இரு நிலாக்கவிதைகள்
பசி-கிள்ளி அழுகிற
பசுங்கிளி குழந்தையின்
அழுகையை அமர்த்து
அமர்த்த -
டம்ளரில் மணியடி,
தாலாட்டு பாடு,
தோத்தோ கூப்பிடு,
பூனைக்கு பூச்சாண்டிக்கு
பின்னணி குரல் கொடு
கழுதை
என்னமும் செய்.
எனக்கொன்றும் இல்லை
ஆனால் ரேழிக்கு வந்து
நிலாக் காட்டாதே.
காட்டினால் எட்டு நாளைக்கு முன்
தட்டில் பூத்த
இட்டிலி ஞாபகம்
அதற்கு வரும்.
எல்லோரும் ஏறினால்
அப்புறம்
அழுகைப் பல்லக்கை
யார் சுமப்பார்கள்?
- கல்யாண்ஜி
கவிதை: அழுகைப் பல்லக்கு
தொகுப்பு: புலரி
உனைக்காணும் போதினிலே என்னு ளத்தில்
ஊறிவரும் உணர்ச்சியினை எழுது தற்கு
நினைத்தாலும் வார்த்தைகிடைத் திடுவ தில்லை
நித்திய தரித்திரராய் உழைத் துழைத்துத்
தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
சிறிதுகூழ் தேடுங்கால், பானை ஆரக்
கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!
- பாரதிதாசன்
புரட்சிக்கவி
Comments
Post a Comment