ரோஜா ராஜா

Why couldn't a girl be queenly, and give the gift of herself- DH Lawrence (Lady Chatterley's Lover)

ராணியை ராணியாகவே வைத்துக்கொண்டு ரசிக்க, ராஜா வேண்டுமே.

என் இசை ரசனை கொஞ்சம் மட்டு என்று பலமுறை அங்கலாய்த்திருக்கிறேன். இதைக் கேட்டுக் கேட்டு எரிச்சலடைந்த நண்பர்கள் தவிற, புதுஅறிமுகமாக கிடைக்கும் (சிக்கும்?) meesicalகள் 'இசையை ரசிக்க இரு காதுகள் இருப்பதே போதுமான தகுதி' என்பது போன்ற தாட்சண்யமான வார்த்தைகள் சொல்லி உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள்.'படிப்பதற்கு இரு கண்கள் போதும்' என்று யாரையாவது நான் மனமாற சொல்லமுடிந்தால்தான் பிரபஞ்சம் சமநிலை எய்தும்.

நல்லிலக்கியம், உலக சினிமா என்று என் கழிவிரக்கப் பட்டியல் நீளமான ஒன்று. அவ்வப்போது வெளிப்படையாகவும், க்ரூரமாகவும், பூடகமாகவும் இதைத் தெரிவித்துக்கொண்டு வருகிறேன். என் ரசனையின் நிறைகுறைகளைப் பற்றி, படிப்பவர்களுக்கு நிறைய அக்கறை உண்டு, என்று ஏனோ எனக்கொரு நம்பிக்கை.

இசையைப் பற்றிப் பேச போதுமான vocabulary என்னிடம் இல்லாத நிலையில், அது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி மட்டுமே ஓரளவேனும் சொல்ல இயலும். அதிலும் சாகரத்தில் மூழ்காமல் அலைகளில் மட்டுமே கால்நனைத்தவனின் lack of proportionஇலிருது தப்புவதற்கில்லை. இவற்றையெல்லாம் மீறி இதை எழுதக் காரணம்: ரோஜாப் பூ ஆடிவந்தது (அக்னி நட்சத்திரம்).

ceteris paribus, தலைவனுக்காக தலைவி ஏங்குவது என்பது தலைவிக்காக தலைவன் ஏங்குவதைக் காட்டிலும் கண்ணியக்குறைவானது என்ற எண்ணம் பொதுபுத்தியில் உள்ளது (என்னமோ அப்புத்தியிலிருந்து எனது மிக வித்தியாசமான ஒன்று என்று காட்டிக்கொள்ள முனைகிறேன் வாசகரே, கவனம்).

பெண்ணை எளிதான கிடைபொருளாகச் சித்தரிப்பதிலுள்ள பொய்யும், முரணுமே erotica-வின் வேர். நெருக்கத்தில் மட்டும் திறக்கும் மடையை அடைக்கும் சமூகத் தாழை, பொதுவில் விலக்கும் பாவனை செய்யும் படைப்புகளுக்கு ஒரு பாரம்பரியம் உண்டு. (இவ்விடத்தில் சங்ககாலம், விக்டோரிய ஒழுக்கக்கோட்பாடு பற்றியெல்லாம் அளக்கவேண்டியது கட்டுரையாளனின் கடமை. ஆனால், அவற்றைப் பற்றி உறுதியான ஒற்றைப் பரிமாண வரலாற்றுப் புரிதல்களை எட்டிவிடும் நம்பிக்கை எனக்கு இல்லை என்பதால் நீங்கள் பிழைத்தீர்கள்.)

