ராமசேது

சாவி'யின் 'நவகாளி யாத்திரை' (வானதி பதிப்பகம்) நூலிலிருந்து:


குடியானவருடைய வீட்டிலிருந்து கிளம்பி தர்மாபூருக்கு செல்வதற்குள் சுமார் ஏழெட்டு மூங்கில் பாலங்களைக் கடக்கவேண்டி இருந்தது. நவகாளி ஜில்லாவில் வயலுக்கு நீர் பாய்ச்சும்  வாய்க்கால்கள் குறுக்கும் நெடுக்கும் காணப்படுகின்றன. அந்த வாய்க்கால்களைக் கடந்துசெல்ல மூங்கில்களினால் பாலங்கள் அமைத்திருக்கிறார்கள். இந்தப் பாலங்களைக் கடந்து செல்வதென்றால் அதற்குத் தனிப்பட்ட திறமையும், தனிப்பட்ட பயிற்சியும் வேண்டியிருக்கின்றன.

இதைக் கேள்விப்பட்டிருந்த காந்திஜி, ஶ்ரீராம்பூரில் ஒரு மாத காலம் முகாம் போட்டிருந்த சமயம் தினந்தோறும் நடந்து நடந்து பயிற்சி பெற்றுக் கொண்டார். கைக்கோலை ஊன்றிக்கொண்டும், கைக்கோல் இல்லாமலும் நடப்பதற்கு பழக்கம் மேற்கொண்டார். அந்த சமயத்தில் பண்டித ஜவஹரும் இன்னும் சிலரும் மகாத்மாஜியிடம் அரசியல் சம்பந்தமாக சில அந்தரங்க அலோசனைகள் கேட்பதற்கு ஶ்ரீராம்பூருக்கு வந்திருந்தனர். காந்திஜி அப்போது மூங்கில்பாலம் மீது நடந்து செல்லும் வித்தையை அவர்களுக்கு நேரில் செய்து காட்டினார். நேருஜி இதைப் பார்த்துவிட்டு 'பூ! இவ்வளவு தானா?" என்பதைப் போல சிரித்தார்.

காந்திஜி, ஜவஹரைப் பார்த்து "தாங்கள் நினைக்கிறபடி இந்தப் பாலத்தில் நடப்பது அத்தனை சுலபமல்ல; நடந்து பார்த்தால் தான் இதிலுள்ள கஷ்டம் தெரியும்" என்றார்.

உடனே பண்டித நேரு, "இதோ பாருங்கள்" என்று கச்சத்தை வரிந்து கட்டினார். கைச்சட்டை விளிம்புகளை மடக்கி விட்டுக்கொண்டார். சற்றுப் பின்னால் சென்று வேகமாக ஓடி வந்து சட்டெனப் பாய்ந்து அந்த வாய்க்காலை ஒரே தாண்டாக தாண்டிக் காட்டினார்.



இதைப்பார்த்த மகாத்மாஜி மூக்கின்மேல் விரலை வைத்து, 'ஹரேரே!' என்று ஆச்சரியப்பட்டுப் போனார்! நேருஜியைப் பார்த்து சிரித்துக்கொண்டே, "இதுபோல் ஒவ்வொரு வாய்க்காலையும் கடப்பதற்கு நான் பின்னுக்குப் போய்  ஓடி வந்து தாண்டிக் கொண்டிருக்க முடியாதே!" என்றார். நேருஜியும், மற்றவர்களும் அதைக்கேட்டு சிரித்து விட்டனர்.

'நவகாளி என்னும் இலங்கைத் தீவிலே சமரஸம் எனும் சீதையை அடைவதற்காக ராமன் அணை கட்டியது போல் காந்திஜியும் மூங்கில் பாலம் அமைத்து கடந்து செல்கிறார். ஜவஹரோ அந்தப் பாலத்தை ஹனுமானைப் போல் ஒரே தாவாகத் தாவி விட்டார். ரொம்பவும் பொருத்தமாய்த்தான் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன்.


'ஈஸ்வர் அல்லா தேரோ நாம்' என்ற வரியை 'ராம்துன்' பஜனையில் இணைத்து ராமருக்கு இணைவைத்துவிட்டார் என்று சில பிரஹஸ்பதிகள் புதிதாகக் கண்டுபிடித்துப் பொங்கியிருக்கிறார்கள்.  அவ்வரி நவகாளி யாத்திரையின்போது சேர்க்கப்பட்டது என்பது அவர்களுக்கு ஒரு factoid மட்டுமே என்றால்,  சொல்வதற்கு ஒன்றுமில்லை. 'வாழ்க பாரதம்'




Comments

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

The Legend of Butler Kandappar

Kamal - the writer/director