தமிழிலக்கியமும் தைப்பொங்கலும்
தைப்பொங்கல் ஒரு உழவர் பண்டிகை என்பது இன்று காணும் நிதர்சனம் என்றாலும், அது எக்காலத்தில் இந்நிலையை அடைந்தது என்பதில் தெளிவில்லை. ‘சங்க காலம் முதற்கொண்டே இயற்கைக்கும், மாடுகளுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவைக் கொண்டாடி வருவது தெளிவு’ என்கிற ரீதியில் ஒரு பொதுப்புரிதல் நிலவுகிறது. ஆனால் அதற்கு எந்த இலக்கிய சான்றும் இல்லை. பொதுவாக சங்ககாலம் தொட்டு தைப்பொங்கல் தமிழர் பண்டாட்டில் நிலவுவதாக நம்ப விழைபவர்கள் காட்டும் சில மேற்கோள்களைப் பார்ப்போம் (பலர் இவ்வரிகளை புளகாங்கித வாட்ஸாப் இடுகைகளில் பார்த்திருக்கலாம்!) 1. அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த ஆய் கரும்பின் கொடிக்கூரை சாறு கொண்ட களம் போல வேறு வேறு பொலிவு தோன்ற (புறநானூறு 22) சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் போர்ப்பாசறையைப் பாடும் பாடலில் வரும் வரி இது. இவ்வரியின் பொருள்: உ உ “அசைந்த செந்நெல் கதிரால் வேயப்பட்ட மெல்லிய கரும்பால் கட்டப்பட்ட ஒழுங்குபட்ட கூரை, விழா எடுத்துக்கொள்ளப்பட்ட இடத்தைப் போல வேறு வேறாக பொலிவு தோன்ற.... ” (உ.வே.சா உரை) இப்பாடலின் நிகழ்காலம் பொங்கல் விழா அல்ல, போர்க்களம். செந்நெல், கரும்பு இரண்...