இன்செப்ஷன் 1

'பொய்யாய் பழங்கனவாய்ப் போனது காண்' - என்று பட்டினத்தாரை மேற்கோள் காட்டி ஸ்வயசரிதையைத் துவங்குகிறார் பாரதி.

அங்கலாய்ப்பு ரசிக்கத்தக்கது. ரசித்தாகிவிட்டதா, இப்போது கவிதையைக் ஈவிறக்கமின்றி கூறுபோடுவோம்:பழங்கனவாய்ப் போனது எது? வாழ்வில் நிகழாத சாத்தியங்களா, அல்லது நிகழ்ந்து கடந்துவிட்டவையா?


ஞாபகம்

முதலாவது 'முன்பொரு காலத்தில் கண்ட கனவுகளுக்கு சம்மந்தமே இல்லாதபடி, வாழ்க்கை வேறெங்கோ இழுத்துச்சென்று விட்டுருக்கிறதே' என்ற கழிவிரக்கம். ஆனால் நிகழ்ந்துவிட்டவை எல்லாம் நம் வாழ்வில் ஆழமாக தடம் பதிக்கின்றனவா என்ன? அனேக நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் நாமே தருவது தானே.நிகழ்வுகளின் தொடர்ச்சியும், ஒன்றோடொன்றான தொடர்பும், பல நேரங்களில் அந்நிகழ்வுகளின் தன்மை அல்ல. நம் சிந்தனையிலிருந்து வருபவையே.

அனேகமாக, நம் தேற்றங்களுக்கு வலுசேர்க்கும் சிந்தனைகளே நம் மனவோட்டங்களில் அழுத்தமாகப் பதிகின்றன. அவற்றிலிருந்து ஞாபகம் எனும் 'உண்மையை' நாம் தரித்துக்கொள்கிறோம். நாள் கடந்து பின்நோக்குகையில், எந்த வித பதிவையும் நிகழ்த்தாமல் ஏகிவிட்ட தருணங்களே பெரும்பான்மை என்று உணர்கிறோம்.


முன்னும் பின்னும்

ராபர்ட் ஃப்ராஸ்டின் விஷமச்சிரிப்பு மிகுந்த 'Road Not Taken
' கவிதை தலைமுறை தலைமுறையாக ஆங்கில ஆசிரியர்களால் 'தவறாக' சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அர்த்தப்படி கவிதையின் கடைசி வரியின் பொருள் இது: 'அதிகம் தேர்ந்தெடுக்காத பாதையை என் (வாழ்க்கைப்) பாதையாய்த் தேர்ந்தெடுத்தேன் அது தான் எனது இன்றை நிலைக்குக் காரணம்'. கொஞ்சம் கவனமாக படித்தால் கிடைக்கும் பொருள் இது: "எந்தப் பாதையை தேர்ந்தெடுத்திருந்தாலும் இங்கே அடைந்திருப்பேன், ஆனால் இங்கே வந்து அடைந்ததற்கு என் அன்றைய தேர்வே காரணம் என்று நான் போய்ச் சேர்ந்ததும் நினைப்பேன்".

பின்வருத்தம்

வாழ்வின் அர்த்தம் வாழ்வேதான், என்பதல்லாமல் வேறொன்றாக (சுருக்கமாக) இருக்கவியலாது என்ற புரிதல் கொண்டவர்கள் கூட தவிர்க்க இயலாத பிரயாசை ஒன்று உண்டு.அதுதான் வாழ்வின் அந்திமத காலத்தில், மாற்றுசாத்தியங்கள் பற்றிய பின்வருத்தத்தில் உழலாமல் இருக்கவேண்டும் என்ற விழைவு.

தன்மைகள்,பிரதானங்கள் வைத்து ஒருவரை அடையாளப்படுத்துவோமானால், நமது பின்வருத்த அபாயத்திலிருந்து நாம் காப்பாற்ற முயலும் அந்த எதிர்கால நபர், முற்றிலும் வேறொருவராக இருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அவரைப் பற்றிய வெகுவான கவலை கொள்ளாமல் இருக்க இயலாது. அவராக நாம் ஆகும்போது நாம் இன்று கொண்ட கவலையும், அதனால் செய்த பிரயத்தனங்களும் கோமாளித்தனமாகத் தான் தோன்றும் என்றாலும் இன்றை இவ்வாறே தான் கழித்தாக வேண்டும்.

இந்த பிரக்ஞை இருக்கும்போது, நாம் பகுத்தறிந்து செயல்படுவது நம் பார்வைக்கு எட்டும் ஒரு குறுகிய தொடுவானம் வரை மட்டுமே என்றும் உணர்கிறோம். தொடுவானங்கள் கடந்து இருப்பவற்றைப் பற்றிய நம்பிக்கை சார்ந்த ஒரு பற்றுகோல், கிட்டத்தட்ட தவிர்க்க முடியாததாகிறது.