நெருக்கத்தில் வெளிப்படும் தன்மையை இயல்புச்(!) சமநிலையிலிருந்து நோக்கும்போது கிடைக்கும் தோற்றமே வேறு. பல சமயம் அத்தோற்றம் அருவருப்பானது. ஆண் தன்னைப் பற்றியே மிக வித்தியாசமாகமாக உணரக்கூடிய சிந்தனைப்பாதை அது. ஆனால் அந்த சுயபரிசீலனை (introspection) மூலம், 'பெண்ணின் தன்மைமுரணை'ப்பற்றி ஆணுக்குத் தோன்றும் சிந்தனைகள் மட்டுப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மிகையே :-)

Life is Elsewhere என்ற புதினத்தில் மிலன் குந்தெரா இப்படிச் எழுதுவார்: a great love, which abruptly arrives like a lightning bolt, frees a woman at one stroke from all shame and inhibition.... love frees in her such a powerful source of unexpected inspiration that her spontaneous behavior can resemble the expert procedures of a depraved woman.

இதில் உள்ள depraved woman என்கிற பதத்தைக் கூட ஒரு ஆணீயப் பார்வை என்று இன்று சொல்லலாம் தான்.

நெருக்கமற்ற சூழல்களில் 'வேட்கை அழைப்பாக' தொனிக்கும் பாடல்களில் மிகைக்கற்பனை/அதீத சித்தரிப்பு இருப்பது ஏன்? அதன் கண்ணியமின்மையும் ரசிகானுபவத்தின் பகுதியாக இருப்பதால் தான்.

'என்னுள்ளே என்னுள்ளே' பாடலை கண்ணியக்கொழுந்தாகவும், முனகல்மிகு 'ஏகாந்த வேளை' பாடலை கண்ணியலோபமாகவும் நாம் கருதுவது இயற்கைதானே. இரண்டாம் வகைப் பாடல்களை ஆத்மார்த்தமாக ரசித்தவர்கள் அரிதாக இருக்கலாம். என்னதான் இசை, 'புத்தியின் குறுக்கீடு இல்லாமல் ரசிக்கப்படக்கூடிய ஒரே கலை' என்றாலும், ஏதோ ஒரு வகையில் இரண்டாம்வகைப் பாடல்களை ரசிப்பதில் ஒரு குறுக்கீடு இருக்கத் தான் செய்கிறது. செய்நேர்த்தியை, அதன் patently trashy-தன்மையை மிகுந்த பிரக்ஞையுடன் தான் ரசிக்கிறோம்.

இவ்வகைப் பிரிவினைகளில் தெரிவது நமது மேற்பூச்சு மாயைதான். நாகரீகம் என்பது மேற்பூச்சு சம்மந்தப்பட்டது என்பதால், இதை ஒதுக்கிவிடமுடியாது. இப்போது பாட்டுக்கு வருகிறேன் (ஒரு வழியாக!)

ரோஜாப்பூ முதல்வகை வேடம்பூண்ட ஒரு இரண்டாம்வகைப் பாடல். "தாகம் தீருமா" என்ற சீண்டும் வரியைத் தவிற தொனியில் வெளிப்படையான சுண்டியிழுப்புகளும் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. வரிகள் நேரடியானவை, எவ்வித பூடகமான குறிப்புணர்த்துதல்களும் கையாளப்படவில்லை. வேகமான மெட்டு, தாளவாத்தியங்கள் , இடையிசைச் சரங்களில் (interludes) உள்ள ஒரு வித துள்ளல் தன்மை (celebratory) எல்லாம் ஒரு வித 'சுத்திகரிப்பை' சாதிக்கின்றன.

நமது கண்ணியத்தயக்கத்தை bypass செய்து 'நேரடியாக' ரசிக்க செய்திருக்கிறார்.
ராஜா.

