அன்று நான் பிறந்திலேன்

ஓசையில் வெண்புறா கூட்டம் வழிவிட/ பூசையை வீசியே தேடு
கடந்த செவ்வாய்க்கிழமை (29/05) வைகாசி அனுஷம். திருவள்ளுவர் திருநக்ஷத்திரம்.

நமக்கு நமது கவிஞர்களின் வரலாறு தெரியாது. கர்ணபரம்பரை கதைகள், தொன்மங்கள் மட்டுமே உண்டு. ஆழ்வார், நாயன்மார்களுக்கு நக்ஷத்திரம் கொண்டாடப்படுவது எவ்வாறு ஒரு தொடர்ச்சி அடிப்படையிலோ, அந்த அளவே ஒரு உண்மைத்தன்மை/இன்மை நோக்கோடு இதை அணுகலாம்.

எது எப்படியோ இந்த தை 2 அவர் பிறந்தநாளாக எண்ணுவதில் என்றும் ஒரு தயக்கம் இருந்திருக்கிறது எனக்கு. இந்தியாவில் மாதம்-தேதி கணக்கில் பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் இருந்ததில்லை என்றே நினைக்கிறேன். இதற்கும் வைதிகத்திற்கும் சம்மந்தமில்லை. ஹிந்து (வைதீக) மதம் மட்டுமல்ல, மகாவீரருக்கும் மாதம் திதி தான் (பங்குனி சுக்லபக் திரயோதசி), பர்ஷவநாதர் (தமிழில் இவர் பெயர் அப்பாண்டை நாதர் - தை மாச க்ருஷ்ணபக் தசமி). புத்தருக்கும் இவ்வாறே. சூரியன் – சந்திரன் இரண்டும் முழுதாக சுழன்று அதே நிலைகளில் இருக்கவேண்டும் என்பதே கணக்கு.

தை-2

’அதெப்படி வள்ளுவருக்கு மட்டும் தை-2 என்று இருக்க இயலும்?’
என்று தேடியபோது, தை முன்வைத்ததில் சோமசுந்தர பாரதியாரின் பங்கு பற்றிய ஒரு கட்டுரை கிடைத்தது http://www.vallamai.com/?p=19155

இந்தப்புதுப்புனைவின் தோற்றத்தை ஓரளவு அறிந்துகொள்ளமுடிகிறது. நிறுவுதல் என்று எதுவும் இல்லை, வலியுறுத்துதல்களின்  (assertion) தொகை தான். அதில் முக்கிய வரி:
திருவள்ளுவருடன் தைப்பொங்கல் பெரிய அளவில் தமிழறிஞர்களால் இணைக்கப்படுவது 1949-ஆம் ஆண்டிலேதான் தொடங்குகிறது.

அதாவது, தொன்றுதொட்டு தை-2 என்று ஒரு வழக்கு இருந்ததாகவோ, அதை மீட்டுருவாக்கம் செய்ததாகவோ இல்லை. மாறாக, வைகாசி அனுஷத்தை புறக்கணித்து,  முற்றிலும் புதிய நன்னாள் ஒன்றை உருவாக்கி, அதற்கான நியாயங்களை திருக்குறளின் வாசிப்பனுவத்தின் ஊடாகவே எடுத்து அமைக்கப்பட்ட வாதம் இது. இன்று வழக்கில் நிலைத்துவிட்ட இத்தரப்பின் இவ்வாதத்தில் விஞ்சிநிற்பது  எச்சரிக்கையுணர்வே. அந்த எச்சரிக்கையுணர்வும் புரிந்துகொள்ளத்தக்கது தான்.

