அவுங்க வீட்டு ராமாயணம்

ஆனந்த் ராகவ் எழுதிய 'ராமகியன்' புத்தகத்தை நேற்று படித்தேன். நன்றாக எழுதப்பட்ட, சுவாரஸ்யமான தகவல்கள் நிரம்பிய புத்தகம்.தமிழ்சினிமா விமரிசன பாரம்பரியத்தைப் பின்பற்றி உள்ளடகத்தில் பிடித்துப்போனவற்றை மட்டும் இங்கே சொல்லிவிட்டு, முத்தாய்த்து வைக்கப்போகிறேன்.நிஜ விமர்சனம் வலையுலகில் வேறு யாராவது எழுதாமலா விட்டிருப்பார்கள்.?

தென்கிழக்காசியாவில் ராமாயணக்கதை பரவியிருப்பதை நாம் அறிவோம்.அவற்றில் தாய்லாந்தில் ராமகியன் (Ramkien) என்ற பெயரில் நிகழ்த்துகலையாக வழங்கப்படுவதைப் பற்றிப் பிரதானமாகவும், பிற ராமாயணங்களைப் பற்றியும் இந்நூல் விவரிக்கிறது.






இந்தியாவிலேயே பல வடிவங்களில் இக்கதை சொல்லப்பட்டிருப்பது நமக்குத் தெரியும். 'தெய்வ மா கவி (வால்மீகி) மாட்சி தெரிக்கவே' அவர் சொன்ன கதையைத் திரும்பச் சொல்லப்போவதாகச் சொல்லும் கம்பர், அக்கதையைச் சட்டகமாக எடுத்துக்கொண்டு காலம்,சூழலுக்கு ஏற்ப தன் கற்பனை கலந்தது படைத்தது தான் இராமாவதாரம். புத்த ஜாதகக் கதைகள், சமண ராமாயணம் என்று தத்தம் கோட்பாட்டிற்கு இயைபாக பல வகையில் பல மதங்கள் இக்கதையைச் சொல்கின்றன.

அதுபோலவே தென்கிழக்காசிய ராமாயணங்களிலும் பல வகைகள். ஒன்றில் முழுமுதற்கடவுள் விஷ்ணுவின் அவதாரம் என்றால், ஒன்றில் பரமனான சிவபெருமால் பணிக்கப்படும் சிறுதெய்வமான விஷ்ணுவின் அவதாரம். ஒன்றில் அவதாரமே அல்ல, நல்லரசன். ஒன்றில் சீதை மனைவி. ஒன்றில் சகோதரி. ஒன்றில் சகோதரி cum மனைவி. ஒன்றில் ராவணன் காமுகன், ஒன்றில் ராவணன் காதலுக்காக உயிர்த்தியாகம் செய்ய முன்வரும் உத்தமன் (கம்பனின் ராவணன் கூட மாரீசனிடம் 'மாரவேள் கொதிக்கும் அம்பால் பொன்றலில் இராமன் அம்பால் பொன்றலே புகழ் உண்டு அன்றோ? ' என்கிறான். இதற்கு காதல்/காமம் என்று semantical-ஆக பேன் பார்ப்பானேன்?)

சில ராமாயணகளில் ராவணன் சீதையின் தந்தை. அவற்றில் ஒன்றில் தந்தை என்பது அறியாமல் சீதையை மோகிப்பவன், ஒன்றில் தெரிந்து (உலகப்புகழ் ஈடிபஸ் முதல்வகை தெரியுமோ). ஒன்றில் ராமன் மண்டோதரியின் மகன் ! ஒன்றில் சீதை தசரதனுக்கும் மண்டோதரிக்கும் பிறந்தவள். ஒன்றில் வாலி தவறுணர்ந்து தன்னைத்தானே மாய்த்துக் கொள்கிறான், ஒன்றில் முற்பிறவி சாபத்தால் கொல்லப்படுகிறான். ஒன்றில் அனுமன் ராமனின் மகன்.



நாமறிந்த அனுமன் பிரம்மச்சாரி. ஆனால் அங்கொரு ராமாயணத்தில் அவன் விபீஷணின் தங்கைக்காக லக்ஷ்மணனுடன் சண்டையிடுபவன். இன்னும்பல ஷக்தி கபூர்-ப்ரேம்சோப்ரா வேலைகளெல்லாம் செய்கிறான். பல கதைகளில் குறும்பான குரங்கு. ஒன்றில் அஞ்சனையின் மகன் அங்கதன். இவ்வளவு ஏன், ஒரு ராமாயணம் அனுமன் சீதையை அசோகவனத்திலிருந்து தூக்கி வருவதுடன் முடிவடைந்து விடுகிறது !

