வாக்கியத்தைக் கழற்றிப் பார்க்கலாம்
சிறுகதை அதன் நவீன தொனியில் இரண்டு அல்லது மேற்பட்ட நிலைகளில் முரண்படும்போது நிகழ்வதை தனிப்பட்ட உரைநடையில் சொல்லும்போது இலக்கியம் என்று சொல்லலாம். குழப்பமாக இருக்கிறது அல்லவா. எனக்கும் அப்படியே. அடுத்த மூன்று பாராக்களில் தெளிவாகிவிடும். வாக்கியத்தைக் கழற்றிப் பார்க்கலாம். .. - சுஜாதா - இலக்கியச் சிந்தனை '75 சிறுகதைத் தொகுப்பு முன்னுரை. இலக்கிய சிந்தனை அமைப்பு ஒவ்வொரு மாதமும், அம்மாதம் பத்திரிக்கைகளில் பிரசுரமான கதைகளில் சிறந்தவற்றைத் தேர்வு செய்து, ஒவ்வொரு வருடமும் அப்பன்னிரெண்டு கதைகளில் ஒன்றை தேர்வு செய்து பரிசளித்து, பன்னிரெண்டு கதைகளைச் சிறுகதைகளையும் தொகுப்பாக வெளியிட்டு வருகிறது. தேர்வு செய்பவர் தன் தேர்வை விளக்கி முன்னுரை எழுதுவது வழக்கம். ‘75ல் சிறந்த சிறுகதையைத் தேர்வு செய்தவர் சுஜாதா. (அவர் தேர்வு செய்தது வண்ணதாசனின் தனுமை). அந்த முன்னுரையின் தெளிவும், சரளமும் அவரில்லாத வெறுமையை இன்னும் அடிக்கோடிடுகின்றன. சில பகுதிகள்: நான் சந்தித்த பல எழுத்தாளர்கள் யோக்கியமாக மற்றவர் கதைகளை படிக்கிற ஜாதி அல்ல என்று தெரிந்து கொண்டேன். அவர்கள் பொழுதுபோக்குக்கு தத்தம் சொந்தக் கதைகளை படித்து...