ஷோக்குக்குத் தான்யா மதிப்பு
வாதாம் பலகலை கற்றுவந் தாலுமிவ் வையகத்தில் ஏதாம் புனைநலம் இல்லான் எழில்? நல் லிடமுந்தந்து பீதாம் பரற்கொரு பெண்தந்த பாற்கடல் பின்புவந்த வேதாந்த வித்தெனும் வானாம் பரற்கு விடந்தந்ததே விளக்கம்: ஒன்றோடொன்று மாறும்படியான பல கலைகளை கற்று வந்தாலும் (கற்று உவந்தாலும்) இவ்வுலகத்தில் ஆடையணிகளால் நிறைந்து விளங்கும் தோற்றம் இல்லாதவற்கு அமைந்த அழகால் என்ன பயனாம்? பீதாம்பரத்தை தரித்து வந்த திருமாலுக்கு பாயல் கொள்ள நல்லதோர் இடத்தோடு திருமகளையும் தந்த பாற்கடலானது , பின்பு (பாம்பணிந்து, புலியதளாடை தரித்து வந்த) வேதாந்தத்திற்கு முதல்வன் என்னும், வானத்தை ஆடையாகத் தரித்த சிவபெருமானுக்கு விஷத்தை அல்லவோ தந்தது! - தனிப்பாடற்றிரட்டு தஞ்சை சரசுவதி மகால் நூலகம்