Monday, January 4, 2010

அந்நியன் வந்தான் அம்மணமாக

இதைப் படிக்காவிட்டால் பேரிழப்பு என்பனவற்றைத் தவிற பிறவற்றைப் படிக்க நான் முனைவதில்லை என்றார் எமர்ஸன். வியர்வை சிந்தி படித்துவிட்டு 'நேரம் வீண்' என்ற புரிதலை எட்டுவது மிகவும் எரிச்சலானது. வந்து குவியும் எழுத்து அத்தனையும் படிக்கமுடியாததால் தெரிவு செய்யவேண்டியதாகிறது. ஆதர்ச எழுத்தாளர்களே சிலசமயம் நம் காலைவாரிவிடும்போது புதியவர்களை எங்கு நம்புவது ?

நாம் மதிக்கும் விமர்சகர்களின் மதிப்புரைகள் உதவும் என்பது ஓரளவில் தான். முரண் இல்லாமல் இயங்க வேண்டிய கட்டாயத்தின் பளுவில் அவர்கள் இயங்குவதால், அவர்கள் விருப்பங்கள் நாளடைவில் இலக்கியக் கோட்பாடுகளுக்கு உட்பட்டு கொழகொழத்து விடுகின்றன என்பது என் செல்லத் தேற்றங்களில் ஒன்று.

விருப்பு முதலில் நிகழ்கிறது. அதற்கானக் காரணத்தேடல் பிறகு. காரணங்களைத் தேடிக் கண்டடைந்து மற்றவர்களுக்கு விளக்கிட முடியும் என்ற நம்பிக்கை, நம் விருப்புகள் அறிவுபூர்வமானவை என்ற எண்ணத்தால் தோன்றுகின்றது. நம் விருப்பங்கள் அறிவுவயமாக இருக்கவேண்டும் என்பதும் ஒரு விருப்பம் மட்டுமே.

"எனக்குப் பிடித்தது, உனக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். படி" என்ற நண்பர்களின் பரிந்துரை அனேகமாக சரியாக இருக்கிறது. உலக படைப்பிலக்கிய தரவரிசையில் இப்படைப்பின் இடம் பற்றியத் தீர்மானம் செய்ய வேண்டிய நிர்பந்தம் நண்பனிக்கில்லை. அதே சமயம், முற்றிலும் புறவயமான, முரணற்ற மதிப்பீட்டை உருவாக்கிட முடியும் என்ற இலக்கிய மதிப்புரையாளனின் விழைவு நகைப்புக்குறியதல்ல. முழுவதும் செய்யமுடியாததை முடிந்தவரை செய்வது தானே மனித இனத்தின் கூட்டு வரலாறு.

1960 களின் இறுதியில், அமெரிக்க மக்களின் வாசக ரசனை தரம் தாழ்ந்துவிட்டது எனவும், போதுமான அளவு பாலியல் இருக்கும் பட்சத்தில் எவ்வளவு மோசமாக இலக்கியத்தரமற்று எழுதப்பட்ட படைப்பும் வெற்றியைப் பெறும் என்று நம்பினார் பத்தி எழுத்தாளர் மைக் மெக்ரேடி. அதை நிறுவ அவர் ஒரு 'இலக்கியப் போலி'யை உருவாக்க முடிவெடுத்தார். 24 சக இதழ் எழுத்தாளர்களைச் சேர்த்து, கூட்டு எழுத்தாக 'அந்நியன் வந்தான் அம்மணமாக' (Naked came the Stranger) என்ற புதினத்தைப் படைத்து 1969ல் வெளியிட்டார்கள்.

கதைச்சுருக்கம் இது தான். மணவாழ்வில் ஒற்றுமை பற்றி வானொலியில் நிகழ்ச்சி நடத்தும் ஒரு ஆதர்ச தம்பதி. அவர்களில், கணவன் பிறருடன் தொடர்பு வைத்திருப்பதை மனைவி அறிய நேர்கிறது. அதன் பிறகு அவள் ஒரு வித வன்மத்துடன் தன் வேட்கையைத் தொடங்குகிறாள். அத்தியாத்துக்கு ஒருவர் பலருடன் நெருங்கி பின் கூடுகிறாள். தோட்டக்காரர், அண்டைவீட்டுக்கிழவர், பாதிரியார், பெண்தோழி, உள்ளூர் கடத்தல்காரன் என்று பொதுவில் உலவும் அனேக பிறழ்வுவிழைவுகளும் (fetishes) இந்நூலில் அடக்கம்.

