போகிப்பொங்கலுக்கு பூளைப்பூங்கொத்தை வாசலில் செருகி வைப்பது ஒரு வழக்கம் பெருங்காற்றிற்கு உதிர்ந்துவிடும் இதழ்கள் உடையை இப்பூ, மதில்காக்கும் உழிஞைவீரர் தலையில் அணிவதாம். கம்பனில் இது இரு விசேஷமான பாடல்களில் வருவதைக் காணலாம். பிக்ஷாடன உருவில் வரும் இராவணன், வேடம் கலைவதற்கு முன் சீதையுடன் ஒரு வாதில் ஈடுபடுகிறான். அரக்கரை உயர்த்திப் பேசும் பிக்ஷாடனனிடம், இராமன் விராதனை அழித்ததுபோல் பிற அரக்கரையும் அழிப்பான் என்கிறாள். அதற்கு பிக்ஷாடன இராவணன், இலங்கேஸ்வரனை உயர்த்திப் பேசுகிறான்: சீறினன், உரைசெய்வான்,' "அச்சிறு வலிப் புல்லியோர்கட்கு ஈறு, ஒரு மனிதன் செய்தான்" என்று எடுத்து இயம்பினாயேல் தேறுதி நாளையே; அவ் இருபது திண் தோள் வாடை வீறிய பொழுது, பூளைவீ என வீவன் அன்றோ? பிக்ஷாடனன் கோவமாகச் சீறினான். வலிமையற்ற விராதன் போன்றோரை ஒரு மனிதன் கொன்றான் என்று பெரிதாக நீ பேசினால், அதற்கு தெளிவான பதில் நாளையே உனக்கு கிட்டும்; (இலங்கேஸ்வரனின்) அந்த இருபது தோள்கள் அசைந்து கிளப்பும் காற்றில் சிதறும் பூளைப்பூவாக இராமன் வீழ்வான். (வீ - என்பது பூவின் ...