மீட்சி
உங்கள் குடும்பமுன்னோர்கள் பற்றி ஸ்வாரஸ்யமாக எதாவது சொல்லுங்கள் என்றொரு கீச்சிழை. கதை சொல்வார்கள் என்று பார்த்தால், எல்லாரும் கர்மஶ்ரத்தையாக அபிவாதயே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஐயகோ!
எப்படிச் செய்யவேண்டும் என்று காட்ட இவ்விடுகை.
தான் எப்படியோ படித்து மேலே வந்துவிடுவோம், படிக்காத பங்காளிகளே வைத்துக்கொள்ளட்டும், என்று, கோமணம் அளவு நிலமென்றாலும், காவிரிக்கரை நிலத்தைக் கொடுத்துவிட்டு வக்கீலுக்குப் படிக்கிறார் ஒருவர்.
கும்பகோணம், சென்னை, பம்பாய் என்று சுற்றி எப்படியோ செட்டிநாட்டில் தேவகோட்டைக்கு வருகிறார். பங்காளிச்சண்டை போட்டுக்கொள்ளும் செட்டியார்களும் அவர்களை நம்பி ஜீவித்த
வக்கீல்களுமாக ஒரு ஊர்.
1941ல், ஒரு தேவகோட்டை லேவாதேவிக்காரருக்கு இந்தோசீனாவில (இன்றைய வியட்நாம்-கம்போடியா-மலேஷியா பகுதிகள்) இருந்த சொத்துகளிலிருந்து வரவேண்டியவற்றை கோர்ட்டாருக்காக வசூலித்துத் தரவேண்டிய வேலை ஒன்று வருகிறது. காகிதத்தில் அதிகார டாம்பீகமாக இருந்தாலும், ஊரில் வருமானம் உள்ள எந்த வக்கீலும் வேலையை விட்டுவிட்டு, கிடைக்கும் சிறு கமிஷன் சதவிகிதத்துக்காக உலகப்போர் காலத்தில் இந்தோசீனாவுக்கு எல்லாம் போக விரும்பவில்லை.
மூன்று குழந்தைகளுக்கு தகப்பனான பின்பும் நிலையான வருமானம் இல்லாத இந்த வக்கீல், அந்தப் பணியை ஏற்றார். 12 வயது மகள், 7, 1 வயதில் மகன்கள்; எண்ணைக்கடை முதல் மளிகைக்கடை வரை வைத்து நொடித்த அப்பாவையும் தன் மனைவியையும் விட்டு, மூன்று மாதத்தில் திரும்பி வரும் உத்தேசத்தில் பயணப்படுகிறார்.
போய் இறங்கியதும் இந்தோசீனாவில் உலகப்போர் உக்கிரமாகி எங்கும் பயணப்படமுடியாமல் சிக்கிக்கொள்கிறார். ஊருக்குத் தகவல் அனுப்ப வழியில்லை. வாரங்கள் மாதங்கள் ஆகி, மறுவருடமே ஆகிவிட்டது. ஊர் நிலவரம் அறிந்துகொள்ள முடியவில்லை. தகவல் சொல்லவும் முடியவில்லை. இதற்கிடையில் கொலாலம்பூருக்கு பயணப்பட முடிகிறது. அங்கு வந்து ஒரு சட்ட நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார்.
போர் உக்கிரமாகத் தொடர்கிறது. மலேயாவிலிருந்து தென்னிந்தியச் சிற்றூருக்கு தகவல் சொல்ல இன்னும் வழியில்லை. பயணப்பட விழைவோர் பட்டியல் வெகுநீளம், இப்போதைக்கு கப்பல்களில் இடம் இல்லை.
இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன, கணவனைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. நகைகள் எல்லாம் அடகுக் கடைக்குப் போய் விட்டன. மகளுக்கு 14 வயது ஆகிவிட்டது, பேசத் தொடங்கிவிட்ட கைக்குழந்தைக்கு அப்பாவைப் பார்த்த ஞாபகமே இல்லை. இருந்த ஓரிரு கட்சிக்காரகளும் வேறு வக்கீல்களுக்கு இடம்பெயர்ந்து விட்டனர், தாட்சண்ய அட்வான்ஸ் கொடுப்பதை எல்லாம் நிறுத்திவிட்டனர்.
எல்லாம் இருண்டுவிட்ட ஒரு நாளில் எங்கிருந்தோ வந்தார்.
மரித்தவர் மீண்டார்போல். நம்பிக்கை என்பது ஒரு சடங்காகி, சுரத்தின்மையே இயல்பாக படர்ந்துவிட்ட குடும்பத்தை – மீண்டு வந்து உயிர்பித்தார்.
------------------------------------
“பாட்டிக்கு எப்படி இருந்திருக்கும்ல! பெரியப்பா கைக்குழந்தை வேற. தாத்தாவைப் பார்த்ததும் கொள்ளுத்தாத்தா என்ன சொன்னாராம்?”
“முதல்ல போய் இந்த க்ராப்பை மறுபடி குடுமியா வெட்டிண்ட்டு, அப்புறம் வீட்டுக்குள்ள வா” ன்னாராம்
Painting: Ilya Repin's 'Unexpected Visitors'
Comments
Post a Comment