கல் தோன்றிய காலம்
அகலிகை எப்போது கல்லானாள்? புள்ளமங்கை - அகலிகை சாபவிமோசனம் பரிபாடல் 19ல் திருப்பரங்குன்றத்தில் உள்ள ஓவியங்களைப் பார்த்துக்கொண்டே அவற்றைப் பற்றிப் பேசிச்செல்லும் காட்சி வருகிறது 50-52 வரிகள்: ... இவள் அகலிகை இவன் சென்ற கவுதமன் சினன் உறக் கல் உரு ஒன்றிய படி இது என்று உரை செய்வோரும் இன்ன பல பல எழுத்து நிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும் கவுதம முனிவன் கோபத்தால் கல் உரு பெற்ற அகலிகை இவளே....... என்றெல்லாம்...(இதைப் போல பல) சித்திரங்கள் உள்ள மண்டபத்தில், சுட்டிக்காட்டி அறிவுறுத்திக் கொண்டு போகிறார்கள். பரிபாடல் காலத் தமிழகத்தில் referential ஓவியக்கலை செழித்தமையைக் காட்டுவதாக இதை மேற்கோள் காட்டுவதுண்டு. அவ்வோவியம் குறிக்கும் கதை தமிழகத்தில் பரவலாக அப்போதே அறியப்பட்டிருக்கவேண்டும். சரி அதற்கென்ன ? ராமாயணக்கதை தான் சங்ககாலத்திலேயே தெரிந்தது தானே? ஆம். ஆனால் எந்த ராமாயணம்?