Friday, July 9, 2010

ஒரு ஊரின் கதை - வலம்புரி ஜான்

ப்ளாக் வைத்திருப்பதன் உயரிய நோக்கங்களில் ஒன்று எழுதுபவன் (எழுத்தாளன் என்ற பதத்தைத் தவிர்க்கும் என் அடக்கம் யாருக்கு வரும்?) முன்னெப்போதோ கிறுக்கிய லாண்டரிக்குறிப்பு வரை வருங்கால சந்ததியினருக்கு பாதுகாத்து வைப்பது.

படித்த நூல்களைப் பற்றி எழுதுவது அபாய சாத்தியங்கள் உள்ள நல்ல பழக்கம். எழுதுவதற்காகப் படிக்க உந்தினால் நல்ல பழக்கம். "உன் வாசக அனுபவம் இவ்வளவுதானா?" என்று படிப்பவர்கள்/ படிக்கப்போகிறவர்கள் (மேற்சொன்ன வருங்கால சந்ததியர்) சொல்லிவிடக்கூடிய அபாயமும் உண்டு.


'உலகம் இதன்மேல் கவனத்தைக் குவித்தாகவேண்டும்' என்ற நூல்களைப் பற்றி எழுதினால் தான் இந்தப் பிரச்சினை. கிட்டத்தட்ட 'உள்சுழற்சிக்கு மட்டும்' என்ற வகை புத்தகத்தைப் பற்றி எழுதினால் ஒரு மாதிரி சமாளித்துவிடலாம்.


ஒரு ஊரின் கதை - வலம்புரி ஜான்

சில மாதங்களுக்கு ஒரு முறை எனக்கு கொஞ்சம் ஒழுங்கு பிடித்து அப்பாவின் புத்தக அலமாரியை அடுக்க முயல்வேன். அனேகமாக ஏதோ ஒரு புத்தகம் கிடைத்து, ஒழுங்குபடுத்தும் முனைப்பு மழுங்குவதோடு அது நின்றுபோய், மறுபடியும் புத்தகங்கள் கலைந்து கிடக்கும். இதை ஒரு சாரார் (அம்மா) 'திருப்பதி வேலை' என்றும் ஒரு சாரார் (அப்பா) 'அறிவுச்செறுக்கு' என்றும் சொல்வதுண்டு. அறிவுச்செறுக்கில் ஓரிரு மாதங்களில் தூசி படிந்து ஒழுக்கச்சக்கரம் மீண்டும் தொடங்கும்.

இந்தமுறை ஒரு இண்டு-இடுக்கிலிருந்து ஒரு ஒல்லிப் புத்தகம் கிடைத்தது: வலம்புரி ஜானின் 'ஒரு ஊரின் கதை'. இது புதினம் அல்ல. தனது சொந்த ஊர் (உவரி) பற்றியும், அதன் அருகில் உள்ள (தான் வளர்ந்த) தனக்குப் பழக்கப்பட்ட ராதாபுரம் போன்ற ஊர்களைப் பற்றி என்று. பதிவு போல ஊர்க்கதை, நையாண்டி, மனிதச் சித்திரங்கள், அரசியல், மதம் (தத்துவமாக அல்ல, வாழ்க்கை முறையாக) என்று எளிய நடையில் எழுதப்பட்டிருக்கிறது.

குறிப்பிட்டு சொல்லவேண்டியது புத்தகம் நெடுக இருக்கும் ஒரு எள்ளல் தொனி. இதை ரசித்துப்படிக்கும் படி செய்வது அது தான். மற்றொரு விஷயம் பாதிரிமார்களையும், அம்மக்களின் மீது மத அமைப்புகள் செலுத்தும் அதிகாரத்தையும் கடுமையாக தாக்கி ஜான் எழுதியிருப்பது. (நூலின் முன்குறிப்பு : இந்நூலில் வரும் இடங்களும் சம்பவங்கள் யாவும் கற்பனையல்ல, ஒரு சிலரையாவது புண்படுத்துவதற்காகவே எழுதப்படுகிறது) .

அதேபோல அவ்வூர் மக்களிடையே உள்சண்டையும், கலவரங்கள் வருவதையும் எழுதியிருக்கிறார். சில சமயம் கடிந்துகொள்ளும் தொனியில் , பல சமயம் அதையும நகைப்புக்குரிய விஷயமாக்கும் ஒரு கீழ்நோக்குப் பார்வையில்.

ஊரை விட்டு ஓடிவிடும் இளசுகள் ஒருசில நாட்களில் திரும்பி வந்துவிடுவதை சொல்ல: "சில நாளில் குறுகுதும்" என்ற கம்பராமாயண வாக்கியத்தை சொல்கிறார்.இதை குகனிடம் சொன்ன ராமன் 'சில நாட்களில்' வரமுடியாமல் பல பிரச்சனைகளை எதிர்கொண்டான். இனி இங்கு வருவதில்லை என்று உதரிச்சென்ற சிறுசுகளும் அது போல எதிர்பாராத மாற்றங்களை தங்கள் வாழ்க்கையில் சந்தித்திருப்பார்கள் என்பதை அழகாக, கச்சிதமாக ஒரு எதிர்-உதாரணத்துடன் சொல்கிறார். இதைப்போல போகிறபோக்கில் அவர் படிப்பு வெளிப்படுகிறது - பல சமயங்கள் இயல்பாகவே.

தான் எம்.பி ஆன பின் நிகழும் ஒரு சில அரசியல் அனுபவங்களையும் சுவையாக எழுதியிருக்கிறார். கழுதைவாலை உள்ளூர் பையன்கள் தீவைப்பது அனுமன் வாலால் இலங்கைக்கு தீவைப்பதை நினைவுபடுத்துவது, "இலங்கைக்கு போன அனுமன் இடையே எங்கள் ஊரின் நின்று டீ குடித்ததாக நம்பப்படுகிறது" என்றெல்லாம் மிக் சகஜமாக எழுதியிருக்கிறார்.

70-80 களில் கூட இவ்வளவு சகஜமாக எழுத முடிந்திருக்கிறது. காவியக்கதைக்களை மிக இயல்பாக நாம் எல்லாரும் உள்வாங்கிக்கொண்டுள்ளோம். மதத்தைத் தாண்டிய பொது கலாசார விஷயங்கள் இவை.ஆனால் இன்று இப்படி ஒரு கிறுஸ்தவ பிரமுகர் எழுதினால் "காழ்ப்புணர்ச்சி", தெருப்புழுதி என்று குதிப்பார்கள். இவற்றையெல்லாம் அந்நியமாகப் பார்த்து, 'மரியாதை'யுடன், மிகுந்த பிரக்ஞையுடன், கவனமாக அணுக/எழுத நிர்பந்திக்கும் ஒரு 'நாகரிகத்துக்கு' இன்று வந்துவிட்டோம்.

எழுத்து ஒரே சீராக இல்லை ஒரு சில இடங்களில் பாய்கிறது, தேங்குகிறது. கடைசியில், படிப்பதற்கு பாளையங்கோட்டை வந்தது, திருச்சியில் வேலைசெய்தது பிறகு சென்னைக்கு வந்தது என்று ஓரிரு பத்திகளில் அவசரமாக முடித்துபோல இருந்தது. அதனால் நானும்...

வெறும் நாற்பத்திசொச்ச பக்கங்கள் தான். ஜானின் மென்மையான எள்ளல் நடைக்காகவே ஒரு முறை படிக்கலாம். ஆனால் எங்கும் கிடைக்காது.

No comments:

Post a Comment