Tuesday, August 3, 2010

கில்லாடியின் கலைத்தேடல்


"சென்லூயிஸ்ல ப்ளூஸ் ம்யூஸிக் ரொம்ப ஃபேமஸ். ஒரு நல்ல ப்ளூஸ் பார் எதுக்காவது கண்டிப்பா போயிடு" என்று சொல்லி அனுப்பி இருந்தார் ஒரு நலவிரும்பி.

இருக்கப்போகும் ஒரு வாரயிறுதியில் அவ்வூரின் கலாசாரத்தை எல்லாவிதத்திலும் சுவைபார்த்துவிடும் திட்டத்தோடு இருந்தேன். மார்க் ட்வைன் எழுதிய மிஸிஸிப்பி நதி, லூயிஸ்-கிளார்க் பயணம் அருங்காட்சியகம், அறிவியல் மையம் போன்ற தேர்ச்சி எதுவும் தேவைப்பாட, பயணிக்குறிப்புகளுக்கு ஏதுவான இடங்களெல்லாம் முடித்தாகிவிட்டது. உள்ளூர் கார்டினல்ஸ் பேஸ்பால் அணியினரின் ஆட்டத்தைப் பார்க்கும் நூறு டாலர் ஆர்வம் எல்லாம் இல்லை. அதனால் அன்றிரவு ப்ளூஸை ஒரு கை பார்த்துவிட வேண்டியது என்று முடிவு செய்தேன்.

ஊரே பேஸ்பால் பார்த்துக்கொண்டிருந்ததாலோ என்னவோ, அன்று மாலை சகல உணவகங்களும் வெறிச்சோடிக்கிடந்தன. பசியோ, கால்வலியோ வலுக்கும் வரை தேடி நடக்கும் உத்தேசத்துடன் நடந்தேன். லைவ் ம்யூஸிக் என்று விளம்பரப் படுத்தியிருக்கும் இடங்களாக ஜல்லடைப் போட்டு கடைசியில் ஒரு இடத்துக்கு வந்து சேர்ந்தேன்.

பேஸ்பால் மைதானத்திலிருந்து உற்சாகக்குரல்கள் கேட்கும் பந்தெரி தூரம்.அது ஒரு சின்ன வீடு போல் இருந்தது. ஏதோ ஹாலை நீட்டி, ஒரு சின்ன மேடை அமைத்திருந்தார்கள். லோவோல்டேஜ் விளக்கொளி. என்னையும் - என் இம்சையை பொறுத்துக்கொண்டு உடன்வந்த அலுவலக நண்பர் ஒருவரையும் சேர்த்து ஒரு பத்து பேர் இருந்தோம். ஒரு மங்கலான ஓரமாகப் பார்த்து அமர்ந்தோம். நண்பர் மெனுவைப் படித்து நாற்பத்தாறால் பெறுக்கத் தொடங்கினார். நான் மேடையைப் பார்த்தேன்.

ஒரு நடுவயது வெள்ளைக்காரர் உட்கார்ந்திருந்தார். அகூஸ்டிக் கிடாரிலிருந்து ஒயர் போய்க்கொண்டிருந்தது. உலோகத்தில் கழுத்தைச் சுற்றி ஒரு வளையம் (brace), அதில் ஹார்மோனிகா (தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு மௌத் ஆர்கன் என்ற பெயரில் பரிச்சயம்). ஹார்மோனிகாவை ஊதிக்கொண்டு, கிதார் இசைத்துப் பாடிக்கொண்டிருந்தார்.

கனிவே உருவான ஒரு ஊடுருவலாக சிப்பந்தி(னி?) வந்தாள். குறைந்தபட்சம் பத்து டாலர் என்றும், அதில் பகுதி இசைக்கலைஞருக்கு செல்லுமென்றும், இவ்வித்தனைக்கு மேலே நாங்கள் உண்டு மகிழ்ந்தால் அந்த பத்து டாலர் விலக்கு என்று விளக்கிக்கொண்டிருந்தார். எனக்கோ வேறு சிந்தனை: இது ப்ளூஸ் இசை தானா, என்று.

