தமிழிலக்கியமும் தைப்பொங்கலும்

 தைப்பொங்கல் ஒரு உழவர் பண்டிகை என்பது இன்று காணும் நிதர்சனம் என்றாலும், அது எக்காலத்தில் இந்நிலையை அடைந்தது என்பதில் தெளிவில்லை.

‘சங்க காலம் முதற்கொண்டே இயற்கைக்கும், மாடுகளுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவைக் கொண்டாடி வருவது தெளிவு’ என்கிற ரீதியில் ஒரு பொதுப்புரிதல் நிலவுகிறது. ஆனால் அதற்கு எந்த இலக்கிய சான்றும் இல்லை.

பொங்கல் பரிசு பை…. தமிழக அரசு செம… ஸ்டாலினுக்கு குவியும் வாழ்த்து…!!! –  Seithi Solai


பொதுவாக சங்ககாலம் தொட்டு தைப்பொங்கல் தமிழர் பண்டாட்டில் நிலவுவதாக நம்ப விழைபவர்கள் காட்டும் சில மேற்கோள்களைப் பார்ப்போம் (பலர் இவ்வரிகளை புளகாங்கித வாட்ஸாப் இடுகைகளில் பார்த்திருக்கலாம்!)


1.

அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த 

ஆய் கரும்பின் கொடிக்கூரை 

சாறு கொண்ட களம் போல

வேறு வேறு பொலிவு தோன்ற

(புறநானூறு 22)


சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் போர்ப்பாசறையைப் பாடும் பாடலில் வரும் வரி இது. 

இவ்வரியின் பொருள்:

உ.வே.சாமிநாதையர் நினைவுகள்

“அசைந்த செந்நெல் கதிரால் வேயப்பட்ட மெல்லிய கரும்பால் கட்டப்பட்ட ஒழுங்குபட்ட கூரை, விழா எடுத்துக்கொள்ளப்பட்ட இடத்தைப் போல வேறு வேறாக பொலிவு தோன்ற.... ” (உ.வே.சா உரை)

இப்பாடலின் நிகழ்காலம் பொங்கல் விழா அல்ல, போர்க்களம்.


செந்நெல், கரும்பு இரண்டையும் காணும்பொழுது ஒரு விழாவை நினைவுபடுத்துவதால் இந்த உவமையைக் கையாண்டிருக்கிறார் இப்பாடலைப் பாடிய குறுங்கோழியூர் கிழார். இது குறிப்பாக இன்று நாம் கொண்டாடும் பொங்கல் போன்ற ‘உழவர்கள் பரிதிவணக்கம் செய்யும் பண்டிகை’ என்று சொல்லிவிட முடியாது.




2.

தையிட் திங்கள் தண் கயம் படியும் (நற்றிணை 80)


தண்மை என்றால் குளிர்ச்சி

கயம் என்றால் குளம்


“தை மாதத்தில் குளிர்ச்சியான குளத்தில் நீராடும்” தலைவிதான், தன் பிரிவுநோய்க்கு மருந்து...என்று தலைவன் சொல்லும் பாடல் இது.


3.

தையிட் திங்கள் தண் கயம் தரினும்

 (குறுந்தொகை 196)


தலைவியின் பிரிவாற்றாமையைப் பற்றி தோழி கூறும் பாடல் இது. 

‘தை மாதத்தில் குளிர்ச்சியான குளத்தில் இறங்கினாலும், பிரிவால் வருந்தும் தலைவி, அதை வெப்பமாக உணர்கிறாள்', என்று மிக அழகான வரி இது.


4.

தையிட் திங்கள் தண் கயம் போல் 

(ஐங்குறுநூறு 84)


ஒழுக்கம் தவறி பரத்தையர்பால் சென்ற மருதநிலத் தலைவனை, தோழி இடித்துரைக்கும் பாடல் இது. 


“தை மாதத்து குளிர்ந்த குளம் போல”...பல பெண்கள் அடைந்த இடம் உன் மார்பு – என்று கூறுகிறாள்.


தைநீராடல் சங்ககாலத்தே பெண்களிடையே ஒரு வழக்காக இருந்ததை இப்பாடல் குறிப்புணர்த்துகிறது. 


இதுவரை சொன்ன பாடல்களில் குளுமையான குளத்தில் இறங்கும் தனியொரு தலைவியின் செயல்தான் ஒப்புமைப்பொருள். ஆனால், இவ்வரியில் பெண்டிர் பலர் கூடி நீராடும் ஏதோ ஒரு வழக்கம் இருந்திருப்பதாய் கோடிக்காட்டப்படுகிறது. 

எத்துணைப் பரவலான வழக்காக இது இருந்திருந்தால், ஒரு எதிர்நிலை ஒப்புமையில் பயன்படும்போதும் இது தெளிவாகப் பொலிந்திருக்கும், என்பதை நாம் உணரலாம். 

சங்கப்பாடல்களுக்கே உரித்தான அழகியல்.


5.  

தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ 

(கலித்தொகை -59 ; குறிஞ்சிக்கலி)


தலைவியின் அழகைக் கண்டு தலைவன் மருள்கிறான். ஆனால் அவளோ இவனைக் கண்டுகொள்ளவே இல்லை. “என்னை இவ்வாறு வருந்தவிட்டுவிட்டு நீ தை மாதம் நீராடி நோன்பு (தவம்) இருக்கச் சென்றுவிடுவாயோ?” என்று கேட்கும் வரி இது.

