கடும்நகை

         சாப்பிடுவதைக் குத்திக் காண்பித்தாலே குமரேசனுக்கு கோபம் வரும்.
"வடிச்சதெல்லாம் தா இதே முளுங்கிருச்சு" என்று அக்காள் விளையாட்டாக ஒரு முறை சொல்லப்போக, இரண்டு நாள் சாப்பிடாமலே இருந்துவிட்டான் குழந்தை.
முதல் நாள் யாரும் பெரிதாக கவனிக்கவில்லை. இரண்டாம் நாள் வீடு இறுக்கமானது. அம்மா மிரட்டினாள், கெஞ்சினாள்; அப்பா முதுகில் ரெண்டு போட்டார் ஒன்றும் மாறவில்லை. அக்காவை கன்னத்தில் விட்டார், அவள் அழுதுகொண்டே வந்து மன்னிப்பு கேட்ட பிறகு தான் சாப்பிட்டான். எல்லோரும் இலேசானார்கள், அப்பாவைத்தவிற . "இவ்வள வீம்பு நல்லதுக்கில்லடீய்" என்று கோபமும், பயமும் கலந்த தொனியில் அம்மாவிடம் சொன்னார்.



      பிறகொருமுறை சத்துணவு வேளையில் வாத்தியார் ஏதோ சொல்லப்போக கடுங்கோபத்தில் புதிதாக கற்றுக்கொண்டிருந்த ஒரு வட்டாரச்சொல்லை உதிர்த்தான். சக மாணவர்களின் குபீர்ச்சிரிப்பில் ஆசிரியர் சற்று திடுக்கிட, புளிய மிளார் அகப்படுவதற்குள் சுள்ளான் ஓட்டம் பிடித்துவிட்டான்.

       அதெல்லாம் ஒரு காலத்தில். சேந்தம்பட்டி முத்தைய்யன் செட்டுக்கு வாழ்க்கைப்படுவதற்கு முன். இப்போது எல்லோருக்கும் முன்னால் அந்த தங்கவேலு இவன் சாப்பிடுவதைப் பற்றி தரம்தாழ்ந்து பேசினாலும் சோற்றோடு அவமானத்தையும் சேர்த்து சாப்பிடவேண்டியிருக்கிறது.

        இங்கு வந்து சேர்ந்து விளையாட்டாக ஆறு வருடம் ஆகிறது. இன்னும் சேர்ந்தபோது இருந்த பொடியனாகவே அவனை இச்சூழல் நினைக்க வைக்கிறது. இத்தனைக்கும் இன்னொரு நாயனம் ஊதும் மாணிக்கண்ணனுக்கு இப்போதெல்லாம் நெஞ்சடைப்பு ஏற்படகிறது. ஊதும்போது ஒரு கரட்டுத்தனமான இரட்டை 'குரல்' கேட்கிறது. அதனால் குமரேசன் முதல் நாயனமாகிக்கொண்டு வருகிறான். ஆனாலும் இவர்களுக்கு அவன் சிறுபயல் தான். மற்றவர்கள் தன்னை சின்னவனாக நடத்துவதில் அவனுக்கு அதிக பிரச்சனை இருந்ததில்லை. அதற்குத் தோதாக ஒரு குழந்தைத்தனத்தை தன் சுபாவத்தில் கூட ஏற்படுத்திக் கொண்டு விட்டான்.

      ஆனால் இரண்டாந்தவில் தங்கவேலு வேறு ரகம். ஏனோ வந்த நாள் முதல் அவனுடன் இடக்கு தான். முத்தையண்ணன் தன்னை குழுவில் சேர்த்தது இந்த ஆளுக்கு இவனைப் பிடிக்கவில்லை. எடுபிடி வேலைகள் குடுக்கலானான். இவனால் குழுவில் எல்லோரும் குடுக்க ஆரம்பித்தார்கள். முத்தையண்ணன் இப்படியெல்லாம் செய்ய மாட்டார் ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளவும் மாட்டார்.

     தங்கவேலு வாசிக்கும் நடை சுத்தம் இல்லை என்பது இவனுக்குத் தெரிந்த அளவு முத்தையண்ணனுக்கும் தெரிந்திருக்கும். ஆடுவது அவர்தானே. பல இடங்களில் நடனத்தில் வேகத்துக்கு ஈடு குடுக்காமல் வருவதை சுட்டிக்காட்டுவார்.