மாலைக்கு ஆயத்தம் செய்துகொள்ள விகிபீடியாவிலாவது மேய்ந்திருக்க வேண்டாமா.
ப்ளூஸ் கறுப்பர்கள் இசை என்றல்லவா கேள்விப்பட்டிருக்கிறோம். டொமேட்டோ/டொமாட்டோ புகழ் எல்லா ஃபிட்ஸ்ஜெரல்ட் தானே ப்ளூஸ்? ஒரு வேளை அது வேறு எதுவோவா?
சரி, வெள்ளையர்கள் வாசிக்க மாட்டார்களா என்ன? கலாசார பரிவர்த்தனம் இருக்குமல்லவா.
இருக்கலாம் தான். ஆனால் ஒருவேளை இவ்வளவு தூரம் வந்துவிட்டு 'தவறான' இசையைக் கேட்டுத் தொலைக்கப் போகிறோம்.
இது 'கண்ட்ரி' இசை என்பார்களே, அது போல அல்லவா இருக்கிறது.
அப்படியா 'எங்கே கண்ட்ரி இசைப் பாடல் எதையாவது சொல் பார்க்கலாம்?'.
அது தெரிஞ்சா நான் ஏன் இங்க வந்து குத்த வைக்கிறேன்.
கண்ட்ரி என்றால் ஸ்ட்ரா தொப்பி போன்ற சமாச்சாரங்கள் போட்டிருப்பார்களே.
பேத்தாதே, கண்ட்ரி இசையில் தான் ஹார்மோனிகா வரும், எல்லா ஃபிட்ஸ்ஜெரல்ட் பாட்டில் ஹார்மோனிகா கேட்டிருக்கிறாயா?
நான் அவர் பாட்டே கேட்டதில்லையே, பெயரை தான் கேட்டிருக்கிறேன்.
எழவு, இது ப்ளூஸ் தானா என்று யாரிடமும் வாய்விட்டுக் கேட்கவும் முடியாதே.

விஸ்தாரமாக ஆலாபனை செய்துகொண்டிருந்த பீம்சேன் ஜோஷியை கொஞ்ச நேரம் பொறுமையாக கேட்டுவிட்டு, பக்கத்திலிருப்பவரை தோளில் தட்டி "பாட்டு எப்ப ஆரம்பிக்கும்?" என்று கேட்பது போல எதுவும் செய்துவிடக்கூடாது. சகல இசையையும் உன் சுவைக்காக நான் கொடுத்துக்கொண்டிருக்கும் உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை, என்று இளையராஜா சிரிப்பது போல தோன்றியது - அரை ஜாடி உள்ளூர் ஆன்ஹாய்ஸர்-புஷ் பியர் உள்ளே போயிருந்தது.

மனிதர் நன்றாக வாசித்தார். இதுவரை எழுதியதிலிருந்து என் சான்றிதழுக்கு அதிக மதிப்பு இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் சொல்கிறேன் நன்றாக தான் வாசித்தார். மீதி எட்டுபேரும் மிக ஆர்வமாக ரசித்துக்கொண்டிருந்தனர். என் நண்பர் சிக்கன் சுமாராக வெந்திருந்ததைப் பற்றி அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்.

பாடல்களுக்கிடையே ஆன இடைவெளி நேரத்தில் மற்ற மேஜைகளிலிருந்து சிறு ஆர்வலர்கள் புறப்பட்டு அவர் முன் இருந்த டிப்ஸ் கிண்ணத்தில் பணம் வைத்துக்கொண்டிருந்தனர். அவர் மேடையிலிருந்து நன்றி சொல்லி, அந்த நபரின் விருப்பப்பாடலைக் கேட்டுப் பாடத்தொடங்கினார்.

இரு நடுவயது அம்மணிகளும் ஒரு இளம்வயதுப்பெண்ணும் உட்கார்ந்தபடியே அசைந்து கைத்தட்டி ரசித்துக்கொண்டிருந்தனர். அப்பெண்ணின் பிறந்தநாளாம். சந்தோஷத் தருணத்தை தனியாகக் கொண்டாடும் இவர்கள் யார்? ஆண் இல்லாத மேஜையை ஏன் 'தனி' என்று நினைக்கத் தோன்றுகிறது? அதோ அந்த மூலையில் தனியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாரே அந்தக் கிழவர் யார்? அவர்தானே தனி. தத்துவஞானி ஷோப்பன்ஹௌயர் ஐம்பது வருடங்கள் ஒரு உணவுவிடுதியில் எப்போதும் தனியாகச் சாப்பிட்டாராம். இந்த முதியவருடைய தனிமையும் விருப்பத் தேர்வா? தனியான முதியவரைப் பார்த்ததும் ஏன் உறவுகள்-கலாசாரம் என்றெல்லாம் படா-படா விஷயங்களாக சிந்திக்கத் தொடங்கிவிடுகிறேன். பொதுமைப்படுத்த முனைந்துவிடுகிறேன்.