எச்சரிக்கையுணர்வு
 திருக்குறள் தானாக எதையும் புதிதாக எடுத்து இயம்பவில்லை, இந்தியப் பெருநிலத்தில் ஏற்கனவே எழுதப்பட்டவற்றை  தமிழ்ப்படுத்தியது, அவ்வளவேஎன்கிற ரீதியில் குறுக்கிப்படிக்கும் சூழல் இன்றும் நிலவுவதைப் பார்க்கிறோம் என்றால், அக்காலத்தில் இன்னும் எத்தனை உக்கிரமாக இருந்திருக்கும் என்று அனுமானிக்கலாம். அதை எதிர்க்க, தமிழின் முக்கியமான iconக்கு தனித்தமிழ் அடையாளம் ஒன்றை ஏற்படுத்த, முனைந்தமை புரிகிறது.

ஆனால் இது ஒரு தனித்தமிழ் முரண்டு. இந்திய வழமையான மாதம்-திதி/நக்ஷத்திரம் என்பதை மறுப்பதன் மூலம், இவை எவற்றிற்கும் தமிழுக்கும் தொடர்பில்லை என்று வெட்டிக்கொள்ள முனையும் தரப்பின் குரல் அது

அது அவ்வளவு எளிதா என்ன? குறளை மேலோட்டமாக வாசிப்பவருக்குக் கூட அது எந்த அளவு இந்தியச் சிந்தனை மரபிலிருந்து அப்படி எல்லாம் பிரிக்க முடியாத ஒன்று என்று தெளிவாகவே புரியும். வள்ளுவர் மொத்தமாக வடநூற்களிலிருந்து எடுத்து இங்கு எழுதினார் என்ற தரப்பிற்கு சரியான பதில் வள்ளுவர் ஒரு சுத்த தமிழ் சுயம்பு என்று சொல்வதல்ல.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு
என்று எழுதியவரின் நோக்கு எத்தகையது? ’கல்வியினால் ஒருவன் பெரும் முக்கிய பயன் என்னவென்றால் அது, அவனுக்கு உரையாடல்களுக்கான களத்தை பிரம்மாண்டமாக விரிவாக்கித் தரும்என்பது எத்தனை அபாரமான, நுட்பமான பார்வை!

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்…, பொய்மையும் வாய்மையிடத்துஎன்ற கருத்துக்களை  பீஷ்மர் அம்புப்படுக்கையில் யுதிஷ்ட்ரனுக்கு உபதேசிப்பதில் படிக்கலாம். படிக்கும்போது இப்பெருநிலத்தின் அசாதாரண உரையாடல் வரலாற்றை எண்ணி நீங்கள் பரவசப்பட நேரும். மாறாக, “கலாசார சதி…” என்கிற ரீதியில் அவ்வரிகள் உங்களை சிந்திக்க வைத்தால், ஆழ்ந்த அனுதாபங்கள்.


கோவில்
செவ்வாய்க்கிழமை, தேடிப்பிடித்து மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலுக்குச் சென்றேன்.   தடபுடலாக விழா எடுத்திருப்பார்கள், எங்கும் குறட்பாக்களும், திருவள்ளுவ மாலையும் செதுக்கியிருக்கும் என்று எதிர்பார்த்த எனக்கு பெரிய ஏமாற்றம். எங்கும் கட்டுமான குப்பைகள். சிவபெருமான், வாசுகி சந்நிதிகள் மூடியிருந்தன, அவற்றின் முன் சிமிண்டும், டைல்களும் கம்பிகளும்.

வள்ளுவர் சன்னிதி மட்டுமே திறந்திருந்தது. அர்ச்சகர், தன் காலடியில்ஞமலி துன்னஉட்கார்ந்திருந்தார். பக்தர்களைப் பார்த்து நெடுநாள் ஆகியிருக்கும்போல, உள்ளே நுழையும் என்னை அதிசயமாக பார்த்தார். பைரவர் உறும, அஞ்சுவதஞ்சிய என்னை, தைரியம்கொடுத்து உள்ளே அழைத்தார். பலம்கூட்டி எழுந்து, எதுவுமே ஓதாமல் வெறும் தீபாரதனை காட்டி விபூதி கொடுத்தார். சந்தனப்பொட்டுடன் ஐயன் அருள் பாலித்தார்.  
இன்னைக்கு திருநக்ஷத்திரத்துக்கு எதுவும் விசேஷம் இல்லையா?” என்று கேட்தும் தான் அர்ச்சகரர் முகம் மலர்ந்தது. "இருக்கு, பத்து மணிக்கு மேலதான் அபிஷேகம். சாயந்தரம்  இன்னொரு அபிஷேகம்" என்றார். பிரதக்‌ஷணம் கூட வரமுடியாதபடி ஒடுக்கமான பிரகாரம்.
கொஞ்சம் ஆயாசத்தோடு கிளம்பினேன்.