நம்பிக்கை
இவ்விஷயங்களில், நம்பிக்கை என்பது மிகுந்த அசூயை ஏற்படுத்தும் சொல். கள்ளத்தனமாக பழமைவாதத்தை நுழைப்பதாக எண்ண வைக்கும் சொல். ஆனால், இருத்தலில் நம்பிக்கைக்கு எதிர் இன்மையின் நம்பிக்கை, என்று அர்த்தப்படுத்திக் கொள்வோமாயின், இச்சொல்லின் தீட்டு கழியலாம்.

'இவ்வுலகம் உண்மை' என்ற அடிப்படைக்குள் நின்றுகொண்ட வளர்ந்த புலனறிவு/சிந்தனைத் திறத்தைக்கொண்டு இவ்வுலகத்தின் உண்மைத்தன்மையை அனுமானிக்க முடியுமா என்ன? அப்போது சந்தேகத்துக்குட்படுவது அச்சந்தேகமும் சேர்த்தல்லவா? இதற்கு மேல் இவ்விஷயத்தில் எனக்கு துல்லியமில்லை. ஆனால், அடிப்படைகள் என்பவை எப்போதுமே நிரூபணத்துக்கு அப்பார்ப்பட்டவையாகத் தான் இருக்க இயலும் என்ற புரிதல், கொஞ்சம் (மிகை) எளிமையாகக் கண்டடைய இப்பாதை உதவுகிறது. நிரூபணம் சார்ந்தே ஆய்ந்தும் முடிவெடுத்தும் முன்செலுத்தும் வாழ்க்கையின் அடிப்படை நிரூபணமற்றது என்ற புரிதல், நிச்சயம் அசௌகரியமானது தான். இத்தகைய கேள்விகளை எழுப்பிச்சென்று, அதே சமயம் பார்வையாளர்களை கைப்பிடித்து நெடுந்தூரம் அழைத்துச்சென்ற படம் தான் இன்செப்ஷன்.


கதை

கதை கனவுக்குள் புகுந்து ரகசியங்கள் திருடுபவர்களைப் பற்றியது. ஒரே கனவை பலர் சேர்ந்து காண, அந்தக் கனவுலகை ஒருவர் கவனமாக முன்கூட்டியே வடிவமைக்கிறார். கனவுலகில், கனவு காண்பவர்களைத் தவிர அவர்களின் சிந்தனைகளில் இருப்பவர்களின் பிம்பங்களும் வரும். கதை நடக்கும் காலத்தில், இந்த கனவுக்குள் இறங்கி் தொழில்நுட்பம் வளர்ச்சிபெற்றிருக்கிறது. தமது கனவில் புகுந்து திருட முனைபவர்களை எதிர்கொள்ள எதிர்பிம்பங்களை அனுப்புகிறார்கள் கனவு காண்பவர்கள். சில நிமிடம் கனவு கண்டால், கனவுலகில் அது பல மணி நேரமாக விரிகிறது. கனவில் கனவுகண்டால் அதே கணக்கைப் பெருக்கி, கனவில் காணும் கனவின் உலகில், அது பல நாட்களாக விரிகிறது.கனவுலகில் இறந்தால் நிஜத்தில் விழித்துக்கொள்ளலாம்.இப்படிப்பட்ட சூழலில் ஒரு யோசனையை ஒருவர் சிந்தனையில் விதைக்கும் பணியை மேற்கொள்கிறான் நாயகன் காப். அவன் செல்லும் கனவுலகங்களுக்கெல்லாம் தன் இறந்த மனைவி 'மால்' பிம்பமாக வருகிறாள். அவர்கள் முன்னொரு காலத்தில் பகிர்ந்த கனவு ஒன்றில் நெடுநாளாகச் சஞ்சரித்து விழித்த உப-கதையும் உண்டு, கனவுxநிஜம் பற்றிய சிந்தனைத் தடுமாற்றங்களினூடே நாயகனின் தேர்வுகளும், அவன் குழுவின் 'சிந்தனை விதைத்தல்' சாகசமும் தான் படத்தின் கதை.

க்றிஸ் நோலன்

இப்படம் எழுப்பும் எண்ணங்களைப் பற்றி சொல்வதற்கு முன் இதை எழுதி-இயக்கிய க்றிஸ் நோலனைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும்.

