ஸ்ரீஜெயந்தி
இந்திரன் ஆயரைச் சீறியே மாமழை
சிந்தினான் ஆங்கவர் அஞ்சவே மாமலை
தன்திரு பூவிரல் ஒன்றிலே தாங்கினான்
அந்தியின் மேனியான் ஆநிரைக் காவலான்
சிந்தையுள் சிக்கிடா சுந்தரன் செய்ததில்
விந்தையென்? பாற்கடல் தேவரும் தீயரும்
முந்தைசி லுப்பவே உற்றதோர் மத்தென
மந்தர மாமலை தன்னையே தாங்கிட
வந்தவன் தானிவன் அம்மலை போல்பல
அந்தமில் மாமலை சூழ்புவி அன்னையைத்
தந்திரப் பொன்விழி யான்கொள ஏனமாய்
தந்தமிட் டேந்தியே மீட்டவன் தாமரை
உந்தியின் தோன்றிய நான்முகன் தோற்றிய
அந்தரம் யாவையும் தோளினில் ஏந்துமுன்
தந்தைசொல் பற்றியே வீசிய தாபதன்
எந்தைக்கு அரிதே இல
வகை: ஒருவிகற்ப கலிவெண்பா
விளக்க உரை
- இந்திரன் ஆயர்கள் மீது கோபம் கொண்டு பெருமழை பொழிந்தான்
- ஆயர்கள் அஞ்சினர் (அப்போது) கோவர்த்தன மலையை
- தன்னுடைய தெய்வீகமான பூப்போன்ற ஒற்றைவிரலால் தாங்கினான்
- இருள்நிற மேனியன் மாடுகளை காத்தவன்
- சிந்தனையின் அடங்கா அழகன் அவன் அவ்வாறு செய்ததில்
- விந்தை என்ன? (ஏனெனில்) பாற்கடலை தேவர்களும், தீயவர்களான அசுரர்களும்
- முன்பு ஒரு நாள் கடைவதற்கு, சிறந்த மத்தான
- மந்தர மாமலையையே தன் முதுகில் தாங்கிட
- முன்வந்தவன் இவனே. அந்த மலையைப் போன்ற
- பெருமலைத் தொடர்கள் பல சூழ்ந்த பூமியை (பூமிதேவியை)
- தந்திரமான அசுரனான ஹிரண்யாக்ஷகன் (பொன்நிற கண்கள் உடையவன் ) சிறைபிடிக்க, ஏனாமாக (வராஹம் என்ற பன்றியாக) சென்று
- தந்தங்களால் ஏந்தி மீட்டவன்
- அவனது கொப்பூழ் தாமரையில் தோன்றிய நான்கு முகம் கொண்ட பிரமனால் படைக்கப்பட்ட பேரண்டத்தை
- (அதன் ஆட்சிப்பொறுப்பை) தோளில் ஏந்தும் தருவாயில்
- தந்தை (தசரதன்) ஆணைக்கு இணங்கி ஆட்சி துறந்த (அண்டத்தை தூக்கி வீசிய) தவசீலன்
- (அப்படிப்பட்ட) என் அப்பனுக்கு கடினமான காரியமே இல்லை
தொகுப்புரை
கோவர்த்தன கிரியை தூக்கியதில் ஆச்சரியம் என்ன?
அதை விட பெரிய மந்தரமலையை சுமந்திருக்கிறான்.
(அதிலும் ஆச்சரியமில்லை, ஏனெனில்)
மலைகள் நிறைந்த பூமியை தந்தத்திலே இடர்ந்திருக்கிறான்
(அதிலும் ஆச்சரியமில்லை, ஏனெனில்)
எல்லா உலகங்களையும் படைத்த பிரம்மனே இவன் நாபியிலியிருந்து தோன்றியவன் தான்
(அதிலும் ஆச்சரியமில்லை, ஏனெனில்)
தனக்கு உரிமையான உலகங்களை, தந்தையின் ஒரு சொல்லுக்காக தூக்கிய வீசியவன் அவனே.
அவனால் நிகழ்ந்த முடியாதவையும் உண்டோ?
Pictures from:
- Govardhanagiri Shahadid (1690) https://commons.wikimedia.org/wiki/File:Shahadin_001.jpg
- Koormavatara https://hindugodimages.blogspot.com/2014/09/sri-vishnu-koormavatara-pictures-photos.html
- Varaha - anon (1790) https://en.wikipedia.org/wiki/File:Varaha_avtar,_killing_a_demon_to_protect_Bhu,_c1740.jpg
- Padmanabha https://commons.wikimedia.org/wiki/File:Vishnu_rests_on_the_serpent_Ananta_while_Brahma_appears_within_a_lotus_flower_emitting_from_Vishnu%27s_navel.jpg
- Dasaratha http://www.columbia.edu/itc/mealac/pritchett/00routesdata/bce_299_200/ramayana/banishment/banishment.html
Comments
Post a Comment