கணங்கள்


கழுவாத ஆஸ்பத்திரி வார்டுகள் -விழி
ஒழுகாது காட்சி தந்த முகங்கள்
முற்றத்தில் நிழலெறிந்த
பெயர்தெரியா மரங்கள்
முடிவும் முதலும்
என்றான கணங்கள் 
தேவகோட்டை வா.மூர்த்தி
(கசடதபற அக்டோபர் '72)


வாழ்க்கை - என்று துவங்க நினைத்த சொற்றடரை நிறுத்திவிட்டேன். சொல்லநினைப்பதைவிட பெரியதாக வந்துவிழுந்துவிடும். எனக்கு சொல்வதெற்குப் பெரிதாக எதுவும் இல்லை என்பதால் என்னிடமிருந்து பெரிதாக ஏதாவது புறப்படும்போது மிதமாக மிரண்டு மடையிட்டுக்கொள்கிறேன். (விட்டால் சுழித்துக்கொண்டு ஓட காத்திருக்கும் ஓடையைப் போல டாம்பீகமாக 'மடை' என்ற உருவகம் பாருங்கள். 'தாழ்' என்று எழுதினால் லட்சியத்துக்கு இழுக்கு வந்துவிடுமோ? சுட்டுப்போட்டாலும் இந்த அவையடக்கம் கைகூடுவதில்லை).

இப்படித்தான் எழுத நினைப்பதை எழுதத் தொடங்க, எழுதியதைப் பார்த்ததும் தோன்றுவதை எழுத...என்று பிரிந்து பிரிந்து போய் சொல்லவந்ததை விட்டுவிட்டோம் என்று தோன்றி - சொல்வதற்கு அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை என்பதை உணர்ந்து, முட்டி நின்றுவிடுகிறேன். ‘அதுசரி, அதற்காக அதன்போக்கில் விட்டுவிடுவதா; ஏழுகழுதை வயசாச்சு நினைச்சதை எழுதுற குறைஞ்சபட்ச ஒழுங்குகூட இல்லாம, இந்த மாதிரி தான்தோணித்தத்துக்கு பின்னால ஒளிஞ்சிக்கிறது?’. இந்த மாதிரி எழுத்துத்தமிழ்ல ஆரம்ப்ச்சு, பாதி வரி’ல ஆர்வமிழந்து பேச்சுத்தமிழுக்குக் குதித்துவிட்டதை இவ்வாறு லகான் போட்டு இழுத்து வழிக்குக் கொண்டுவந்தால், who-is-the-boss என்று எனக்கு நானே நிறுவிக் கொள்ளலாம்.
உச்சகமட்டாக இது தான் என் எழுத்து செய்யக்கூடியது.

ஆனால் இந்த அசட்டு அலைக்கழிப்புகளை நாளை படிக்க, எனக்கே ஆர்வம் இருப்பது சந்தேகம் எனும்பொழுது, இவற்றைப் போய் எல்லாருக்கும் படிக்கத்தருவதிலும் தயக்கம். எனக்கு இது மிகப்பிடித்தமான பேசுபொருள்: நான். அடுத்தவர்களுக்கு ‘எப்போது விஷயத்துக்கு வருவான் இந்த வளவளா’. 

இத்தகைய ‘சிந்தனை ஓடை’ எழுத்துக்களை இதைவிட சிறப்பாக எழுதிய பிறரது எழுத்தில், நான் அனேகம் ஆழ முடியாதபோது 'அடுத்தவர்கள் எழுத்தை திறந்த மனத்துடன் படிக்கும் யோக்யமான மனநிலை எனக்கு இல்லை' என்று உணர்ந்திருக்கிறேன். ஆர்வம் இல்லை என்று எழுதி இருக்கலாம், யோக்யதை எல்லாம் இழுத்து self-deprecatory பம்மாத்து செய்து, இப்போது ஆர்வமில்லாமல் படித்துக்கொண்டிருப்பவரை ‘யோக்யனாய் இருந்தால் ஆர்வமாகப்படி’ என்று சொல்வது எத்தனை அயோக்கியத்தனம்.

புன்முறுவலுடன், பணிவாகவும் மிக இயல்பாகவும் இதைச் செய்கிறேன் இப்போதெல்லாம் –அதுவும் பொய்: எப்போதுமே.