மிகத் தெளிவாக சங்ககாலத்தில் பெண்கள், தைமாதத்தில், குளிர்ந்த நீரில் நீராடி நோன்பிருக்கும் வழக்கம் இருந்த செய்தியைத் தெரிவிக்கிறது இப்பாடல்.

தையொரு திங்களும்....என்று தொடங்கும் ஆண்டாளின் நாச்சியார் திருமொழி இந்நோன்பின் நீட்சியாக நாம் கொள்ளலாம்.

இப்பாடல்களில் ஒன்றில் இன்றைய பொங்கல் பண்டிகைக்கான வேர் இருப்பதாகச் சொல்ல இடமில்லை.


6.

நெய்பூசும்  ஒண்புழுக்கல் நேரிழையீர் கொண்டாடும் 

(திருஞானசம்பந்தர் தேவாரம்)

சம்பந்தர், மயிலை கபாலீச்சுரத்தில் பாடிய பூம்பாவை திருப்பதிகத்தில் வரும் வரி இது. அதன் அடுத்த வரி:

தைப்பூசம் காணாதே போதியே பூம்பாவை.

Sakthi Vikatan - 08 May 2009 - தேவாரத் திருவுலா!-ஈசனின் திருத்தலங்கள் |

‘(மயிலையில்) பெண்கள் நெய்யொழுகும் பொங்கல் (ஒண்புழுக்கு) சமைத்துக் கொண்டாடும் தைப்பூசத்தைக் காணாது போவாயோ பூம்பாவாய்’ என்று சம்பந்தர் பாடி, பூம்பாவையை உயிர்பிக்கிறார்.


ஆக, இப்பாடலில் பொங்கலும் இருக்கிறது, தையும் இருக்கிறது, ஆனால் தைப்பூசத்தில்! 

தை முதல் நாள் பண்டிகை இல்லை.


இதேபோல சிலப்பதிகாரத்திலும் பொங்கல் படைக்கப்படுகிறது. ஆனால் அது இந்திர விழாவில்.


7.

புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல் 

(சீவகசிந்தாமணி, 1821, கனகமாலையார் இலம்பகம்)

ஏமமாபுரத்தை சீவகன் காண்கிறான். அதன் சிகப்பு நிற மதிலைத் தாண்டி வெண்மையான நிற மாடங்கள் ஓங்கி உயர்ந்து தெரிகின்றன. இக்காட்சி எவ்வாறு இருக்கிறது என்றால்: ‘புதிய (மண்)பானையிலிருந்து வெண்மையான பால் பொங்குவதைப் போல இருக்கிறது’ என்று வர்ணிக்கிறார் திருத்தக்கத்தேவர்.


இது ஒரு காட்சி ஒப்புமை, அவ்வளவே.

ஆனால் இதற்கு முந்தைய வரியுடன் சேர்ந்து படித்தால்:


மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்தீ

புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்......


என்று வருகிறது.


அதாவது, தேன் நிறைந்த பூக்களால் ஆன அசையும் மாலைகள் (அணிந்த) மங்கையர் வளர்க்கும் செந்நிற தீயின் மீது (வைக்கப்பட்ட) புதிய மண்பானையிலிருந்து பொங்கிய பாலைப் (போல)...


என்று பொருள்.

மாலை அணிந்த மங்கையர் கூடி புதுப்பானையில் பாலைப் பொங்க விடும் காட்சி.

இது பொங்கல் வைக்கும் விழா நிகழ்வு. தைப்பொங்கல் என்று உறுதியாக சொல்லமுடியாவிட்டாலும், ஒரு விழா நிகழ்ச்சியைத் தான் திருத்தக்கத் தேவர் உவமையாக்கியிருக்கிறார், என்று சொல்லலாம்.


ஆக, பழந்தமிழ் இலக்கியங்களில், தை இருந்தால் பொங்கல் இல்லை. 

பொங்கல் இருந்தால் தை இல்லை. 

தையும் பொங்கலும் இருந்தாலும் அது (இன்றைய) தைப்பொங்கல் இல்லை. 


17ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட உழவர்குடி மக்கள் இலக்கியமான முக்கூடற்பள்ளில்: 


‘பொங்கலும் இட்டுத் தேங்காயும் கரும்பும் 

பூலா உடையாருக்குச் சாலவே கொடும்’


என்று உழவர்கள், ‘பூலாவுடையார்’ என்ற தெய்வத்துக்கு படையல் இடுவதைக் காண முடிகிறது. இதுவும் தைப்பிறப்பில் என்று சொல்வதற்கில்லை என்றாலும், உழவு சார் விழாவாகவும், படையல்கள் ஓரளவு இன்றுடன் ஒத்திருப்பதையும் இருப்பதைக் காண முடிகிறது.

காலப்போக்கில் பண்பாட்டின் பல கூறுகள் முயங்கித் தொகுந்து இன்றைய நிலையை அடைந்திருப்பதாக நாம் புரிந்துகொள்ளலாம்.


Comments

Popular posts from this blog

Will KamalHassan apologise for Mahanadhi ?

Judex Ergo Sum

Kamal - the writer/director