பாலைப்புயல் '98பாலைத்திணையதில் வாகைக்களிப்பதை பொருத்துவதில்லை நற்பாணர்
சாலைக்கடந்திட தேவைநெறிமுறை மீறுவதுண்டே சிலபொழுது
ஏழையிவனது உவகைநினைவுகள் உட்படவில்லை சட்டகத்துள்
காளையுட்புகு பீங்கான்கடையதை நினைவில் நிறுத்திய ஒரு பொழுது

மாலைசித்திரை வெயில்மணலது சூறாவளியில் சுழன்றதுபோல்
ஓராளை எதிர்கொள மஞ்சள்ளணிபவர் பத்தோடொருவரும் உழன்றாரே
வாளைவீசுடும் வேங்கையொன்றதை சொல்லிலடைப்பதும் சாத்தியமோ
ஏழையிவனது ஆசைக்கெனவோர் அரிசிப்பதத்துடன் நிறுத்திடுவேன்

ஜ்வாலைப் பார்வையை கண்ணிலிருத்தி சடுதியில் வீசிடும் காஸ்ப்ரோவிச்
பாலை எதுவோ மிதசுழற்பந்தன் எவனோ ஒருவன் போட்டதுபோல்
சேலை அணிந்திடும் மாதர் அவரது நளினம் கலந்த கொலைவெறியில்
மூலை ஒன்றதில் ஆழக்களித்திடும் மாந்தர் இடமதிற் பதித்தானே

நாளைமுதுமையில் பேரும் பாலும் உறவும் மறக்க நேர்ந்திடுமோ
ஓலைப்படுக்கையை நோக்கிடும்போது நாரணன் பேர் சொல மறந்திடுமோ
ஒரு வேளை - அதுபோல் இதுவும் ஒருநாள் மறந்திடுவேன் என பயங்கொண்டே
வாலைப்பருவ காலத்தில் கண்ட பேரழகிங்கிதை வரைந்துவைத்தேன்

Comments

Post a Comment

Popular posts from this blog

கீசக வதம்

போதும்

EXT - DAY (Kinda)