வாழ்க்கை – என்று ஆரம்பித்த இடத்திற்கு வருகிறேன். வாழ்க்கையின் கணங்களைப் பற்றி நாம் எழுதுவதில்லை. அர்த்தம் தான் இல்லை என்று எப்போதோ தீர்ப்பாகிவிட்டது. ‘மகத்துவமற்ற, குறிப்பிடத்தக்கவை ஏதுமற்ற (unremarkable) நிக்ழவுகளின் நீள்சரடு’ என்ற வர்ணணையே பழையதாகவும், உணர்வற்றதாகவும் இருக்கிறது. அந்த உணர்வின்மை பற்றி எந்தவித சோகமும் இல்லாமல், வெறும் asceptic observatioனாக அது இருக்கிறது. 

நம்மில் ஒருசிலர் நம் கணங்களுக்கு வெறுமை, தனிமை, மென்சோகம், நகைமுரண் - என்றெல்லாம் label ஒட்டியே தீருவேன் என்று அடம் பிடிக்கிறோம். அவற்றின் ஒரு கோணத்தைப் பெரிதாக்கி, அதன் உண்மைத்தன்மையோடு இயங்க (இணங்க?) மறுத்து சிரிக்கிறோம். 

பூஞ்சை மனமும், உற்சாகப்படுத்தித் தொலைத்துவிடும் இணைய நல்லுள்ளங்களும் வாய்த்த சிலர், கவிதை ஹோதாவில் இறங்கிவிடுகிறார்கள். அதன்பிறகு கணங்களின் முழுமை அவர்களை ஆகர்ஷிப்பதில்லை. அவற்றில் பொதிந்திருக்கும் கவிதைக் கூரே முக்கியமாகி விடுகிறது. தம்மேல் விழுந்து கவிதையாக புறப்படும் வஸ்துக்களாக கணங்கள் ஆகிவிடுகின்றன. கவிவாசகர்களை விட கவிஞர்களே நம் பரிதாபத்துக்கு உரியவர்கள் என்று அசப்பில் நினைத்துவிடுவோம்– அதுசரி, யாரய்யா அது அடுத்தவர் (புதுக்)கவிதைகளைப் போய் வாசிப்பது? அதுவும் இணையப்பெருவெளியில். 

சரி வாழ்க்கை என்ற பெரிய வார்த்தை’க்குப் பிடிகுடுக்காமல் ‘கணங்களு’க்குள் பதுங்கிவிட்டேன். அதுவும் கணங்களுக்குள் கூட அல்ல. கணங்களைப் பற்றி.
ஆனால் வாழ்க்கை பற்றி நமது நீட்டிமுழக்கல்களில் இல்லாமல், கணங்களில் தானே பொதிந்திருக்கிறது அந்தரங்கம்.  

அந்தரங்கம் என்றால் பெரிய நிகழ்வுகள் தானா என்ன? கணங்களைப் பற்றி நம் தயக்கங்களும், தேர்வுகளும், அவதானங்களும்... என்று வரும் எழுத்து பிரதிபலிக்கும் நம் மனநிலையை விடவா அந்தரங்கம்? வெட்டவெளியில் வைப்பது அதைத்தானே.

‘உன் கவிதைகளையே படித்துவிட்டேன், இதற்குமேல் உன்னைப் பற்றித் தெரிந்துகொள்ள என்ன இருக்கிறது’ என்று ப்யாஸாவில் குலாபோ வஹீதா, விஜய்  குருதத்தைக்  கேட்பதைப் போல் தானே ‘அந்தரங்கம்’. ‘அது எனக்கு ஏன் இவ்வளவு பிடிக்கிறது?’ என்று உங்களை இந்த ஒரு கணமேனும் சிந்திக்க வைத்துவிட்டதே சங்கோஜப் படுத்தும் அளவு அந்தரங்கத் திறப்பாக உணர்கிறேன். 

இது எத்தனை உணர்ச்சிப்பசப்பலான ஒரு காட்சி/படம். அதுவும் பலர் ரசித்த சராசரி ரசனையின் எடுத்துக்காட்டு. இது போய் உனக்குப் பிடித்ததென்றால் – என்று தராசு ஏறக் கூடிய அந்தரங்கத்திறப்பு. அவ்வளவு ஆர்வம் அடுத்தவர்கள் மேல் யாருக்கும் கிடையாது என்பதை உணர்வதால் மட்டும் தயக்கங்கள் கறைந்துவிடுமா என்ன? 