மெமண்டோ

க்றிஸ் நோலன் பிரபலமாக கவனம் பெற்ற படம் மெமெண்டோ. அதில், காலஓட்டத்தைப் பற்றிய ப்ரக்ஞையின் முக்கியத்துவம் ஆராயப்பட்டிருக்கும். ஒரு சில சம்பவங்களால் வாழ்க்கையின் ஒரு கணத்தில் நாயகன், ஆணியால அரையப்பட்டதுபோல அரையப்படுகிறான். அதுவரை வளர்ந்தது மட்டுமே அவன் சுயம். அந்த கணம் வரை உருவான நினைவுகள், அவை தரும் உந்துதல்கள், அவை ஏற்படுத்தும் மனப்போராட்டங்கள், என்று ஒரு குறிப்பிட்ட துயரிலிலிருந்து மீள முடியாதபடி உறைந்திருக்கிறான். புது ஞாபகங்கள் பழையவற்றின் மீது படிய வாய்ப்பில்லாது போவது, 'கால ஓட்டம் பற்றிய பிரக்ஞை' இல்லாமல் போவது போல தான்.

நம் செயல்களைப் பற்றி சிந்திக்ககூடிய இடைவெளி நமக்குக் கிடைக்காத போது, 'புரிதலுக்கு அப்பார்ப்பட்ட செயல்களின் சரமாய் வாழக்கடவது' என்று நாம் சபிக்கப்படுகிறோம். அந்த இருப்பை நியாயப்படுத்திக்கொள்ள, குறைந்தபட்சம் அர்த்தப்படுத்திக்கொள்ள, நாம் வழிகளை கண்டடைகிறோம். இந்நிலையை மிகச்சிறப்பாகச் சித்தரித்து கவனம் பெற்றது மெமெண்டோ.

த ப்ரஸ்டீஜ்

த ப்ரஸ்டீஜ் என்ற மற்றொரு படம் - சுயத்தை படைக்கும் சுயம் பற்றியது. கலைஞன் தன் கலைக்காக வாழ்வைக் காவு கொடுப்பதைப் பற்றி பல படைப்புகள் வந்திருக்கின்றன. அந்த 'இழக்கப்படும் வாழ்வு' என்பது என்ன என்பதை ஆராய்கிறது இப்படம்: வாழும் முறையா, உறவுகளா, உண்மைத்தேடலேவா, நினைவுகளையா?இவற்றில் சிலவற்றை இழந்து, பலவற்றை தொடரச்செய்து தன் கலைக்காக, தன்னை அழித்துக்கொண்டே இருப்பவனைப் பற்றிய திரைப்படம் இது.


பேட்மேன்
ஹாலிவுட் அதிநாயக திரைப்பட பாரம்பரியத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட 'பாட்மேன் பிகின்ஸ்', 'த டார்க் நைட்' என்ற இரு படங்களை இயக்கினார் நோலன். வீழ்ச்சியடையக்கூடிய சாதாரண பிம்பமான மனிதனை விட, வீழ்ச்சி சாத்தியங்களுக்கு அப்பார்ப்பட்ட ஒரு பிம்பத்தைக் கட்டமைத்துத் தொடரும் ஒரு மனிதனின் கதையாக அவை சொல்லப்பட்டன. மனிதர்களின் இயல்பின் மீது நம்பிக்கை வைத்துக்கொண்டே இருப்பதைத் தவிற வேறெதுவும் சமுதாயத்துக்கு சாத்தியமோ, சாதகமோ இல்லை என்று அவன் நம்புகிறான். அவன் நம்பிக்கையை நசுக்கப்பார்க்கிறவர்களையும் எதிர்கொள்கிறான். சமுதாய நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக தன் பிம்பத்தை கீழிறக்கிக் கொள்ளவதற்கும் செய்கிறான்.

ஹாலிவுட் மையநீரோட்ட வரையறைகளுக்குள் செயல்பட்டுக் கொண்டு இதைப் போன்ற ஆன்மவிசார(!) படங்களை எடுப்பது நோலனின் சிறப்பு. நிகழ்வுகள் மூலமும், வசனங்கள் மூலவும் தொய்வில்லாமல் கதைசொல்வதை ஒரு மதமாக கடைபிடிப்பது இவர் முத்திரை. தெளிவு என்பது கதைசொல்லியின் பொறுப்புகளில் ஒன்று என்று நம்புவதாகத் தெரிகிறது. அர்த்தங்களை வெளிப்படையாக, மாற்று வாசிப்பு(அபாயங்களு)க்கு இடமின்று காண்பிப்பார், அல்லது அர்த்தசாத்தியங்களை தெளிவாக வரையறைத்து விடுவார். இதுவே அவரது பெருங்குறை என்று சொல்பவர்களும் உண்டு.


தொடரும் (என்று உத்தரவாதம் இல்லை)

Comments

  1. பாஸ்கர்October 14, 2010 at 6:53 PM

    அருமையா எழுதி இருக்கீங்க சார். தொடர்ந்து எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete
  2. translation needed..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கீசக வதம்

போதும்

EXT - DAY (Kinda)