ஆரினிக்கடைவர்



காசிம் புலவர் எழுதிய  நபிகள் திருப்புகழில்:

முக்குற்றம கற்றித் தெருளருள்
வற்கக்கடல்    புக்கிப்  பலவுயிர்
வித்துக்கொரு முத்திக் குருநபி
      எனவோதி
மத்திட்டுவ லித்துச் சிறுபுலி
கர்ச்சித்துமு ழக்கிக் குளறிட
மத்திட்டுடை பட்டுப்  புடைபெயர்
தயிரேபோல்
மக்கட்குறு  துக்கப் படலையொ
துக்கித்திகழ் சொற்கத்    தையுமுரி
மைக்கத்தொடு கற்பித் தருள்வது
வொருநாளே


இத்திருப்புகழ் உரையுடன் (ஓ/சி’யில் tamilvu’வில்) கிடைக்கவில்லை. அதனால் எனக்கு முழுவதுமாக அர்த்தமாகவில்லை.

அதென்ன அகற்றப்படவேண்டிய முக்குற்றம்?
’குருநபி’ என ஓதி, கடல்புக்கி மத்திட்டு வலிப்பது - உருவகமா, குறிப்பிட்டா கதைநிகழ்வா என்றும் புரியவில்லை. 


அதற்கு அடுத்த வரிகள் வசீகரமானவை
சிறுபுலி
கர்ஜித்து முழக்கிக் குளறிட
மத்திட்டு உடைபட்டுப்   புடைபெயர்
தயிரேபோல்
மக்கட்குறு   துக்கப் படலை
ஒதுக்கி திகழ் சொற்கத்தையும் 
உரிமைக்கத்தொடு கற்பித்து ருள்வது
ஒருநாளே



'சபாபதி' சாரங்கபாணி போல் பொருள் சொல்வதென்றால்:

மக்கட்கு உண்டான துக்கத்தை ஒதுக்கி, திகழ் சொர்க்கத்தையும்
உரிமையாக்கிக் கொள்ள கற்பிக்கிறார் கர்ஜித்து முழக்கும் குருநபி.
எதைப்போல?

மத்திட்டதும் கட்டித்தயிர் புடைபெயர்ந்து ஒதுங்கி, வெண்ணை
திரண்டு வருவதை வருவதைப் போல.


தமிழிலக்கியத்தில் மத்தால் தயிர் கடையப்படுவதை சஞ்சலத்தின்,
அலைக்கழிப்பின் உருவகமாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

மத்தார் தயிர்போன் மறுகுமென் சிந்தை மறுக்கொழிவி
(அப்பர்)
i.e. மத்தால் குழப்பப்படும் தயிர்போலச் சுழலும் என் சிந்தையின் கலக்கத்தை ஒழியச் செய்வாயாக
மத்துறு தண்தயிரில் புலன் தீக்கதுவக் கலங்கி
(மாணிக்கவாசகர்)

i.e. புலன்களாகிய நெருப்புப் பற்ற மத்தால் சுழலும் குளிர்ந்த
தயிரைப் போலக் கலங்கி
சீதையைப் பிரிந்து இராமன் படும் வேதனையை கம்பனின் அனுமன்
இவ்வாறு விவரிக்கிறான்
மத்துறு தயிர் என வந்து சென்று, இடை தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும் i.e. மத்தால் கடையப்படும் தயிர் பாத்திரத்தில் இங்கும் அங்கும் தத்தளிப்பதைப்
போல, இராமன் புலன்களும் உயிரும் (அவன் உடலில்) இங்கும் அங்குமாக
தத்தளிக்கின்றன.

இந்த அழகிய உருவகத்தின் எத்தனை ஆழமாக ரசிக்கப்பட்டிருக்கிறது என்றால்
மிகச்சமீப காவியமான ரட்சண்ய யாத்ரீகத்தில் கூட இது கையாளப்பட்டிருக்கிறது
(என்பதை தேடிச்சொடுக்கியபோது கண்டேன்). இங்கும்: மத்துறு தயிரென மறுகுஞ் சிந்தையான்

என்ற  வழக்கமான(!) உருவகம் தான்.

எல்லாரும் தயிர் கடையும் கலக்கத்தையே பாட, காசிம் புலவர் மட்டுமே
திரண்டு வரப்போவதை எண்ணிப் பாடினார்  என்று முத்தாய்ப்பு வைக்கச்சொல்கிறார் ஆசிரியர்.

பி.கு: மேற்சொன்ன நபிகள் திருப்புகழ் வரிகளை, குமரி அபூபக்கர் பாட இங்கு கேட்கலாம்.

Comments

  1. :) பார்த்து எச்.ராஜா வலைத்தளம் பக்கம் வரக்கூடும். நீண்ட காலமாகி விட்டது. Hope all is well.

    ReplyDelete
  2. மிக வெல்.
    As used to be said in the halcyon days of blogging, தொடர்ந்து எழுதுங்க தோழர்.

    To quote-twist அருணகிரி:

    (உங்கள் எழுத்து)
    வளைபட்ட கை மாதொடு மக்களெனும்
    தளைப்பட்டு அழியத் தகுமோ தகுமோ?

    ReplyDelete
  3. உங்கள் தயவில் நபிகள் திருப்புகழை இப்போதுதான் கண்டுகொண்டேன். முத்தாய்ப்பும் ஜோராகத் திரண்டு வந்துள்ளது.

    மத்துறு தயிர் என்று ஜெயமோகனின் சிறுகதை ஒன்றும் இருக்கிறதே. அதில் அவர் துக்கத்துக்குப் பின்னான தெளிவு என்று இதே கம்பராமாயணப் பாடலை வைத்துப் பேசுகிறார்.

    /பேராசிரியர் அவரே சொன்னார் ‘சோகம் வந்து உறுவது தெளிவு’ ன்னு அந்த பாட்டு ஆரம்பிக்குது கேட்டேளா? அந்த பாட்டுக்க அடுத்ததுதான் இது. மத்தால தயிரைக்கடைஞ்சா வெண்ணை வரும். துக்கத்தைக் கடைஞ்சாக்க வாறது தெளிவு. பால்கடலை கடைஞ்சுல்லா அமுதம் எடுத்தாங்க. அமுதம்னா சாகாமை. அதாக்கும் நான் சொன்னது துக்கம் ஏசுவுக்க காலடியிலே போய் சேருறதுக்குண்டான வழின்னு…டே, இப்பம் நீ சர்ச்சுக்கு போறதுண்டா?'/

    இதில் சர்ச்சும் வந்தாச்சு. மத்துறு தயிர் truly secular தான்.

    ReplyDelete
  4. Oh beautiful!
    அறம் வரிசை வரவர படிச்சது. பிடிச்சது.
    இந்த இடம் - most relevant here - நினைவே இல்லை!

    எதையுமே ஓரளவு படிச்சுட்டதா ஒரு சின்னஞ்சிறு நிறைவைக் கூட எய்திட முடியாது போலகுதே.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

Kamal - the writer/director

The Legend of Butler Kandappar