அதுபோலதான் vignettes. நாம் தேர்ந்தெடுப்பதைத் தான் பார்க்கிறோம். அவற்றில் ஒன்றைத் தான் எழுதுகிறோம். அந்தத் தேர்வுகளில் அப்பட்டமாக தெரிவதை விட அறிவால் (?) சட்டகம் வடித்து, 'நான் இன்னின்னதை அள்ளிக்கொண்டேன் பாரும்' என்று தீர்மானமாக சொல்லிவிட்டு, 'ஒரு மாதிரி சமாளித்துவிடலாம்' என்ற தன்னம்பிக்கையுடன்,  'இவற்றுக்கு அப்பால் நின்று கவனிக்கிறேனாக்கும்' என்று தெரிவிக்கும் விதமாக வாட்டமாக முத்தாய்ப்பு வைத்து எழுதும் எழுத்தில், என்ன நம்மை நாம் முன்வைத்துவிட முடியும்?

தமிழ் வலையுலகில் (என்றால் 'நான் படிக்கும்' என்ற முன்னொட்டை நீங்களே சேர்த்துக்கொள்ளவேண்டும், நானே சேர்த்து பாராட்டின் விசாலத்தைக் குறைக்க விரும்பவில்லை) எழுதுபவர்களில் ஒரு அழகான த்வனி உடையவர் @aravindmano. அவர் எழுதும் சிறுமழை தளத்தில் (வலைப்பூ'க்கு உருப்படியான ஒரு மாற்றுச்சொல் கண்டுபிடித்து தரும் வரை மொட்டையாக தள'த்தையே பாவிக்க உத்தேசம்) அவர் தேர்ந்தெடுத்து சித்திரிக்கும் கணங்கள் - சாதாரணமானவை. சாதாரணமானவற்றில் கவனிக்கவும் ஆழவும் லயிக்கவும் இவ்வளவு உள்ளனவே என்று அவர் நினைக்க வைக்கும் எழுத்துகள் அசாதாரணமானவை.

அவற்றை உங்களையும் படிக்கச் சொல்வதைத் தவிர நான் வேறெதுவும் சொல்லப்போவதில்லை. சொன்னால் என் குறுகிய அனுபவம் மட்டும் தானே அதில் தெரியும்.

...என்று நினைத்தேன். ஆனால், என் தளத்தின் வேறென்ன எதிர்பார்த்தீர்களாம்?
பெருஞ்சோகம் என்றெல்லாம் எதுவும் இல்லாத போதும், மனதின் மேல் வரும்  மேகமூட்டம் - செய்திகளில் சொல்வதுபோல - நாம் அறிந்ததே. அதைக் கலைப்பது நம் 'சக்திக்கு மீறிய செயல்' என்ற நம்பிக்கையும், 'எதற்கு கலைத்துக்கொள்ள பிரயத்தனப்பட்டுக்கொண்டு', என்ற சோம்பலும் கலக்கும்போது வரும் நிலையிலிருந்து அவர் எழுதுகிறார் என்று தோன்றுகிறது.

அங்கு உறவுகளும் உண்டு, எல்லைகளும் உண்டு, அவற்றின் சாஸ்வதமின்மையைப் பற்றிய ப்ரக்ஞையும் உண்டு. இவை 'அப்படி ஒன்றும் அலட்டிக் கொள்ளத்தக்க' தனித்தன்மை வாய்ந்த அனுபவங்களோ, மனநிலைகளோ இல்லை, என்ற புரிதல் உண்டு. ஆனால் 'இதைத் தான் உள்ளிருந்தபடியே பார்த்துக்கொண்டும், உணர்ந்துகொண்டும், வாழ்ந்துகொண்டும் இருக்கிறேன் என்பதே இதற்கு போதுமான தனித்துவம்', என்ற புரிதலும் உண்டு. இந்தப் புரிதல் அதற்கு பதில் அல்ல. இதுவும் கூடவே இருக்கிறது. அவ்வளவு தான்.


அவ்வளவு தான்.

Comments

  1. ஜெயமோகன் அசோகமித்திரன் எழுத்துக்களை பற்றி கூறும் பொழுது, அவை சிறு துளிகள் ஆனால் கடலை பிரதிபலிக்காத ஒரு துளி என்று சொன்ன ஞாபகம். ஒரு துளி துளியாகவே இருப்பதில் ஒரு அழகு இருக்கதான் செய்கிறது.

    அரவிந்த் அருமையாக எழுதுகிறார்.

