சித்திர விதிகள்
படிக்கப்படிக்க, பொருளிலக்கணம் என்பதை the grammar of content என்பதை விட the grammar of (the aesthetics of) depiction என்று பொருள்கொள்வது பொருத்தமாகத் தோன்றுகிறது. (ரெண்டும் ஒண்ணுதானோ?)
இவ்வாறு நோக்கினால், கறாரான விதிகளால் கட்டப்பட்ட சமூகச் சித்திரம் எழுவதாக உறுதியாக சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அவ்விதிகள் 'இப்படிப்பட்ட சித்தரிப்பே நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கும்' என்று வழிகாட்டுவதாகப் பொருள்கொள்ளலாம். ஒரு சித்திரத்தின் நம்பகத்தன்மை என்பது அச்சமூகத்தின் பெருவழக்குகள் சார்ந்தே எழும் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அவை நெகிழ்வுக்கு இடமிலா விதிகள் அல்ல - என்றே எண்ணத் தோன்றுகிறது.
நம்பியகப்பொருளின் கடைசி பகுதியான ஒழிபியல் - the chapter of exceptions - மிக சுவாரஸ்யமான பகுதி. அதுவரை நூல்நெடுக எந்த நிலத்தில் என்னென்ன பேசுபொருட்கள், விவரணைப் பொருட்கள், காதல்-மணம்-இல்வாழ்க்கை என்று ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வாறு கவித்தருணங்கள் வடிக்கப்படவேண்டும் என்று சொல்லிவிட்டு, இங்கு அவற்றிற்கு விதிவிலக்குகள் சொல்லப்படுகின்றன.
விதிவிலக்குகள் விதிகளை துலங்கச் செய்கின்றன.
உதாரணமாக:
திருமணத்திற்குப் பிறகு தன்னைப் பிறிந்து பாலை நிலத்தைத் தாண்டி கணவன் செல்வதைப் பாடும் மனைவியைப் பற்றிய ஒரு நூற்பா
உடன்போய் மீண்ட கொடுங்குழை மடந்தை
பிரிவுழித் தலைவனோடு சுரத்து இயல் பேசலும்..
அதாவது, களவு (காதல்) காலத்தில், தலைவனுடன் ஊரைத் தாண்டி சுரத்தை (பாலை நிலத்தை) அடைந்து, பிறகு மீண்டு வந்து தலைவனை மணந்த தலைவி, தற்போது அத்தலைவன் தன்னை பிரிந்து (கல்வி, பொருளீட்டல் போன்ற வேலைகளுக்காக) செல்லும்போது, அந்த பாலை நிலத்தின் கொடுமையைப் பாடுவாள்.
இங்கு சொல்லாமல் விட்டதிலிருந்து நாம் புரிந்துகொள்ளவேண்டியது: பெரியோர் நிச்சயித்து மணம் செய்துகொண்டவர் என்றாலோ, வீட்டில் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட காதல் மணம் என்றாலோ - அத்தலைவி, கணவன் பிரிந்து செல்லும்போது பாலையைப் பாடக் கூடாது. ஏனென்றால் அத்தலைவி பாலையின் இயல்பை அறியாள், அதனால் அதை அவள் பாடுவாதக் பாடல் இயற்றுதல் பொருந்தாது.
நம் பொருளிலக்கணக்கணத்தின் வியத்தகு விஸ்தீரணத்தை பிரமித்து ரசிக்கும் அதே வேளையில், அதிலிருந்து 'இறுக்கமான விதிகளால் கட்டமைக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின் சித்திரம்' என்றெல்லாம் பெரும்பாய்ச்சல் செய்யத் தயங்குவது நல்லது.
Comments
Post a Comment