டிம்பக்டூ

முன் குறிப்பு: ஐந்தாறு வருடம் முன்பு, கன்னிமை காக்கும் உக்ரத்துடன், ப்ளாக் ஆராம்பிப்பதில்லை என்று இருந்தேன். ஏன் என்று குடைந்தவர்களிடம் விளக்கம் சொல்லி மாளவில்லை. ஒரு மாதிரி "ஒழிகிறது போ" என்று கொள்கையைத் தளர்த்தி, இரண்டு வருடங்களாக அருள் பாலித்துக்கொண்டிருக்கிறேன்.

முன்பொரு காலத்தில் எழுதியவற்றை வலையேற்ற பயன்படவில்லை எனில் ப்ளாகிருந்து என்ன பயன்?

டிம்பக்டூ

இருபத்து மூன்றில் கவிதை எழுதாமிலிருக்க முடியுமா ?



இதுவரை எழுதியது எல்லாம் குப்பை என்ற தெளிவு வரும் வயசு. இளையவன் என்ற சலுகைகள் இனி செல்லுபடி ஆகாது என்று தெரிந்தும் விமர்சனத்தை எதிர்கொள்ளும் வீம்பான வயசு. இந்த நேரத்தை கெடுப்பவனை என்ன செய்வது ?

நாம் பார்ப்பது, படிப்பது எல்லாமே நமது அநுபவங்களாக தங்கிவிடுவதில்லை. அதில் நம்மை கவர்ந்தவை மட்டுமே தங்கும். அப்படி நமது பல நாள் வடிகட்டிய அநுபவங்களை ஒருவருடன் சில நிமிடங்களில் பகிர்ந்து கொண்டுவிட முடியும். எவ்வளவு உன்னதமான அநுபவமாக இருந்தாலும் அதை ஒருவரிடம் பகிர்ந்து கொள்ளும் பொழுது பயணச்செலவு ஆகிறது.

நம்மை நன்கு அறிந்த நண்பர்கள் ஒருவேளை நாம் சொல்வதையும் மீறி, நாம் சொல்ல முனைவதை புரிந்து கொள்ளக் கூடும். அப்படி கிடைப்பவர்களை நமக்கு பிடித்துப் போவதில் ஆச்சர்யம் உண்டா? என்னைக் கேட்டால் ஆச்சர்யம் தான். என் வருடங்களை விழுங்கிய ராட்சசர்கள், என்று அவர்களை வர்ணித்தால் உங்களுக்கு அது மிகையாகத் தோன்றலாம். அந்த இழப்பை உணர்த்த ஒரு நல்ல கதைசொல்லியால்தான் முடியும். என்னால் ....!

ஜனாவிடம் சில விஷயங்கள் சொல்லக் கூடாது என்று தீர்மானித்திருப்பேன். எங்காவது படித்திருப்பேன், யார் சொல்லியாவது கேட்டிருப்பேன் அதை என்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று இருப்பேன். ஆனால் அவனைப் பார்த்ததும் எல்லாம் மறந்துவிடும், "டேய் ஜனா, அந்த படத்துக்கு ஏன் 'மகாநதி'ன்னு பேர் தெரியுமா ?" என்று ஆரம்பித்துவிடுவேன்.

கல்யாணங்களில் மட்டுமே நான் பார்த்த ஒரு உறவுக்காரர் இருந்தார். எல்லோரிடமும் அவர் நினைவு கூர்வது அதே கதைகள் தான். "உங்கப்பன் பள்ளியூடத்துக்கு போகிறப்போ......" என்று என்னிடம் ஒவ்வொரு முறையும் ஆரம்பிப்பார். நான் கவனித்த வரை எல்லோரிடமும் அவர் சொல்ல ஒவ்வொரு நினைவு இருக்கும். ஆனால் அதையே தான் அவர் ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டு இருப்பார்.

"இவங்கள்ட்ட தானே இந்த கதையை போன தடவை சொன்னார்... எனக்கே ஞாபகம் இருக்கே ! இவங்க மரியாதை நிமித்தம் கேக்குறாங்களா, இல்ல அவர் போன தடவை சொன்னது மறந்து போச்சா ? இல்லை திரும்ப திரும்ப கேட்கக் கூடிய அளவுக்கு சுவையானதா ? அதாவது, நான் மோசமான நடிகனா, நன்றாக நினைவு கூர்பவனா, இல்லை ரசனை கெட்டவனா ?"