பின்குறிப்பு
1) இத்தன்மை இப்பாடலுக்கு பிரத்யேகமானது என்று சொல்லவில்லை. இதுபோல பற்பல இருக்கலாம். இப்பாடல் பற்றி இவ்வாறு தோன்றியது. இங்கே இறக்கி வைத்து விட்டேன்.
2) இத்தன்மை இப்பாடலின் attribute அல்ல, எனது மிகைவாசிப்பே என்பீர்களாயின்: இருக்கலாம். 'பிடித்துப்போவதற்கெல்லாம் வியாக்கியானம் தேடக்கடவது' என்றொறு ரிஷி போன ஜென்மத்தில் என் மீது கமண்டலநீர் எரிந்திருக்கலாம். என்னைச்சொல்லி குற்றமில்லை, ரிஷிபத்தினி இதுபோல ஒரு பாடலப் பாடியிருந்திருக்கலாம். :P
3) Those interested in real stuff should of course delve into this thread: Raja of Erotica

Comments

  1. I have read this when you posted it in the forum. Good that you have recorded it here as well for a wider audience.

    As that Raja thread tries to establish, Raja was one of the very few music directors who did not shy away from erotica, if we may call it so. The passion of lovers seems to have intrigued and inspired him and he has multitude of tunes for such passionate occasions. Whether it be the hidden passion or whether it be very explicit passion, Raja had a tune for it. And as you rightly pointed out, he can hide one behind the other!!

    ReplyDelete
  2. //Whether it be the hidden passion or whether it be very explicit passion, Raja had a tune for it.//


    காளையர்கள் காதல் கன்னியரை கவர்ந்திட பாடல் கேட்டார்கள்
    ஏழைகளும் ஏவல் அடிமைகளாய் இருப்பதை பாட சொன்னார்கள்
    கதவோரம் கேட்டிடும் கட்டில் பாடலின் மெட்டு போட சொன்னார்கள்
    தெருவோரம் சேர்ந்திட திருவாசகம் தேவாரம் கேட்டார்கள்
    நான் பாடும் பாடல்கள் அந்த ஏடுகள் அதை எழுதினாலும் முடிந்திடாது

    ReplyDelete
  3. forgive this compulsive nitpicker but its 'நான் படும் பாடுகள்'

    ReplyDelete
  4. அகப்பொருள் நூல்களிலும், திருக்குறளிலும் (படர்மெலிந்திரங்கல், பசப்புறுபருவரல் மற்றும் பல) தலைவி வேட்கையுடன் கூறியவை பல உள்ளன. ஆனால் அங்கு "நெருக்கமற்ற சூழலும்" இல்லை. அவை "அழைப்பாகவும்" இல்லை என்று கொள்ளலாமோ? வேட்கை அழைப்பாக உள்ள திரைப்பாடல்கள் பல உள்ளன. நீங்கள் சொன்னது போல நாகரிகம் என்பது மேல் பூச்சு. அதனால் அது தேவை இல்லை என்று கொள்வதற்கில்லை. (ஆடை என்பதே நாகரிகம் சார்ந்தது தானே!) இங்கு வேட்கையை வெளிப்படுத்தும் விதம் முக்கியமானதாகிறது. என் வீட்டில் "அய்யோ பத்திகிச்சு பத்திகிச்சு" பாடலை கேட்கவே விட மாட்டார்கள். (என் அம்மா தான்!) "ரோஜாப்பூ ஆடி வந்தது" பாடலுக்கு எந்த தடையும் இல்லை. வார்த்தைகளை இசை மூழ்கடிக்கும் பொழுது வேட்கை தாகம் வெளிப்படுவதாகவே தெரிவதில்லை அங்கு..! பல "கசமுசா" பாடல்கள் கூட இசையினால் நாகரிகம் ஆக்கப்படுகின்றன!

    // இடையிசைச் சரங்களில் (interludes) உள்ள ஒரு வித துள்ளல் தன்மை (celebratory) எல்லாம் ஒரு வித 'சுத்திகரிப்பை' சாதிக்கின்றன. //

    உண்மை!

    ReplyDelete
  5. Kiruba, well caught. எங்கேந்தோ எடுத்து ஒட்டினேன்.

    வந்தியத்தேவன், நல்வரவு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

The Legend of Butler Kandappar

Kamal - the writer/director