மடி
இன்று வைகாசி அனுஷம். திருக்குறளில் ஏதாவது ஒரு பக்கத்தை திறந்து, கண்ணில் படும் குறளைப் படித்து, அது ஏற்கனவே அறிந்ததாக இருப்பின் மூடி, வேறொரு பக்கம் திறந்து தேடிப் படித்தேன். படிக்காத புதுக்குறள் கிடைக்கும் வரை. ஓரிரு வருடங்களாக இது ஒரு புதுப்பழக்கம். இதை ஒரு அறிவுசார்(!) வழிபாட்டுச்சடங்காக ஆக்கிவிட உத்தேசம். இன்று கிடைத்தது: மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர் அதிகாரம்: மடியின்மை குறள் எண்: 602 மடி என்றால் சோம்பல். தான் பிறந்த குடியை உயர்ந்த குடியாக ஆக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் சோம்பலை ஒழிப்பர் என்பது இன்றைய பொதுப்புரிதலில் நிலைத்துவிட்ட பொருள். மடியை மடியா - என்பது எவ்வாறு 'சோம்பலை ஒழிப்பது' என்று பொருள்படும்? எல்லாரும் 'மடியா' என்பதை வினையெச்சமாகப் பொருள்கொண்டு அப்படி உரை எழுதியிருக்கிறார்கள். சரி தான். ஆனால், 'இடும்பைக்கு இடும்பை' போன்று அத்தனை அழகாக இல்லை என்று தோன்றியது. பரிமேலழகர் உரை: நெருப்பிற் கொடியது பிறிதின்மை பற்றி, நெருப்பை நெருப்பாகவே கருதுக என்றாற்போல், மடியின் தீயது பிறிதின்மை பற்றிப் பின்னும் அப்பெயர் தன்னானே கூறினார். 'அங...