அவருக்கு ஒரு எண்பது வயசிருக்கும்.அவரை எங்கள் வீட்டருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். அவர் மகன்,மருமகள் எல்லாம் எங்கள் வீட்டில் தங்கினர். ஆள் மாறிக்கொள்ள செல்லும் போது நான் தான் சாரதி. ஒரு தடவை உள்ளே செல்ல நேர்ந்தது. ஆள் வற்றிக் கிடந்தார். சலைன் போய்க்கொண்டிருந்தது. "மூர்த்தி மாமா புள்ள பிரபு வந்திருக்கான் பா.." என்று நான் கேட்காத அறிமுகத்தை செய்து வைத்தார்கள். " யாரு நம்ம மூர்த்தியோட பிள்ளையா....." என்றார். குரல் ஏதோ தொண்டயை சிராய்த்துக் கொண்டு வருவது போல ஒலித்தது. கண்ணை மூடிக்கொண்டு வெள்ளை முள் தாடியும்,பொக்கை வாயும் கோண சிரித்தார். "அந்த காலத்துல உங்கப்பன் பள்ளிக்கூடம் போகிறப்போ...".

அடுத்த வாரம் அவரை ஊருக்கே கூட்டி சென்றுவிட்டார்கள். ஓரு சில நாட்களில் அவர் இறந்து விட்டதாக செய்தி வந்தது. அப்பாவுக்கு ஆபீசில் மார்ச் மாதத்து பளு என்பதால் அம்மா மட்டும் ஊருக்கு போனாள்.

பார்த்தீர்களா இரண்டு, மூன்று பத்திகளில் ஒருவரைப் பற்றி சொல்லிவிட்டேன். உங்களுக்கு அவர் அறுவைக் கிழவர், அவ்வளவுதான். அவர் க்விட் இண்டியாவில் போலீசிடம் அடி வாங்கியதும், அவருக்கு தேவாரம் அத்துப்படி என்பதும் உங்களுக்கு தெரிய வருமா ? இதைத்தவிர, அவரைப் பற்றி எனக்கே தெரியாதவை சத்தியமாக உங்களுக்குத் தெரியப் போவது இல்லை. தெரிய வேண்டியதும் இல்லை என்பது வேறு. உங்களுக்கு அவர் கதைமாந்தர் கூட இல்லை.

விஷயத்திற்கு வருகிறேன்: அவர் எனக்கு எப்படியோ அதுபோல ஜனாவுக்கு நான் ஆகிக்கொண்டு வருவதாக எனக்குத் தோன்றியது.

"யாருக்கும் எந்த கெடுதியும் நெனெச்சதில்லை-ங்காதே.........யாரப்பத்தியும் எதுவும் நெனெச்சதில்லைன்னு சொல்லு......... உலகத்துல எல்லாரும் உனக்கு நெரிசல் அவ்வளவுதான். நீ காலைல பைக் ஒட்டிகிட்டு போகயில ஆபீஸ் போற கூட்டத்த எல்லாம் பார்ப்ப......'என்ன அர்த்தமற்ற வாழ்க்கை' அப்பிடீன்னு உச்சு கொட்டிட்டு கதை எழுத ஆரம்பிச்சிருவ'. நீ மட்டும் புத்திசாலி..... நாங்கள்ளாம் முட்டாப் பசங்க".

"ஜனா அறிவுகெட்டத்தனமா பேசாத....... இண்டெர்நெட்ல பார்ரா, எவ்வளவோ புத்திசாலிங்கல்லாம் இருக்காங்க தெரியுமா..... ஒவ்வொருத்தனும் அவ்வளோ படிச்சிருக்கான், தெரிஞ்சு வெச்சிக்கிட்டிருக்கான்......சாப்ட்வேர் கோடும் எழுதறான் கதையும் எழுதறான்.... எல்லாத்தயும் பாத்தா எப்பிடி இருக்கு தெரியுமா ?"