செல்லும் இடங்களில் எல்லாம் அக்கதை உள்ளூர் கதையாகத் தான் பார்க்கப்பட்டிருக்கிறது. இந்தியா என்ற தூரதேசத்தில் நடந்த கதையாக அல்ல. சொற்பிறப்பியல் எல்லாம் கூட துனைக்குக் கூப்பிட்டுக்கொள்கிறார்கள்: ஜனகர் நிலம் உழும்போது கிடைத்த குழந்தை, கண்ணைக் (லாவோஸ் மொழியில்: சீ) கசக்குகிறாது (லாவோஸ் மொழியில்: தா).

பௌத்தம் மேலோங்கிய நாடுகளில் இக்கதை தழைத்ததில் ஆச்சரியம் இல்லை. அது இந்து மதத்துடன் (அப்படி என்றால் என்ன என்ற மகாகேள்வியை விட்டுத்தள்ளுவோம்) ஒரு பொது கலாசார வேர் உள்ளது தான். நம்மூரிலும் இன்று எங்காவது புத்தருக்கு மணியடித்துக் அபிஷேக அர்ச்சனை நடந்து கொண்டிருந்தால் ஆச்சிரியப்படுவதற்கில்லை தானே.

ஆனால் இஸ்லாம் மேலோங்கிய மலேசியா, இந்தொனீசியாவிலும் ராமாயணக் கதை நிகழ்த்தப்படுகிறது: நடனமாகவும், தோல்பாவைக் கூத்தாகவும். ஒன்றில் லக்ஷ்மணன் தான் வஸ்தாத். தெய்வீகத் தன்மை எல்லாம் கொஞ்சம் அடக்கி வாசிக்கப்படுகிறதாம். "ஓர் ஒருவரே இறைவர் மூவரையும் ஒப்பார்" என்று ராம-லக்ஷ்மணரின் அழகை வர்ணிக்கிறாள் கம்பரின் சூர்ப்பனகை. "ஆதாம் நபி போன்ற பொலிவு" என்கிறதாம் இந்தொனீசிய ராமாயணம்.

கிட்டத்தட்ட ஒரு கதையின் சின்னஞ்சிறு வேறுபாடுகளை மட்டுமே படித்த நமக்கு இவ்வகை வேறுபாடுகள் கண்ணை அகலவிரிக்கச் செய்பவை. அதில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு வித்தியாசம் ராமகியன் கதையில் உண்டு:

கம்பன் ச்சாய்ஸில் விட்ட உத்தரகாண்டம் என்பது அவதார நோக்கம் முடிந்தபின் ராமன் ஆட்சி செய்வதைப் பற்றிய பகுதி. அதில் தான் ஒரு சலவைத் தொழிலாளியின் அவப்பேச்சைக் கேட்டு ராமன் சீதையைக் காட்டுக்கு அனுப்புகிறான். பிஹாரில், (சீதையின் ஊரான) மைதிலி பகுதியில் நடக்கும் திருமணங்களில் ஒரு சடங்கில் சாட்சியமாக சலவைத் தொழிலாளியை அமர வைப்பது வழக்கம் இன்றும் உண்டு. இவ்வாறு இந்திய வாழ்விலும், சடங்குகளிலும் கலந்துவிட்டதொரு கதை ராமாயணம், என்ற என் சமூகவியல் அவதானிப்பை பொறுத்தருளுங்கள்.

ராமகியனில் விஷயமே வேறு. சூர்ப்பனகையின் மகள், பழிதீர்ப்பதற்காக சீதையின் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேர்கிறாள். அவள் ராவணனின் உருவை சீதையை வரைந்துகாட்டச் சொல்ல, அவளும் நினைவிலிருந்து துல்லியமாக வரைந்து காட்டுகிறாள். அப்பணிப்பெண்ணின் மாயத்தால் அப்படத்தை அழிக்கமுடிவதில்லை. (ஒன்றில் பணிப்பெண் அல்ல அது ராமனின் தங்கை - நாத்தனார் கொடுமை! ராமனின் தங்கை பெயர் கைகேயி - இவ்விடம் தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியது).

அப்படத்தைக் கண்டு கோபமடைந்த ராமன் சீதையை காட்டுக்குப் போகச் சொல்கிறான். இதைக்கேளுங்கள்: லக்ஷ்மணனைக் காட்டில் கூட்டிச்சென்று சீதையை கொன்றுவிடுமாறு பணிக்கிறான். மனம் வராத லக்ஷ்மணன், சீதையை காட்டில் விட்டுவிட்டு ஒரு மானின் இதயத்தை வெட்டி எடுத்து வந்து சாட்சியாக சமர்ப்பிக்கிறான். இதற்குப் பல வருடங்களுக்குப் பிறகு தன் செயலுக்காக ராமன் வருந்தி உருகுகிறான்.