கதைமாந்தராக இந்த உலகத்து மனிதரைப் பார்க்கத் தூண்டும் வக்கிரத்தின் ஊற்று எது? இப்போதைக்கு முக்கால் ஜாடி ஆன்ஹாய்ஸர் புஷ் என்று சொல்லி திசை திருப்பிவிடலாம்.

எனக்கு அப்போது, அந்த இடத்தில் அந்த இசை பிடித்திருந்தது. பிடிக்கவேண்டும் என்றும் என்னுள் ஏதாவது அடம்பிடிக்கிறதோ என்ற ஐயத்தில் அதிகம் லயிக்க முடியாத அளவு ஈர்த்தது. இவருக்கு நிச்சயம் ஏதாவது டிப்ஸ் வைக்க வேண்டும்.


நடுவயதில், தொப்பையை தூக்கிக்கொண்டு வாசிக்க வந்திருக்கிறாரே. இதற்கெல்லாம் என்ன கொடுத்துவிடப் போகிறார்கள். இதைப்போன்ற வார இறுதிகளிலேயே இவ்வளவு தான் என்றால், இவர் எப்படி பிள்ளைகளைப் படிக்கவைப்பார். ஒரு வேளை, இசையில் பின்னிவிடலாம் என்று கனவைத் தேடி இளமையைச் செலவிட்டு இப்போது தனியனாக இருக்கிறாரோ? அந்த மூலைக்கிழவர் போல. அந்த மூலைக்கிழவர் ரிக்கார்ட் கம்பெனி ஆளாக இருந்து இவ்விசையில் மகிழ்ந்து ஏதாவது பார்த்து செய்வாராயிருக்கும். (நிறைய மோசமான ஹாலிவுட் படங்கள் பார்க்கிறேன்).

என்ன தடித்தனம் இதெல்லாம். ஒரு பத்து-பதினைந்து டாலர் கொடுத்து சாப்பிட வக்கிருந்தால் எப்படி புரவலன் மாதிரி எல்லாம் சிந்திக்கத் தோன்றுகிறது.

கை அது கடன் நிறை யாழே
மெய் அது புரவலர் இன்மையின் பசியே

என்று எழுதிவைத்தவர்கள் வழிவந்ததால் தான் இப்படி ச்சு கொட்டத் தோன்றுகிறதா? அல்லது இந்து ச்சு கொட்டலுக்குத் தோதாகத் தான் அன்று எழுதினார்களோ?


வுடி ஆலென் நியூயார்க்கில் ஏதோ பாரில் க்ளாரினெட் வாசிப்பாராமே. அது போல இவரும் பிஸ்தாவாக இருக்கலாமே. இப்போதும் பார்த்தாயா அவர் பிஸ்தாவாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறாய். இசையை விரும்பிச் செய்யும் ஒருவராக இருக்கலாமே.

அது என்ன இசையை அவர் விரும்பவேண்டும் என்ற எதிர்பார்ப்பு? ஒன்று அவர் சுபிட்சமாக இருக்கவேண்டும், அல்லது 'வேலையில் பெருமிதம்' கொள்ளவேண்டும். அப்படித்தானே? என்ன கடைந்தெடுத்த முதலாளித்துவ எதிர்பார்ப்புகள்.


அவர் எதுவோவாக இருந்தே ஆகவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்துகொண்டிருக்கும்வரை, அவருடைய (எவருடைய) முழுமையையும் மதிக்க முடியாதவனாகவே இருப்பாய். மேலும், இப்போது கவலைப்படவேண்டிய விஷயமே வேறு.