"அப்பிடி சொல்லு...........நான் சொன்னததான் நீயே சொல்ற....... உன் கண்ல படறவன் எல்லாம் துச்சம்........டை கட்டி ஆபிஸ் போயி காசு சம்பாதிக்க தெரிஞ்ச கிறுக்கு பய........ இப்பிடியே நெனெச்சு பழகி புத்திசாலித்தனமா எதயாச்சும் பாத்தா ஆச்சிர்யப்படற"

நமது அபிப்பிராயங்களை சரியாக யூகிக்க முடிந்தவர்களையே நமக்கு கொஞ்சம் தயக்கத்துடன் தான் பிடிக்கும். அப்படியென்றால் நமது அபிப்பிராயங்களின் ரிஷிமூலங்களை அறிந்தவர்களை ? நான் ஓட்டைவாயன் அல்ல. ஆனால் ஜனாவிடம் நான் சொல்லாத விஷயங்களே கிடையாது.

"மவுண்ட் ரோட்டில் அம்பது அறுவதில் பறக்குறப்போ முன்னாடி ஸ்கூட்டியில ஒரு பொண்ணு. முகம் பார்க்கணும். பாதி கண்ணால ரோட்டையும் பாதி கண்ணால அவளையும் பார்க்க........ எவ்வளவு ரிஸ்க் தெரியுமா ? உயிர பணயம் வெக்கிறா மாதிரி.............அவ்வளோ கஷ்டப்பட்டுப் பார்த்தா.... ஒரு தீவிர இண்டெலெக்சுவல் லுக்டா, நிச்சயமா யுனிவர்சிட்டியில பி.எச்.டி பண்ணிக்கிட்டுருக்கணும்னு நினைக்கறேன்........என்ன கடுப்பா இருந்திச்சு தெரியுமா ?" என்று அன்றே அவனிடம் சொல்லி சிரித்தாக வேண்டும்.

"ப்ரூதானா ப்ரெளதானா......ஏதொ ப்ரென்ச்சு பேரு...... அவரை கிழிக்கிறதுக்காகவே ஒரு தனி புக் எழுதிருக்காருடா" என்று அவனிடம் பேசாவிட்டால் அந்த வாரம் மார்க்ஸ் படித்து வெட்டிப் பொழுது போக்கியது போல இருக்கும்.

நாம் படிப்பதை பற்றி பேசுவது ஏதோ எடுத்துக்காட்டாக இருந்தால் பரவாயில்லை, எல்லாமுமே இவ்வளவு தான் என்கிறபோது ? நாம் சொன்னதின் ப்ரமாதம் மறுப்பதற்கில்லை, ஆனால் இது ஐஸ்பெர்க்கின் நுனி என்ற எண்ணத்தை கேட்பவர்களிடம் விதைக்கிறோம் என்பது தான் பயம். அதுவேதான் மகிழ்ச்சியின் ஊற்றும் கூட. இதற்கு அடியில் காலி என்பதை எனக்கு நினைவு படுத்துவதாக ஆகிவிட்டது ஜனாவுடனான பொழுதுகள்.
அவன் எதுவும் சொல்ல மாட்டான் ஆனால் எனக்கு அசெளகர்யமாக இருக்கும்.

ஜனாவுடன் பழகும் முன் நான் கதை, கவிதை எழுதிக் கொண்டிருந்தேன். மோசமோ, அருமையோ எழுதிக்கொண்டிருந்தேன். இப்போது அது சாத்தியம் இல்லை. அந்த மவுண்ட் ரோட்டு பெண் பற்றி இனி கவிதை எழுத முடியுமா ? ஒரு மழையையும், சிக்னலும், முகம் பார்க்க மின்னல் ஓளியையும் இட்டுக்கட்டிக் கொண்டு 'ஐரனி' தெளித்து கவிதை எழுதி விடலாம். ஆனால் நடந்தது தான் அவனுக்கு தெரியுமே ? அவனுடன் அதை பேசியபின் அதை கவிதையாக்க உத்வேகம் இல்லை.

இதுபோலவே எல்லாமும். எல்லாமும்.

அவனைப் பார்ப்பதை நான் தவிர்க்கத் தொடங்கினேன். மூன்று வாரம். போன் கூட செய்யவில்லை. கிட்டத்தட்ட சண்டை போல. ஆனாலும் ஒரு வரி கூட எழுதவில்லை. கவிதை எழுதாமலிருப்பது கவிஞனை சங்கிலியால் கட்டுவது போன்றது. என்னை விட உயரமானவர்கள், தொப்பை இல்லாதவர்கள், திறமையான காரோட்டிகள், வேகமாக சிந்திக்கக் கூடியவர்கள் நிறைந்த உலகத்தில் எனக்கு எல்லாமுமே நான் கவிஞனாக இருப்பது தான்.