தமிழன்
இதை ஒரு தந்திரமான கையகப்படுத்தல் என்றெல்லாம் பார்த்துக் கொதிக்கும் நோக்கு எனக்குப் புரிகிறது - உடன்பாடில்லை. அவரவர் தாம்தாம் அறிந்தவாறு ஏத்தி... என்று பொய்கையாழ்வார் பாடுவதுபோல் இதை எடுத்துக்கொள்வதில் பிசகிருப்பதாக நான் எண்ணவில்லை.
திருவாய்மொழிக்கு விளக்கம் அளிக்கும் நம்பிள்ளை திருக்குறளை மேற்கோள் காட்டி “ என்று தமிழன் கூறியிருப்பது கண்டாயேஎன்றே கூறியிருப்பதாக இந்திரா பார்த்தசாரதி எழுதுகிறார். அதாவது, தமிழன் என்று சொல்லால் அடையாளப்படுத்தக்கூடிய முழுமையான iconஆக வள்ளுவர் தொன்றுதொட்டே காணப்பட்டிருக்கிறார்.

மூன்றில் நான்கு
கம்பன், வால்மிகியை 'தெய்வமாகவி' என்று சொல்வதைப் போல திருவள்ளுவமாலையில் ஒரு பாடல் வள்ளுவனை 'தெய்வம் என்று சொல்லாமல், மனிதன் என்று சொல்பவர் பேதை' என்று அதட்டுகிறது. 

அறம்பொருள் இன்பம்வீ டென்னுமந் நான்கின்
திறந்தெரிந்து செப்பிய தேவை – மறந்தேயும்
வள்ளுவன் என்பான் ஓர்பேதை அவன்வாய்ச்சொல்
கொள்ளார் அறிவுடையார்

இப்படியெல்லாம் சொல்வது அழகுதான், ஆனால் rigorous இல்லை. அவர் அறம், பொருள், இன்பம் தானே பாடினார், வீட்டை பாடவில்லையே?” என்று பொதுவாக ஒரு கேள்வி உண்டு. வாஸ்தவம் தான்.
The Philosophy of the Thiruvalluvarல் தெ.பொ.மீ விரிவாக இதைப் பேசுகிறார்:

இந்தியத் தத்துவத்தில் தர்மம்-அர்த்தம்-காமம்-மோக்ஷம் என்ற நான்கு-புருஷார்த்த சட்டகம் பரவலாக அறியப்பட்டது. தர்மம்-அர்த்தம்-காமத்தை த்ரிவர்க்கம் என்று சொல்வதுண்டு, இதை வள்ளுவரின் முப்பாலுடன் ஒப்பிடலாம். ஜைனர்கள் பல த்ரிவர்க்க நூல்களை எழுதியிருக்கிறார்கள்.தொல்காப்பியத்திலேயே இன்பமும் பொருளும் அறனும் என்றான்குஎன்ற வரி வருகிறது.
.........
.........புறம் 31ல்  சேரனும், பாண்டியனும் பின் தொடர நலங்கிள்ளி வடவரை பொருதச்செல்வதுக்கு உவமையாய்
சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல,எனப்படுகிறது. உவமை சொல்லும் அளவுக்கு அக்கருத்தாக்கம் தமிழ்நிலத்தில் அப்போதே நிலவியிருக்கிறது. இதை யாரும் ஐரோப்பிய-இந்திய பொதுக்கலாசாரத்தினுடையது என்று சொல்ல இயலாது.  முன்-திராவிட கலாசாரத்துடையது என்றும் சொல்லமுடியாது. இந்திய பூமியின் பொதுச்சொத்தாகவே கொள்ள இயலும்.
.......
நன்னூல் காலத்திற்குள்:  அறம், பொருள், இன்பம், வீடடைதல் நூற்பயனே, என்று பிரித்து தெளிவாகிறது. வீடுபேறு என்ற ஒன்றுக்கு தனியாக அழுத்தம் நன்னூல் காலத்தில் வந்துவிட்டது என்று பொருள்கொள்ளலாமே ஒழிய, அக்கருத்தாக்கமே தமிழ்நிலத்தில் அப்போது தான் பரவலாயிற்று என்று கொள்வதற்கில்லை.
.....தொல்காப்பியத்தின் 1138ம் நூற்பாவில்
காமம் சான்ற கடைக் கோட்காலைஏமம் சான்ற மக்களொடு துவன்றிஅறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.காமத்தில்மகிழ்வாழ்வில்- நிறைசிறப்பு எய்தியபின், தலைவனும் தலைவியும் தம் மக்களுடனும், அறத்தால் செலுத்தபடும் சுற்றத்தாருடன்சிறந்ததை பயில்வதுஇதுவரை அவர் வாழ்ந்த வாழ்வின் (முகிழ்ந்த) பயனே.

இந்தசிறந்தது பயிற்றல்என்பது மனைவாழ்வின் முழுமை தனியொருவனின்/குடும்பத்தின் தினப்படி வாழ்க்கை நிறைவு மட்டும் அல்லாது அதைத்தாண்டி ஒரு பேருண்மை அடிக்கோடிடுகிறது, என்கிறார் தெ.பொ.மீ. இந்நோக்கில் குறளை வாசிக்கலாம் என்றும், முப்பாலின் நாற்பால் மொழிந்தவர்என்ற திருவள்ளுவமாலை பாடல்வரியைப் புரிந்துகொள்ளலாம் என்கிறார் அவர்.

’சிறந்தது பயிற்ற’லை அவ்வாறு பொருள் கொள்ளலாமா? இல்லை லோகாயதர்கள் சொல்லக்கூடிய பொருளுடன் நிறுத்திக்கொள்ளவேண்டுமா? நீங்களே யோசித்துக்கொள்ளவும்.

மோக்‌ஷம் என்பது ‘அவ்வாறு அறிவார் அறிகின்றதலால் எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே’ என்று பின்னாளில் அருணகிரியார் சொன்னது போல் உணரவேண்டிய சமாசாரம் என்பதால் அதை எழுத இயலாது என்கிறார் பரிமேலழகர்:


வீடென்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆகலின், துறவறமாகிய காரணவகையால் கூறப்படுவது அல்லது இலக்கணவகையால் கூறப்படாமையின், நூல்களால் கூறப்படுவன ஏனை மூன்றுமேயா

திருவள்ளுவமாலை
திருவள்ளுவ மாலை ஒரு அபாரமான தொகுப்பு
. பல பாடல்கள் 'ஹிந்து' தரப்பின் விதந்தோத்தல்.

சங்கப்புலவர்கள் என்று பட்டியல் போட்டு அவர்கள் ஒவ்வொருவர் எழுதியதாக அவர்கள் பெயரில் பாடல்கள் கொடுக்கப்படுகின்றன.
இரண்டாவது பாடலில் நாமகள் இவ்வாறு பாடுகிறாள், முதலில் நான் வேதத்தைப் படைத்தேன், இடையில் பாரதத்தை, இப்போது வள்ளுவன் வழியே குறளை எழுதவைத்தேன். முதல், இடை என்று சொன்னதன் மூலம் 'இறுதிச்சொல்' குறளே என்கிறாள்!
குறளுருவாய் வந்து ஈரடியில் உலகளந்த மாலோடு திருக்குறள் ஒப்பிடப்படுகிறது.
மாலும் குறளாய் வளர்ந்துஇரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்தளந்தான்


ஆனால் இது வைதிகர்களின் பாடல்தொகை என்று சொல்லி தட்டிக்கழிக்க இயலாது. ஒரு பாடல்:
ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி யுரைத்துஏட்டின் புறத்தெழுதார் – ஏட்டெழுதி
வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று
என்கிறது.