"இந்த இடத்துல கொஞ்சம் குறையுதண்ணே"  என்று முதல்முறை சொன்னதும்
"சரி தம்பி" என்று கேட்பதைப்போல் சொல்லிவிட்டு அப்படியே வாசிப்பான்.

இரண்டொருமுறை பார்த்துவிட்டு அந்நடைக்கு ஏற்றபடி தன் ஆட்டத்தைத் தளர்த்திக்கொள்வார் முத்தண்ணன். மேலே தொடர்ந்தால், "இதுக்கு இதேன் தம்பி சரியா வரும்" என்று பதில் வரும்.

ஏன் இது போன்றவர்களை சகித்துக்கொள்கிறார் இவ்வளவு நல்ல ஆட்டக்காரர் என்று குமரேசனுக்குப் புரிந்ததில்லை.

    குமரேசனின் தந்தையும் ஒரு கலைஞர் தான். அவர் நாதஸ்வரத்துக்குப் பக்கம் வாசித்துக்கொண்டிருந்தவர் கொஞ்சம் தாளம் தப்பினாலும் மேடையிலேயே திட்டு விழுவதைப் பார்த்திருக்கிறான் குமரேசன். தனது பன்னெண்டாவது வயதில் தந்தையை இழந்தபோதிலிருந்து அவனுக்கு ஒரு பெரியமனுஷத்தனம் வந்தாகிவிட்டது.

    சொத்தோ, நிலமோ விட்டுச்செல்லும் சாதாரணத் தந்தையாக இல்லாமல் நாதஸ்வர பரிச்சயத்தை விட்டுச்சென்றிருந்தார். மிகுந்த நளினத்துடன் அவன் தந்தை வாசித்த 'ஆயிரங்கண் போதாது" பாட்டு அவனுக்கு நினைவிருக்கிறது.

    தேரனூர் ராமர் கோவில் உற்சவத்தில் அவர் வாசித்ததைக் கேடடு, வந்திருந்த கலெக்டர் மறுமுறை வாசிக்கச் சொல்லிக் கேட்டது அவனுக்கு முக்கியமான நினைவு. அவனுக்கு அப்போது பத்து வயது, தந்தை அரங்கேற்றிய நளினங்களை அவன் உள்வாங்கியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஒரு ஊதாங்குழலுக்கு கிடைத்த மரியாதையை அவன் நன்கு மனதில் பதித்திருந்தான்.

    ஆனால் இன்று அவன் வாசிப்பது நாதத்தின் ஆழத்தை முன்னிறுத்தும் இசை அல்ல. தெருவில் ஆடும் ஆட்டத்திற்கு ஒத்திசை. யாரும் மறுமுறை வாசிக்கக்கேட்பதில்லை ('ஆயிரங்கண்' வாசிக்க தான் அப்பா இல்லை என்பதும் இவனுக்குத் தெரியும்), முதல் முறை கேட்டாலே பெரிய விஷயம்.

    நடுநாயகம் இல்லாததால் குறைவாக எண்ணிவிட முடியாது. தெருவில் ஆடுவது என்றாலும் ஊரே கூடி ரசிக்கிறது. திருவிழாக்களில் இசைக்கச்சேரிக்கு கூடுவதை விட இங்கு தான் அதிக மக்கள் வருகிறார்கள். அந்த அளவில் தான் இன்னமும் கலை சோபிக்க, மக்கள் மனமகிழ்வுக்கு ஏதோ செய்துகொண்டிருப்பதாய் நம்பலாம் தான். ஆனால் இதில் எத்தனை கூட்டம் முத்தையண்ணன் ஆட்டத்தைப் பார்க்கவும் அதன் ஒத்தாக இவன் சார்ந்த குழு எழுப்பும் இசையைக் கேட்கவும் வந்தது, எத்தனைக் கூட்டம் சரசாவின் ஆட்டத்தைப் பிரதானமாகக் கொண்டு வந்தது என்பது சங்கடமானக் கேள்வி தான்.

     அப்பா இதை எந்த அளவுக்கு மரியாதையானதாக நினைப்பார் என்று அவனுக்கு சில சமயம் தோன்றும். அதே கலெக்டர் தன் வீட்டுவிழாவுக்காக சொல்லிவிட, "கல்யாண நாயனமெல்லாம் வாசிக்கிறதில்லீங்க" என்று நேராக சொன்னவர் அவர்.