சாமான்யன் ஆகிவிடுவது எந்த நிலையிலும் ஒத்துக் கொள்ள முடியாதது.

வாழ்வில் புதுமைகள் இல்லாமல், டிம்பக்டூவைக் காணாமலே சாகப்போகும் கூட்டத்தில் ஒருவனாக என்னால் இருக்க முடியாது. இவற்றை நினைத்துப் பார்க்கப் பார்க்க, ஜனாவை விட்டு விலகிக் கொண்டது சரியென்றே தோன்றியது. இன்னும் கொஞ்ச காலம் தாமதித்திருந்தால் "எனக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் மழலையை விட சொர்க்கம் உண்டா ? எதற்கு டிம்பக்டூ" என்று, சமரசங்களை வெற்றிகள் போல கொண்டாடும் ஆபத்தான நிலைக்குக் கூட போயிருக்கலாம்.


சிலரை எப்போது எங்கு சந்தித்தோம் என்று எண்ணிப்பார்க்க நாம் முயற்சி செய்வதில்லை. எங்காவது விடை கிடைத்து விடுமோ என்ற பயம். இன்னின்ன நாளில் இன்னின்ன சந்தர்ப்பத்தில் நாம் சந்திக்க நேர்ந்த்தது என்று சொல்ல முடிந்துவிட்டால் அந்த உறவு சாதாரணாமாகிவிடும், நம்மை வானத்திலிருந்து கீழே இறங்க நிர்பந்திக்கும். நம் வாழ்க்கையில் அவர்களுக்கு முன்னாலும் ஒரு காலம் இருந்திருக்கிறது என்பது வியப்பைத் தரும்.

ஜனாவைப் பொருத்தவறை எனக்கு அது கோபத்தையும் தந்ததது. ஏன் கோபம் என்றெல்லாம் தெரியாது. காரணம் கற்பிக்க வேண்டும் என்று மெனெக்கெட்டால் ஒருவேளை அவனிடம் அதிகம் பேசிவிட்டேன் என்று என் மேல் எனக்கு உள்ள கோபம் தான்.


போன வாரம் அவனை ம்யூசிக் அகாதெமியில் ஒரு க்விஸ்சுக்கு சென்றபோது பார்க்க நேர்ந்தது. எனக்கு கொஞ்சம் சங்கோஜமாகவே இருந்தது. சண்டை ஏதும் இன்றி திடீரென்று பிரிந்ததால் என்ன செய்வதென்றே தெரியவில்ல்லை. அவன் ஏதாவது கேட்டால் என்னிடம் பதில் கூட இல்லை.

அவன் நேராக என்னை நோக்கியே வந்தான். "ஆளயே காணோம் ? புது வேலை எல்லாம் எப்பிடி போவுது ?" என்றான். நான் என்ன பதில் சொன்னேன் என்பதே எனக்கு ஞாபகம் இல்லை. எங்களுக்குள் சகஜ நிலைக்கும் சண்டை நிலைக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறான் என்பது என்னை உலுக்கியது. எங்கள் உறவில் இதுவே இனி சகஜ நிலை ஆகப் போகிறது என்பதும், இது தான் நான் தேர்ந்தெடுத்தது என்பதும் உறைக்க எனக்கு கோபத்தில் கணுக்கால் வரை ரத்ததுடிப்பை உணர முடிந்த்தது.

அன்று இரவே இதை எழுத முடிந்தது.

Comments

  1. THERE IS A SPELLING MISTAKE IN THE LAST WORD OF THE LAST BUT ONE LINE

    ReplyDelete
  2. ரொம்ப அழகாக அர்த்தமற்ற உறவுகளின் அர்த்தமும், அர்த்தமுள்ள உறவுகளின் அர்த்தமற்ற ஆழமும் கோர்க்கப்பட்டிருக்கிறது.

    A good relationship they say needs wavelength, the other side of it may pose a detestable competitor or too boring and strained involvement or too dangerously familiar that they may rip u naked.

    //எங்களுக்குள் சகஜ நிலைக்கும் சண்டை நிலைக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறான் என்பது என்னை உலுக்கியது//

    This finish, has a very subtly strong impact to the story. Its a jolt...and yet not quite.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Will KamalHassan apologise for Mahanadhi ?

Judex Ergo Sum

Kamal - the writer/director