அறுசமயத்தார் ஒருவோரோடு ஒருவர் முரண்படுவர். ஆனால் எல்லோரும் ஏற்கும் ஒரே நூல் குறள், என்றொரு பாடல்

ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறுஎனின்
அன்றென்ப ஆறு சமயத்தார் – நன்றுஎன
எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி

புகழ்பெற்ற நூலாகிவிட்ட காரணத்தால் அவரை எல்லோரும் தமதாக்கிக்கொள்ள எண்ணினர் என்பது ஒரு சிந்தனைப் போக்கு. அத்தகைய மிகை எளிமையின் வசீகரமே அலாதி. மாறாக, தத்தம் சமயத்திற்கு இசைவானவற்றை – மற்றபடி பழிசண்டைபோடும் அறுவருமே- குறளில் கண்டனர் என்ற பார்வை குறளின் பொதுத்தன்மை எத்தனை அதிசயமானது என்று புரியவைக்கிறது. ‘பொதுமறை’ என்ற தேய்வழக்கின் மூலமாகவே நம் அனேகருக்கு அறிமுகம் ஆகும் குறள், அப்படி அது இயங்குவது எத்தனை பெரிய விஷயம் என்பதை அவ்வப்போது நினைவுபடுத்திக்கொள்வது நலம். பெரிதாக தொந்தரவு செய்யாத பிரதி (innocuous text) இல்லை இது. வாழ்வின் ஒவ்வொரு களத்திலும் அறத்தைப் பேசுகிறது. அவரவர் தத்தமது சமய நோக்குகளை இதன் ஒளியில் வாசிக்கச்செய்து; அப்படி வாசித்தும் அவரவர் சமய்ங்களுக்கு இசைவாக இடமளிக்கும் ஒரு நூலாக அமைந்திருக்கிறது, எனலாம்.

போதக நூல்
ராமனின் பகழிபட்டு வீழ்ந்த வாலி அவனை கடிந்து கேட்கிறான்:

மெலியவர் பாலதேயோ ஒழுக்கமும் விழுப்பம் தானும்
வலியவர் மெலிவு செய்தால் புகழன்றி வசையும் உண்டோ
(எங்களைப் போன்ற) எளிவர்களுக்குத் தானே அய்யா ‘ஒழுக்கம் விழுப்பம்’ போன்றவை எல்லாம்? உங்களைப் போன்ற வலியவர் பிழை செய்தால் வசையா கிட்டும்? அதற்கும் புகழப்படுவீர்கள்?
கம்பனில், ஆழ்வார்களில் என்று எங்கும் திருக்குறள் உண்டு. உவமைகளை, சொல்லாடல்களை எடுத்தாள்வதாக அவை வரும். ஆனால் மேற்சொன்ன பாட்டு ஒரு திருக்குறளை நேராக குறிப்பிடும் பாட்டு.

இவ்வரி ‘வள்ளுவம் போதிக்கப்பட்ட மர’பை தெளிவாக்குகிறது. ‘ஒழுக்கம் விழுப்பம்’ என்ற சொற்றொடர், தமிழிலக்கியத்தில் ‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்/ உயிரினும் ஓம்பப் படும்’ என்ற குறளில் மட்டுமே வருகிறது). ’அப்படி எல்லாம் எங்களுக்கே தானே நீட்டி முழக்கி திருக்குறள் போதனை செய்வீர்களே, எங்கே போனது உங்கள் அறம்?’ என்று சீறுகிறான் வாலி.