  "  ஆமாம், நட்டாற்றில் விட்டுவிட்டு செத்துவிட்ட மனுஷன் என்ன கேள்வி கேட்பது ? இப்படி ஊதித்தான், உன் பெண் ஒருத்தியை கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறேன்"
என்று பதில் கூட சொல்லலாம். ஆனால் பதில் என்பது பிறருக்கு சொல்லக் கூடிய ஒன்று மட்டுமே.

       என்றைக்காவது கச்சேரி வாசித்துவிடலாம், இப்போது அன்றாடத் தேவைகளுக்கு ஆகட்டும் என்று ஆரம்பித்து ஒரு மாதிரி இதே நிலைத்துவிட்டது. தங்கவேலின் ஏளனம் நிலைத்துவிட்டது (அது குழுவினர் எல்லோருக்கும் தொற்றிக்கொண்டுவிட்டது).

    விளையாட்டாக சொல்லுவதுபோல பாசாங்கு செய்தபடி ஒரு வன்மத்துடனே தாக்கிவந்தான். ஒரு சில முறை முத்தையனிடம் இந்த பேச்சுக்களைப் பற்றி சொல்லியும் பயனில்லை. அவருக்கு ஆயிரம் கவலைகள். "நீயே சமாளித்துக்கொள்" என்பதுபோல சொல்லிவிட்டார்.

      சாப்பிடுவது, தூங்குவது, வாசிப்பது,பயணிப்பது என்று அவன் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் ஆக்கிரமித்து சிறுமைப்படுத்தி வருவதையே தொழிலாகக் கொண்டிருந்தான். சரசு குமரேசனிடன் அணுக்கமாகப் பேசுவதைக் கண்ட நாள் முதல் கொச்சையின் உச்சத்திற்கே சென்றுவிட்டான். சொல்லடிகள் தவிற பொதுவில் கையால் அடிப்பது கூட சாதாரணமாகி விட்டது. செட்டில் பிறர் இதை விளையாட்டாக எடுத்துக்கொள்ளும்படியான ஒரு தோற்றம் வருமாறு செய்தான். ஒவ்வொரு சமயம் இந்தச் சனியனையெல்லாம் விட்டுப் போய் விடலாம் என்று தோன்றும்.

     ஆனால் அக்காளைப் போல தங்கைக்கும் ஒன்று முடித்துவிட்டுப் போகலாம். தவிற, இப்போதெல்லாம் ஆட்டக்கார்களைக் கூப்பிடுவது கூட குறைந்து வருகிறது. சினிமாப்பாட்டு கச்சேரிகள் வைத்து முடித்துவிடுகிறார்கள். அதனால் வேறு குழுக்கு மாறுவது அவ்வளவு எளிதல்ல. மேலும் யாரும் முத்தையன் போல காசு விஷயத்தில் நாணயமாக நடந்துகொள்வதில்லை.
**

      அடுத்த வாரம் தான் கச்சேரி. நாளை முதல் புதுப்பாட்டு பயிற்சி என்று முத்தையண்ணன் சொல்லியிருக்கிறார். இன்று சாப்பிட்டுவிட்டு ஏதாவது சினிமாவுக்கு போகவேண்டும். இதற்கும் ஏதாவது சொல்லுவான் - ஏதோ இவன் காசை செலவழிப்பது போல. கொஞ்ச நேரம் காலாற நடமாடிவிட்டு வரலாம் போல இருந்தது. வீட்டுக்குள்ளிருந்து வெளிப்பட்டபோது தங்கவேலு வலப்பக்கத் திண்ணையில் அமர்ந்து பல் குத்திக்கொண்டிருந்தான்.

      அதில் கூட ஒரு அலட்சியமும், அகம்பாவமும், பிறரை ஆட்டுவிக்கும் தோரணையும் இருப்பதாகத் தோன்றியது இவனுக்கு. இதற்கு ஏதாவது செய்துவிடவேண்டும் என்று தோன்றினாலும் 'இவன் கொட்டத்தை அடக்கும்' அளவுக்கு தான் ஒன்றும் செய்துவிடமுடியாது என்றும் தோன்றியது.