‘உங்கள் இசையின் ஆழம் எளியேனுக்கு அகப்படவில்லை’ என்றும் சொல்லும் விதமாகவோ, ‘யாரென்றே தெரியாத உங்களை என் புரிதலில் குறுக்க முயன்றதற்குப் பிராயச்சித்த’மாகவோ, எட்டியவரை சுமாராகப் பிடித்திருந்ததற்கு பாராட்டாகவோ, அந்தக் கிண்ணத்தில் காசு வைக்கவேண்டும். ஆனால் நான் வைக்கப்போக, அவர் எங்காவது 'என்ன பாட்டு வாசிக்க' என்று கேட்டுவிட்டால் பிரச்சினை. 'நலந்தானா வாசிங்க' என்றா கேட்க முடியும்.


எதற்கு தனியாக டிப்ஸ் வைக்கப் போகிறாய், அதான் இதிலேயே சேர்த்தியாமே, என்று எங்காவது நண்பர் சொல்லிவிடப் போகிறார் என்று தோன்றியது. அப்படி நினைத்து அவரையும் குறுகலாக நினைக்கிறேன் என்றும் தோன்றியது. எனக்காக அரைவேக்காட்டுக் கோழியை பொறுத்துக்கொண்டிருந்தார்.

சாப்பிட்டு பில்லெல்லாம் கட்டி முடித்துவிட்டோம். அபாயமில்லாமல் டிப்ஸ் வைப்பது எப்படி என்ற குழப்பம் தீர்ந்தபாடில்லை. இசை ஆழ்ந்து ரசிக்கும் பாவனையை முகத்தில் தேக்கியபடி சிந்தித்துக்கொண்டிருந்தேன். கிழவரும், பிறந்தநாள் குடும்பமும் போய்விட, புரவலர் கூட்டமும் குறைந்தது. பாடகர் எங்களைப் பார்த்து சிரித்துப் பாட ஆரம்பித்தார். எனக்கு லேசாக வயிற்றைக் கலக்கியது.

அப்போது, இறைவனும் இயற்கையும் ஒன்று என்று நம்ப வைக்கும்படி, அந்தப் பாட்டு முடிந்ததும் பாடகரை இயற்கை அழைத்தது. அவர் மேடையிலிருந்து இறங்கி சென்றபோது, டிப்ஸ் அளிக்க இது தான் சரியான சந்தர்ப்பம், என்று எழுந்தேன். ஆனால் மானபங்கபயம் தீர்ந்ததும், திமிர் எட்டிப் பார்த்தது.

சுளையாக 10 டாலர் தரப்போகிறேன். தந்தது யாரென்று அவருக்குத் தெரியவேண்டாமா? படிக்க ஆசை என்று சொன்னால், படித்தவனாக இருக்க ஆசை, என்பதும் அதில் அடக்கம் என்பதை மறுக்க முடியுமா? முலாம் பூச வேண்டும் என்றால் - அவர் இசையை ஒருவன் ரசித்தது அவருக்கு தெரியவேண்டும் - என்று நினைத்ததாகவும் சொல்லலாம்.

ஓவர்கோட்டைத் துடைத்து, அணிந்துகொண்டு கிளம்ப ஆயத்தமாகும் பாவனை செய்து, அவர் திரும்பி வந்து மேடையேறும் நேரம் பார்த்து கிண்ணத்தில் காசிட்டேன். அவருடன் புன்முறுவல் பரிமாறிவிட்டு, அங்கிருந்து கிளம்பினோம். வாசற்கதவை திறக்கும்போது குரலைச் செருமி அடுத்த பாட்டுக்கு ஆயத்தாமானார்.

வெளியே வந்ததும் குளிர்காற்று வீசியது. ஆர்வக்கோளாரில் நெடுந்தூரம் வந்துவிட்டோம். விடுதிசேர அரை மணி நடை ஆகும். மறுநாள் காலை தொடங்கி அடுத்து ஒரு வாரம், எங்கள் நிறுவனம் போல கில்லாடிகள் கிடையாதாக்கும் என்று சிலபல பெரியவர்களை நம்பவைக்கவேண்டும். சான்றுக்கில்லாடிகளாக ஊரிலிருந்து இதற்குத்தான் வந்திருக்கிறோம்.

