ராமசேது
சாவி'யின் 'நவகாளி யாத்திரை' (வானதி பதிப்பகம்) நூலிலிருந்து: குடியானவருடைய வீட்டிலிருந்து கிளம்பி தர்மாபூருக்கு செல்வதற்குள் சுமார் ஏழெட்டு மூங்கில் பாலங்களைக் கடக்கவேண்டி இருந்தது. நவகாளி ஜில்லாவில் வயலுக்கு நீர் பாய்ச்சும் வாய்க்கால்கள் குறுக்கும் நெடுக்கும் காணப்படுகின்றன. அந்த வாய்க்கால்களைக் கடந்துசெல்ல மூங்கில்களினால் பாலங்கள் அமைத்திருக்கிறார்கள். இந்தப் பாலங்களைக் கடந்து செல்வதென்றால் அதற்குத் தனிப்பட்ட திறமையும், தனிப்பட்ட பயிற்சியும் வேண்டியிருக்கின்றன. இதைக் கேள்விப்பட்டிருந்த காந்திஜி, ஶ்ரீராம்பூரில் ஒரு மாத காலம் முகாம் போட்டிருந்த சமயம் தினந்தோறும் நடந்து நடந்து பயிற்சி பெற்றுக் கொண்டார். கைக்கோலை ஊன்றிக்கொண்டும், கைக்கோல் இல்லாமலும் நடப்பதற்கு பழக்கம் மேற்கொண்டார். அந்த சமயத்தில் பண்டித ஜவஹரும் இன்னும் சிலரும் மகாத்மாஜியிடம் அரசியல் சம்பந்தமாக சில அந்தரங்க அலோசனைகள் கேட்பதற்கு ஶ்ரீராம்பூருக்கு வந்திருந்தனர். காந்திஜி அப்போது மூங்கில்பாலம் மீது நடந்து செல்லும் வித்தையை அவர்களுக்கு நேரில் செய்து காட்டினார். நேருஜி இதைப் பார்த்துவிட்டு 'பூ! இவ்வளவு தானா...