   ஆற்றாமையும் சுய-பச்சாதாபமும் ஒருசேர எழ, இங்கிருந்தால் எரிச்சலாக இருக்கும் என்று அங்கிருந்து நகர முனைந்தான். தன்னளவில் இயன்றவரையில் ஏதாவது செய்துவிட வேண்டும் என்று உறுதியாகத் தோன்றியது.


"டேய் நாதஸ்..." தங்கவேலு குரல் கொடுத்தான். கையை பைக்குள் விட்டுத் துழாவி ஒரு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டியபடி சொன்னான், "போய் ரெண்டு பளம் வாங்கிட்டு வா"

Comments

  1. டகால்டியான கதை :-) ஓரு நகைச்சுவை காட்சிக்கு இப்படி ஒரு பின்னனி யொசித்திருப்பது மிக சிறப்பு!!!

    அதுவும் ஒரு கவுண்டர் fanல இப்படி ஒரு counter storyயா???

    ReplyDelete
  2. இது அநியாயம்! இதே மாதிரி நான் ஒண்ணு எழுதிட்டிருக்கேன். அது ஞாபக மறதி ஜோக்குன்னாலும் நடந்தது நடந்ததுதான். Brilliant! :-)

    ReplyDelete
  3. மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  4. "ஏதாவது செய்துவிட வேண்டும் என்று உறுதியாகத் தோன்றியது"

    முதல் அடி இருவருக்கும் ஸ்வப்னசுந்தரி வழியால் அல்லவா விழுந்தது :)
    டைப் டைப்பா யோசிக்கிறீங்க தம்பி !!

    Hilarious one. Keep it up.

    ReplyDelete
  5. நன்றி ஸ்கந்தா.
    நன்றி பரத்.
    நன்றி சுரேஷ்.
    நன்றி writerpara.

    சாத்தான்,

    //என்றைக்காவது கச்சேரி வாசித்துவிடலாம், இப்போது அன்றாடத் தேவைகளுக்கு ஆகட்டும் //
    is of course a paraphrasing of Gnanakoothan's poem உள்ளோட்டம்.

    Our tweet-conversation this morning reminded me of this story, which I had written sometime back so I dug up and posted it.

    ReplyDelete
  6. :-) Funny! Makes one want to say, oh paavam kozhanda!

    Saras' 'enna inga sanda, enna inga sanda' is something I deeply relate to. Every time there is a kaikalappu in office I almost say it.

    ReplyDelete
  7. @Krishashok Thank You. டிட்ன்ட் நோ யூ கன் ரீட் டாமில்!
    @mokrish Thank You. Glad you liked it.

    ReplyDelete
  8. //Saras' 'enna inga sanda, enna inga sanda' is something I deeply relate to. Every time there is a kaikalappu in office I almost say it. //

    @Krupage peace is achieved with the realization 'avan namma settu' :-)

    ReplyDelete
  9. Dammit dagalti, you've cottoned on to me-A? Paathu pa, panjayum neruppayum... but then, endangered species-A pochu, pakathla pakathla thaan vechchaaganum.

    ps: puriyardhu, summa penaathama poi thamizh padikka kathuko-ndreenga. correct thaan. aana oru certain vayasukapparom irukkara konja nanja lang veg skills-A kaapaathikittu vandiya oattuvom nu thoni pogardhu. pinna, uyir ezhuthu kum mei ezhuthu kum (terminological) vidhyaasam theriyaadhavangellam eppadi poi ilakkanam kathukardhaan? anyhoo, itha printout eduthu vechirken, apparoma dhaan padikanum. You know, there's no greater torture for a person with half-baked lang veg skills than ezhuthu kootti padichufying, on a laptop screen. The eyes start to wander/water after a few lines... Aananda kanneer nu nenachuko-ndreengala? Ada, inniki morning Mercury News inga thaaney irundhuchu, enga pochu... Edhukkaa? Surutti nanna onnu vekkarthuku dhaan!

    ReplyDelete
  10. //ezhuthu kootti padichufying, on a laptop screen//

    oNNum avasaramillai. medhuvA padinga.

    ReplyDelete
  11. நல்ல ஒரு சுவாரஷ்யமான கற்பனை ஆனாலும் பொருத்தமான கற்பனை. கரகாட்டக்காரன் (கவுண்டமணி) செந்திலின் பேக்கிரவுண்டுக்கு . வாழத்துக்கள் :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

The Legend of Butler Kandappar

Kamal - the writer/director