    ReplyDelete
  2. >>ஆனால் இந்த அசட்டு அலைக்கழிப்புகளை நாளை படிக்க, எனக்கே ஆர்வம் இருப்பது சந்தேகம் எனும்பொழுது, இவற்றைப் போய் எல்லாருக்கும் படிக்கத்தருவதிலும் தயக்கம்>>

    :-) அதிலும் எல்லோரும் IPLபத்தி ட்வீட்டும் போது நடுவுல போய் லிங்க் வைக்கறதுல ஒரு தயக்கம் இருக்கே..


    >>பூஞ்சை மனமும், உற்சாகப்படுத்தித் தொலைத்துவிடும் இணைய நல்லுள்ளங்களும் வாய்த்த சிலர், கவிதை ஹோதாவில் இறங்கிவிடுகிறார்கள்>>

    உங்களோட சேந்து சேந்து நானும் இப்பல்லாம் இப்படி யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்.

    ReplyDelete
    Replies

    1. ஐயையோ...ஏன் கூட சேராதீங்க. ஊரைக் கெடுத்த பாவம் எனக்கு எதுக்கு.
      மேலும், நான் உபதேசம் பண்ணிட்டு கூச்சமில்லாம டபக்குன்னு ரசிச்சிருவேன் (இந்தப் postக்கு epigraphஃபே கவிதை தானே!).

      என்ன முழுசா நம்பிடாதீங்க, அவ்வளவு தான் சொல்லுவேன் :-)

      Delete
  3. நன்றி :-)

    உண்மையில் என்ன சொல்வதென்று தெரியவில்லை, கொஞ்சம் வியப்பாகவே இருக்கிறது - குறிப்பாக எந்த நிலையில் அவை எழுதப்படுகின்றன என்ற உங்களின் அனுமானமும் கடைசி பத்தியும். நீங்கள் மிகச் சரியாக அளவிட்டிருப்பது கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. (எழுத்துத்தமிழுக்கு மாறி விட்டேன்).

    அந்தரங்கத் திறப்பு சங்கோஜம் ஒவ்வொரு முறையும் தடுத்தாலும், ‘இதக் கதயா எழுதியிருக்கலாமே’ என்று ஒவ்வொரு முறையும் யாரேனும் கேட்டாலும் விடாப்பிடியாக இந்த வடிவத்தை கட்டிக்கொண்டு அழுதுகொண்டிருந்தேன். அவ்வப்போது சிலர் வடிவத்தை குறிப்பிட்டு மகிழ்ச்சியை தெரிவிக்கும் பொழுது நிம்மதிப் பெருமூச்சே வந்துவிடுகிறது.

    தொடர்ச்சியான ஊக்கத்திற்கு நன்றி. இந்தப் பதிவை எதிர்பார்க்கவில்லை. தன்யனானேன்.

    ReplyDelete
    Replies

    1. உங்கள் பாணியில் இதற்கு react செய்வதென்றால்: Yay!

      Delete
  4. சார் கணங்களால் நிறைந்த வாழ்க்கைல நீந்தலேனா மூழ்கிருவோம், நீந்தினா நகர்ந்து போயிருவோம்; நகராம நீந்தினா கூடவர உறவுகளும் நிக்குமானு தெரியாது; கணங்களை அதன் உண்மைத்தன்மையோடு இயங்க மறுக்கறது தற்செயல் இல்ல; கணங்கள கடந்துபோறதுதான் வாழ்க்கை; As Lester Freamon says in "The Wire" - "A life, Jimmy, you know what that is? It's the shit that happens while you're waiting for moments that never come."

    ReplyDelete
    Replies
    1. //கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
      நீர்வழிப் படூஉம் புணைபோல்//

      கல் மேல எல்லாம் முட்டி மோதி அதும்பாட்டுக்க வரும் randoமா வர்ற பேராறு-ன்னு உலகப்புகழ் 'யாதும் ஊரே'ல கணியன் பூங்குன்றன் சொல்லிட்டு போயிட்டார்.

      தனியனா ஒரு மிகை தைரியத்தோட யோசிக்கலாம் தான்.

      ஆனா பின்னிப்பிணைஞ்சு இல்லை வாழுறோம். மாறாத நிலத்துக்கு நடுவே நமக்கு நிகழ்வது பேராறு போன்ற வாழ்க்கை'ன்னாக்கூட பரால்ல. ஆளுக்கொரு பேராறு, நிலம்னே ஒண்ணு கிடையாது'ன்னும்போது லைட்டா கிறுகிறு'ன்னு வருது :-)

      Delete

Post a Comment

Popular posts from this blog

Will KamalHassan apologise for Mahanadhi ?

Judex Ergo Sum

Kamal - the writer/director