ஒரு கில்லாடி, மாலை இனிதாகக் கழிந்ததாக நினைக்க முயன்றுகொண்டிருந்தான். மற்றொரு கில்லாடி, வெந்த கோழிக்காக மெக்டோனல்டைத் தேடப்போவதாக அறிவித்தான். அருகிலிருந்த மைதானத்திலிருந்து ஒரு கூட்டத்தின் உற்சாகமான பெருங்குரல் கேட்டது.

கார்டினல்ஸ் வீரர் யாரோ சிக்ஸர் அடித்திருப்பார்.

7 comments:

 1. நிறைய உடி ஆலன் படங்களைப் பார்த்துவிட்டு நிஜமாகவே புளூஸுக்கும் கன்ட்ரிக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றால் அது வருத்தத்திற்குரிய அராஜகம்! சொந்தமாக ஒரு செய்யுள் எழுதிச் சேர்த்திருக்கலாம். :-)

  ReplyDelete
 2. சோகத்தில் பெரிய சோகம் பிறர் 'இதெல்லாம் ஒரு சோகமா' என்று நினைக்கும் சோகம் தான்.

  இவ்விஷயத்தில் என் கழிவிறக்கத்துக்கு எல்லையே கிடையாது. ஐபாட் வந்தாலும் வந்தது இவ்வளவு இசை ரசிகர்களுக்கிடையில் ஒரு காட்டுமிராண்டியாக வாழ்கிறோமா என்று குடைந்தெடுக்கிறது.

  குறிப்பாக டிசம்பர் வந்தால் ஒரு நகரமே இசையை நுணுக்கமாக ரசிக்க நான் சபாசபாவாக சென்று பேந்தபேந்த விழித்துவிட்டு வருவேன்.

  இட்டிசம்பர் இதைப்பற்றி செய்யுள் உறுதி.

  ReplyDelete
 3. நீங்கள் சொல்லும் இசை ரசிகர்கள் புத்தகமும் கையுமாக இருக்க மாட்டார்கள் என்பது உறுதி. ஐபாட் இல்லையென்றால் கிண்டில்!

  ReplyDelete
 4. I have the same problem, the exact same one w.r.t. genres. But that said, I guess the more you listen the more you 'learn' to spot the finer nuances. I used to agonise over not really being able to put my finger on it and say this is jazz. But I have a convenient theory now.

  But my theory is thus: What 'access' (I use access freely, beyond the information age humbug) we have to this music, here, is what filters through pop culture in its place of origin or through some magical youtube discovery (which I have started relying on heavily now). And mostly, America's 'white' media/ Hollywood that has called the shots on 'culture' for too long has FAILED, and I shall repeat in court, completely FAILED to capture jazz in all its glory, anywhere. White Hollywood doesn't even have a single decent jazz film if you look at it. Isn't that strange for a country where 100s and 100s of these brilliant artistes are there, where it has great reverence. Our access to jazz (and allied forms of music) is so skewered because there is a significant loss of cultural context. It's much like the little traditions of our country that find so little representation elsewhere. Because only the tastes of the 'aspirational class' are catered to.

  These are also also sort of intimate forms. Making them very conducive to smaller audiences. And by nature this music sort of rebels, and so even in representation only some seem to have the ability to capture it in class, without making it the cliched pepperapen music. Of course, our man Allen knows how best to use all that is charming, so he sprinkles them here and there.

  I have spoken too much. Got carried away. I shall bow out now, just that idha nAn romba nALa sollaumnu nanaikkaren, yaarume kEkka maattendranga.

  ReplyDelete
 5. நீலங்கள் என்பதையும் நித்தம் இசைத்துபல
  ஜாலங்கள் செய்திடும் ராஜாவைப் போலவே
  காலை எழுந்து கடமையை ஆற்றென
  சாலையில் சென்ற திரவு!

  ReplyDelete
 6. you have comment moderation enabled, why bother with word verification after that? painful.

  ReplyDelete
 7. கன்றி இசைபாப்பு ஜாஸ்ராக்கு கர்நாடிக்
  என்றப் பலவகையை கேட்டுணரும் நுட்பமிலை
  நன்று அலதறிய வாய்ப்பின்றி ராஜாசார்
  என்றும் இனியவையே தந்திட்ட காரணத்தால்
  அன்று விழித்தேன்'ஞே?' என்று

  ReplyDelete