சந்தேகம் மட்டுமல்ல, கண்மூடித்தனமான கோபம், பின்வருத்தம் என்று பலவித மனித சறுக்கல்கள் உள்ள வசீகரமான பாத்திரம் ராமகீய ராமன்.

AK ராமனுஜன் எழுதிய 300 Ramayanas என்ற கட்டுரை, பல்கலைக்கழக பாடதிட்டத்திலிருந்து நீக்கவேண்டும் என்று சர்ச்சைக்குள்ளானது நினைவிருக்கலாம். (முழவதும் படிக்க ஆர்வம்/நேரம் இல்லை எனில் அத்யாத்ய ராமாயணம் பற்றிய ஒரு meta-textual குறிப்பு இருக்கிறது, அதைத் தேடிப் படியுங்கள்).

இலக்கிய மாணவர்கள் கூட கண்ணில் ஒத்திகொண்டு தான் படிக்கவேண்டும் என்று மேஜையை குத்துபவர்களை டிக்கெட் போட்டு பாங்காக் அனுப்பி வைக்கலாம்.

Comments

  1. நல்ல ஒரு பதிவு. இந்த பல வித ராமாயணங்களை பற்றி முன்பு படித்திருக்கிறேன். இப்படி பல கோணங்களில் பார்க்க முடிவதினால் தான் இது ஒரு காவியமாக இருக்கிறதோ என்னவோ? ராமாயணம் என்று இல்லாவிட்டாலும் புதுமைபித்தனின் "சாபவிமோசனம்' இங்கு சேர்த்து கொள்ளலாம். மனோகர் போட்ட பல நாடகங்கள் இதை போன்ற மாற்று பார்வைகளே என்று நினைக்கலாமா? இப்படி ஒரு காவியத்திலிருந்து எல்லா குறைகளையும் நீக்கி ராமனை ஒரு அவதாரமாகவும், தவறு எதுவும் செய்ய முடியாத ஒருவனாக காட்டுவது சற்று வேடிக்கையாக தான் இருக்கிறது.

    ஒன்றே ஒன்று என்னவென்றால், அந்த 'ramakiyan' என்றதை படித்தவுடன் கவுண்டமணியும் செந்திலும் செய்யும் 'கியான் கியான்' காமெடி தான் உடனே ஞாபகம் வந்தது. நம்மையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் திருத்த முடியாது :)

    ReplyDelete
  2. நன்றி. மனோகர் நாடகங்களில் பரிச்சயம் இல்லை. இராவணேசுவரன் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அடர்த்தியான characterizatioனும், பல்வகையான வாசிப்புகளுக்குப் போதுமான இடைவெளியும் உள்ள கதை.

    அப்பழுக்கற்ற அவதாரபுருஷனாகக் காட்டுவதை வேடிக்கை என்று சொல்ல மாட்டேன். சாமிக்கு அழகு immaculacy :-) அந்த சித்தரிப்புக்கும் ஒரு purpose இல்லாமல் இல்லை. அந்த அசாத்திய மேன்மையும் நெகிழச் செய்யக் கூடிய ஒன்று தான்.

    தசரதன் காட்டுக்குப் போகச் சொன்னதாக கைகேயி விளக்க, (கம்பனின்) ராமன் இவ்வாறு பதிலளிக்கிறான்:

    மன்னவன் பணி அன்றாகின் நும் பணி மறுப்பெனோ - என்
    பின்னவன் பெற்ற செல்வம் அடியேனேன் பெற்றதன்றோ


    அந்த zoneஇல் பல பாடல்கள் எனக்குத் தொண்டையில் பந்தடைக்கும்.

    ஆனால் இவ்வாறு மட்டுமே படிக்கப்பட வேண்டும் என்று சிலர் அழிச்சாட்டியம் செய்வது தான் வேடிக்கை.

    //'கியான் கியான்' காமெடி//
    ஹாஹா. அது பியான் பியான்.

    என்னையும் திருத்த முடியாது :P

    ReplyDelete
  3. Aiyyo, ippadi eppo paathalum Thamizh la ye Ramayanam bit-a potu thaakkaringale! Seri, seri, porumaiya padichu tholailkaren, since I'm now all but intrigued by different angles of looking at this same old same old epic of ours. Vandhu indha holiday break podhu padikkaren...yes, where there is a vill, there is a way! I can do it...(pep talking; pliss to ignore)...kadavule, kaapathungo. Yen ippidi thamizh naale oru...oru idhu?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Collection of Scattered Thoughts on தில்லானா மோகனாம்பாள்

Kamal - the writer/director

The Legend of Butler Kandappar