’ஒழுக்கம் விழுப்பம்’ என்ற அந்த இரண்டு சொற்களை வாலியைச் சொல்லவைப்பதன் மூலம், அக்குறளைத் தான் அவன் சொல்கிறான் என்று கேட்போருக்குத் தெளிவாகப் புரியும், என்று கம்பன் கருதினார் என்றால், எத்தனை பரவலாக குறள் பயில்விக்கப்பட்டிருக்கிறது என்று அறியலாம்.

அத்தகைய ஒரு மாபெரும் ஆசானுக்காகத் தொடுக்கப்பட்டது தான் திருவள்ளுவமாலை. திருவள்ளுவமாலைப் போல வேறொரு புலவருக்கு உண்டா?

இடுகை நீண்டுவிட்டது. அதுசரி ‘சுருங்கக் கூறி விளங்க வைக்க’ நானென்ன வள்ளுவரா.

திருவள்ளுவமாலையில் என்னை மிகக் கவர்ந்த வர்ணனை
தினையளவு போதாச் சிறுபுல் நீர்கண்ட
பனையளவு காட்டும் படித்தால் 
மிகச்சிறிய புல்லின் மேல் உள்ள பனித்துளியில் - முழு பனைமரத்தின் படிமத்தையும் காட்டுவதைப் போல..

இவற்றையெல்லாம் தொலைத்துவிடாமல் வாசிக்கவே ஆயுள் போதாது
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு நம்
வாழ்நாளோ சிறுது தமிழோ மிகப்பெரிது

பி.கு: நன்றி @chenthil_nathan. அவர் திருவாய்மொழியில் குறள் எடுத்தாளப்பட்டிருப்பதைப் பற்றி எழுதிய தனிமடலே இதற்கு ஊக்கி. விரைவில் அவரது அபாரமான https://oldtamilpoetry.com/ தளத்தில்நம்மாழ்வார் அனுபவித்த திருக்குறள்பற்றி சிலபல பாடல்களை எதிர்பார்க்கிறேன். ‘வினவாது உணர்ந்த விரகர்வள்ளுவம் வாசித்தாரென வரைந்தால், வீரவைணவர்கள் வெகுண்டு வைவரோ? பார்ப்போமே.

Comments

  1. "திருக்குறள் தானாக எதையும் புதிதாக எடுத்து இயம்பவில்லை, இந்தியப் பெருநிலத்தில் ஏற்கனவே எழுதப்பட்டவற்றை தமிழ்ப்படுத்தியது, அவ்வளவே’ - Thirukkural - An Abridgement of Sastrasனு திருவள்ளுவரை Charles Lamb rangeக்கு உயர்த்திவிட்டார்கள் என்பதைத்தானே அப்படிச் சொல்றீங்க?

    நான் திருவள்ளுவமாலையை அவ்வளவாகக் கண்டுகொண்டதில்லை. புல்மீது பனித்துளியில் பனைமரம் நல்ல படிமம். திருக்குறளோடு சேர்த்து, சில திருவள்ளுவமாலைப் பாடல்களையும் மொழிபெயர்க்கலாம் போலுள்ளது.

    ReplyDelete
  2. Pardon the delay it seems to have got caught in moderation.
    I meant that, simply because there is (unsurprisingly) noticeable overlap between ideas in KuRaL and elsewhere, highly reductive claims are made that it was a 'mere' rendition of already fully expressed ideas.

    In order to resist this counter-claims are made almost attempting to establish Valluvar sprung out of nowhere! That is unnecessary. All one has to do is to locate him in a land and time of continuous discourse.

    This clumsy efforts to excise him from a larger Indian landscape motivates ahistorisms like Thai 2. Is there a tradition of celebrating anyone's birthday at all as Tamilmonth-date?! It is a modern creation to jealously guard him from being 'appropriated'.

    Tiruvalluva Maalai, TePoMee in his 'Philosophy of Tiruvalluvar' has translated some of them. It is a delightful read for 'fanboys'. Has there been any book like this for one poet? :-)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

Kamal - the writer/director

The Legend of Butler Kandappar