Thursday, November 24, 2011

விசிஷ்டாத்வைதம்யாங்களே

அப்படின்னா என்ன?

படித்ததில் பிடித்த ஒரு விளக்கம் இது:

ராமானுஜ கோட்பாட்டை ஓர் உவமை மூலம் விளக்கலாம். கடலில் வாழும் மீன் அறியும் கடல் என்பது அது புழங்கும் சிறிய நீர்ப்பரப்பும் மணலும் பாறைகளும் மற்ற மீன்களும் அதுவும் மட்டுமே. ஆனால் அதுவல்ல கடல். அதேசமயம் அது கடலும் கூடத்தான். மீனறியும் கடல் பொய்யோ மாயையோ அல்ல. அது உண்மை .கடல் என்ற பேருண்மையின் ஒரு பகுதியான சிறு உண்மையே மீன் அறியும் கடல்.

"தத்துவ ஆழங்களுக்கெல்லாம் செல்லும் அளவிற்கு தெம்பு இல்லை, எது எது எது எது என்று சுருங்கக் கூறுங்களேன்'" என்று மேலோட்ட ஆர்வம் உள்ள பலர் உளர்/ளோம்.

அப்படிப்பட்டவர்கள் நேராக நம்மாழ்வாரைப் படித்து புரிந்துகொள்ளலாம் என்று நினைத்தால் கொம்பு தான். நான் படித்தவரை, நம்மாழ்வார் பாடல்கள் பல, யாராவது சொல்லிக்கொடுக்காமல் புரிந்துகொள்ளமுடியாது. பிற ஆழ்வார்களும் இதுபோல 'விஷயம் தெரிந்தவர்களுக்கு மட்டும்' என்று சில எழுதியிருக்கிறார்.

'எளியோர் அறிந்துகொள்வதற்கே இதிகாசங்கள்' என்பதற்கு எடுத்துக்காட்டாய் இன்று கம்பனில் இரண்டு பாடல்கள் படித்தேன்.

யுத்தகாண்டத்தில், இரணியன் கதையை வீடணன் இராவணனுக்குச் சொல்கிறான். அதில் நரசிம்ம அவதாரத்தைப் பார்த்து பிரமித்து பிரம்மன் சொல்வதாய் வரும் பாடல்கள் இவை:
பேரை ஒரு பொருட்கே பல் வகையால் பேர்த்து எண்ணும்
தாரை நிலையை; தமியை; பிறர் இல்லை;
யாரைப் படைக்கின்றது? யாரை அளிக்கின்றது?
ஆரைத் துடைக்கின்றது? - ஐயா! - அறியேமால்

எல்லாமே ஒரு பொருள் தான். பல பெயர் வைத்து தனித்தனியாக எண்ணுகிற (to count, to think -இரண்டு பொருள்களுமே பொருந்தும் என்று தோன்றுகிறது) சரியான நிலையை உடையவனே. உன்னைத் தவிற பிற(ர்) இல்லை. (உன்னையன்றி தனியாக நீ) யாரைப் படைக்கிறாய், காக்கிறாய், அழிக்கிறாய். யாம் அறியோம்.
'"நின்னுளே என்னை நிருமித்தாய்; நின் அருளால்,
என்னுளே, எப் பொருளும், யாவரையும் யான் ஈன்றேன்;
பின் இலேன்; முன் இலேன்; எந்தை பெருமானே!
பொன்னுளே தோன்றியது ஓர் பொற்கலனே போல்கின்றேன்."


இது, விளக்கம் இல்லாமலே புரியும் என்று நினைக்கிறேன்.

கடைசி வரி மிக ரத்தினச் சுருக்கமாக தத்துவத்தைச் சொல்கிறது: பொற்கலன் (பொன்னால ஆன அணிகலன்) பொன்னிலிருந்து தோன்றியது தான். நாம், ஒரு வசதிக்காக, தனியாக "பேர்த்து எண்ணுகிறோம்". பொற்கலம் அந்த மூலப்பொன் அல்ல. தனித்தன்மை வாய்ந்தது. அதன் தனித்தன்மை பிழையான புரிதலால் விளையும் ஒன்றல்ல. அதன் தனித்தன்மையும் உண்மை, அது பொன்னால் ஆனது என்பதும் உண்மை.

Disclaimer: "அணுகுண்டு செய்வது எப்படி என்று மூன்று வரிகளில் எல்லாம் சொல்லிவிட முடியாது. கொஞ்சம் யுரேனியம் எடுத்துக்கொள்ளவும், பாஸ்ஃபரஸ் கலந்து இடிக்கவும் என்று" என்று சுஜாதா ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

அதுபோல இதைப் பற்றியெல்லாம் இவ்வளவு சுருக்கமாக உருப்படியாக எதுவும் எழுதிவிடமுடியாது. படித்ததும் தோன்றியதைப் பகிர்ந்துகொள்வதற்கு பயன்படாவிடில் வலையுலகில் இந்த சொந்தச்சுவர் எதற்கு?

2 comments:

  1. Emergent properties எனலாமா?

    ReplyDelete
  2. புரியவில்லை..ஆனால் நல்ல முயற்சி..:)

    ReplyDelete