிசியம் இல்லையே.
சாதுர்ய சாபங்களை முறியடிக்கும் சாகசக் கதைகள் உலகத்தில் பற்பல உண்டு.
அதிலும் தனித்துவமானது இவ்வவதாரக்கதை என்று சொல்லுவதற்கில்லை.
ஆள்-அரி'யாக வந்தமை, பரிணாமக் கோட்டின் ஒரு விநோதப்புள்ளி.
அது தோற்றுவிக்கும் எண்ணம்தான் என்ன?
Mythologies கவிதையில் ஏ.கே.ராமானுஜன் அவருக்கே உரிய பாணியில் எழுதிய வரி ஒரு திறவுகோல்:
A.K.Ramanujan (wiki) |
assassin
of certitudes, slay now my faith in doubt
இதுதானே சாரம்.
இந்த பிரபலமான வரியின் கோணத்தில் நோக்கினால்: நவயுகத்தில், பகுத்தறிவின் போதாமைகளை உக்கிரமாக உணர்ந்தும், மேலெழ முடியாமல் அறற்றும் ('சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்!') நம்மை இவ்வவதாரம் வசீகரிப்பதில் ஆச்சரியமென்ன?
நாம் இன்று எத்தனை ஆழமாக படித்து ரசித்தாலும், காட்சியாக விரித்துப் பார்த்தாலும் ஒரு நவயுக மனதின் புறத்தே மோதிவிட்டு அகன்றுவிடுகின்றதல்லவா எல்லாமே. ஆழ்வார்கள் ஆராதித்ததை, கம்பன் விரித்ததை, மீண்டும் மீண்டும் படித்து ரசித்து முண்டியடிப்பது 'இன்னும் ஒரு படி மேல் எழும்பி லயித்துவிடமுடியாதா?' என்ற பிரயாசையில் தானே. படித்து மூடிவைத்துவிட்டு நெகிழா இரும்பில் வார்க்கப்பட்ட நவயுகப் பகுத்தறிவுக்குத் திரும்பித்தானே ஆகவேண்டும்.
நமது இந்தத் தத்தளிப்பின் குறியீடாகவே நரஸிம்மரைக் கொள்ளலாம்.
ஐயங்கள் வழியே வளர்த்துக்கொண்ட அறிவு புரிதல்களையும், உறுதிகளையும் தருகிறது. ஆனால் அவ்வுறுதிப்பாடுகளின் போதாமையை, அதே ஐயம்-வழிவந்த அறிவால் உணர்ந்து மட்டும் என்ன செய்வது? அதுவும், 'இந்த அறிவுத்தேடல் தான் நமது மனிதத்தன்மையின் ஆதார கல்யாணகுணம்' என்றெல்லாம் சுயசித்திரங்கள் வரைந்துகொண்டாகிவிட்டபின்? ஐயமின்றி மூழ்க நாம் என்ன எளிய ஐந்தறிவு ஜீவன்களா? அறிவுதரும் ஐயங்களை கடப்பதும் அவனே செய்து கொடுத்தால் தான் உண்டு
கடுவன் இளவெயினனார் பாடிய பரிபாடலில் (4) இவ்வரிகள் வரும்.
நின் புகழ் விரித்தனர்; கிளக்குங்கால், அவை நினக்கு
இறும்பூது அன்மை நற்கு அறிந்தேம், ஆயினும்,
நகுதலும் தகுதி
உன் புகழை (புலவர்கள்) விரித்துப் பாடினர், அவ்வாறு பாடுவது உனக்கு எந்தப் (புது) பெருமையையும் சேர்க்கப்போவதில்லை, என்று நன்கு அறிவேன். இருந்தாலும் சிரித்தாலும் சிரித்துக்கொள் (என்று இதைப் பாடுகிறேன்)
From those words, I stand suitably encouraged
வகை: எண்சீர் விருத்தம்
சதாக்கரம் (ஸ்தாக்ஷ்ரம்) - ஒவ்வொரு வரியிலும் (ஒற்றுநீக்கினால்) 25 எழுத்துக்கள்
சந்தம்: கருவிளம் தேமா கருவிளம் தேமா கருவிளம் கூவிளம் கருவிளம் தேமா
ஓசை: பெரும்பான்மை வெண்டளை, அதனால் செப்பலோசை
உரக்கப் படித்தால் ஓசையை உணரலாம்.
அரணென நன்றாய் வரங்களைப் பெற்றான்
அறுதிகள் யாவையும் பொடியென வீழ
இரணியன் மார்வை அரியுரு ஆகி
இரண்டென கீறிய அழகிய தேவைச்
சரணெனப் பற்றிச் அருளினைப் பெற்றார்
சதகதி பாதையில் இடரிடும் கல்லாய்
முரணெனச் சிந்தை தனிமனம் வீங்க
முனிந்தருள் ஈந்திட பிளந்திடு வாரே
Comments
Post a Comment