இருவேறு சரிகள்
வயதாக ஆக, there is nothing either good or bad, but thinking makes it so என்றெல்லாம் சொல்பவன் to be or not to be என்று அவதிப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்றே தோன்றுகிறது.
ஆனால், individual agency மீதே சகலபாரத்தையும் போட்டுவிட்டு வருத்தப்பட்டு சுமப்பவனாக இருக்க மறுப்பவனையும் லேசில் அணுகமுடிவதில்லை. அவன் வேறுவகையான ஆளாக இருக்கிறான். அவனை எட்டிநின்று nobleஆக காணலாம். ஆனால் அவனை ஆகர்ஷித்துவிட்ட விழுமியங்களை ஸ்திரமான அணுகிவிடத்தான் முடியுமா? சிரமமே.
மகாபாரதத்தில் விகர்ண வதம் பதினான்காம் நாள் போர் அன்று நிகழ்கிறது.
பீமனை எதிர்கொளும் ஏழு கௌரவர்கள் இறக்க, எட்டாவதாய் விகர்ணன் எதிர்படுகிறான்.
திரௌபதிக்கு அவமான நிகழ்ந்த சபையில் எதிர்க்குரல் எழுப்பிய ஒரே கௌரவன் விகர்ணன். இதை மறவாத பீமன் இவ்வாறு உரைக்கிறான்:
'புகலும் வஞ்சினம் பொய்க்கினும், நின்னுடன்
இகல் செய்யேன்; எம்பி ஏகுக!' என்றான்அரோ
நான் உரைத்த வெஞ்சினம் பொய்த்துப் போனாலும் போகட்டும், உன்னைக் கொல்லேன் போய்விடு தம்பி விகர்ணா!
சுடு உரைக் கனல் அன்ன துச்சாதனன்
வடு உரைக்கவும், மன் உறை மன்றிடை,
நடு உரைக்கும் நல் நா உடையாய்! உனைக்
கொடு உரைக் கணை ஏவினும், கொல்லுமோ?
நெருப்பு போன்ற கொடிய சொற்களை அன்று துச்சாதனன் சபையில் பேசியபோது, நீ நடுவு நிலைமை தவறாது செய்த பேசிய நா உடையவன்.
உனைக் கொல்ல நான் கொடிய அம்பை ஏவினாலும் அது உன்னைக் கொல்லுமோ?
இப்படி சில வரிகள் சொன்னாலும் விகர்ணன் எதிர் அம்பு விடுகிறான்.
'எம் முனோர்கள் எனைவரும் உம் கையில்
வெம் முனைக் கணையால் விளிந்து ஏகவும்,
உம் முன் யான் ஒருவேனும் உய்வேன் கொலோ?
வம்மின்! வார் சிலை வாங்குக!' என்று ஓதினான்.
எனக்கு முன்னே வந்த கௌரவர்கள் உன் கையுலிருந்து புறப்பட்ட அம்பால் கொல்லப்படார்கள். நான் மட்டும் பிழைத்து இருத்தல் தகுமோ? வில்லை எடுப்பீர், போர் செய்வோம், என்றான்.
ஒரு இடைக்குறிப்பு: வில்லிபாரதம் என்னால் அவ்வளவாக சுவைக்க முடிந்ததில்லை. மாகாவியம் சுருக்கிப் பாடப்பட்டது என்பதால், கொஞ்சம் துரிதகதியில் இருப்பதாகத் தோன்றும். ஒரு உணர்வில் தங்கித் திளைப்பதற்குள் தாவி நகரும். ஓசை எய்த நிறைய வகையுளி பயன்படுத்தப்பட்டிருக்கும்.... இப்படி எல்லாம் எளியேன் சொல்லலாமா என்று தெரியவில்லை. 'நானே எழுதி நானே தானே படித்துக்கொள்கிறேன், இருக்கட்டும்', என்ற தைரியம் தான்.
வில்லிபாரதத்தில் விகர்ணன் இறப்பு ஒரு பாடலில் ஒரே ஒரு வரியில் வரும். வியாசபாரதத்தில் விகர்ணனை கொல்லவேண்டி வந்ததற்காக வருந்துவிட்டே பீமன் நகர்வான். (துரோண பர்வம், 136ம் பாகம்)
"நூற்றுவரைக் கொல்வேன் என்ற என் சபதம் அறிந்தும் உன் வீரகர்மத்தினின்று விலகாது எதிர்பாட்டாயே!" என்பான்.
ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் எதிர்படும்போது (வில்லிபாரதத்தில் வருவதைப் போல) உரையாடுவதைக் காணோம். வியாச சாகரத்தில் முக்குளித்தவர் யாரேனும் சொல்லவும்.
அதுவரை:
வீமன்:
மன்றிலுரை மூத்தவரும் அன்றுரையா போதினிலே
கன்றனையோய் சீறினையே என்றுமதை நான்மறவேன்
'கொன்றிடுவேன் நூற்றுவரை' என்றுரைசெய் தேனெனினும்
சென்றிடுவாய் எம்பியுனை நன்றியொடு வேண்டுகிறேன்
விகர்ணன்:
அன்றெனது தர்மமது இன்றெனது தர்மமிது
குன்றனையோய் நன்கறிவாய் தொன்றுமறை கூறுநெறி
வென்றிடுதல் இல்லையெனில் பொன்றழிதல் முன்வினையால்
ஒன்றினையே நானடைவேன் என்றுமிதில் தேர்விலையே
(தரவு கொச்சகக் கலிப்பா)
Comments
Post a Comment