வெறும் வேட்கைத்தணிப்பு நூல்களிலிருந்து இந்நூலைத் தனித்துக்காட்டும் முயற்சிகள் பொதிந்துவைக்கப்பட்டதுபோன்ற ஒரு பிம்பம் ஏற்படும்படி எழுதியிருப்பார்கள். அதாவது ஒரு 'நுட்ப' வாசகர் தாமே தோண்டி இப்புதினத்தின் அடிச்சரடுகள் கண்டடைந்து பரவசப்பட (!) துணுக்குகள் ஆங்காங்கே இருக்கும். துப்பரியம் நாவலின் திகில் துணுக்குகள் அல்ல. சமூகவியல், உளவியல் என்ற கனத்தோற்றம் கொண்ட துணுக்குகள்:பொதுவாழ்வில் ஆதர்சபிம்பங்களின் தனிப்பட்ட வாழ்வின் தாழ்நிலை, கொரியப் போரில் தான் செய்த கொடூரங்களை நினைவில் இருத்தி அவஸ்தைப்படும் முன்னாள் சிப்பாய் (உளவியல் பாதிப்பு, படிமம் எல்லாம் உண்டு) , பாதிரியுடன் மதம் பற்றிய உரையாடல், கிழவரிடம் காலம் கடந்துசெல்லுதல் பற்றிய உரையாடல், கடத்தல்காரன் தனக்கு நெருக்கமானவர்களுக்கு விட்டுச் செல்லும் கடிதம்.... என்று பல.

ஒவ்வொன்றும் 'ஏதோ ஒன்று' இருப்பதைப் போன்றதொரு சந்தேகத்தை வலுப்படுத்தும் விதமாக வடிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு அத்தியாயமும் வெவ்வேறு ஆசிரியரால் எழுதப்பட்டு (எந்தவித தொனித் தொடர்ச்சியும் இருந்துவிடக்கூடாது என்பதற்காக), பிறகு மொத்தமாகப் படித்து தரக்குறைப்பும் செய்யப்பட்டது. அதாவது அவர்களையும் மீறி நன்றாக வந்துவிட்ட பகுதிகளை நறுக்கி, அற்பமான வரிகள், சம்பவங்கள் மூலம் வாசிப்பு சாத்தியங்களை முடக்கும் விதமாக திருத்தி எழுதப்பட்டது. ஆசிரியராக, பெனெலொபி ஆஷ் என்ற புனைப்பெயரைத்தாங்கி இந்நூல் வெளிவந்தது. மெக்ரேடியின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்நூல் அபார வெற்றியை பெற்றது. இந்த இலக்கியப்போலியிலிருந்து தனக்குப் பணம் வருவதால் சங்கோஜமடைந்த பெனெலொபி ஆஷில் ஒருவர் குட்டை உடைத்தார். இலக்கியப் போலி என்ற புதுமைக்காக இன்னும் தொடர்ந்து விற்றது.

இன்று இது அநேகமாக அதன் பல்குரல்தன்மை, கட்டமைப்பில் சிதைவு போன்ற குணாதிசியங்களுக்காக போற்றப்படலாம். இலக்கியத்தில் போலி என்ற ஒன்றே இல்லை என்றும் சொல்லப்படலாம். ஆசிரியர் போலியைப் படைக்கவேண்டும் என்று எண்ணியிருக்கலாம் ஆனால் ஆசிரியர் என்பவர் பிரதியை நம் கையில் கொடுத்துவிட்டு செத்துவிடவேண்டியது என்று தீர்ப்பாகிவிட்டதே !

என்னளவில், தூரதேசத்திலிருந்து நண்பனுக்கு தொலைபேசி, படித்துக் காட்டிச் சிரிக்கும் அளவு அபத்தநகை பொதிந்த நூலாக இருந்தது. இந்நூல் ஒரு போலி என்று முன்கூட்டியே தெரியும் என்பதையும் சொல்லியாகவேண்டும். முன்கூட்டித் தெரியாமல், அதன் நகைச்சுவை எனக்கு(ம்) புலப்படாத அளவு இன்னும் கொஞ்சம் ஆழமாக இருந்திருந்தால் குழம்பியிருக்கக்கூடும்.

என்னை ஈர்க்காத எதையாவது படிக்கும்போது அனேகமாக என் நுட்பவாசிப்பின்மையை மட்டும் பழிசொல்லிக்கொள்வதை விடுத்து, குறும்பான ஒரு சந்தேகமும் இப்போதெல்லாம் எழுகிறது. ஒருவேளை 'ஒன்றுமி'ல்லாததைத்தான் ஏதோ இருப்பதைப் போல நீட்டி முழக்கி எழூதியிருக்கிறார்களோ என்று. குழந்தைத்தனம்தான். இருந்துவிட்டுப் போகிறது.

எப்படியும், குழந்தைக்கு மட்டும் தானே சக்கிரவர்த்தியின் அம்மணம் தெரிந்தது.

மறுபடியும் முதல்லேர்ந்தா !

பிடிக்கவேண்டும்.
'பிடிப்புவேண்டும் என்பதால்' என்பது முன்பொருகாலத்தில் சாமான்யக்காரணமாகத் தோன்றியொருக்கிறது. சாமான்யம் என்பதை தவிர்க்கவேண்டியதாக நினைத்த காலம் அது. இன்றும் அதை தவிர்க்கவியலதாது என்று சொல்லத்தோன்றவில்லை. தவிர்க்கத் தோன்றவில்லை என்றே சொலகிறேன். சாமான்யத்திலிருந்து ஏதோ விலகிவிட்டதைப் போல, ஒரு வித முனைப்புடன் அதனை எய்துகிறேன்.

Happy New Year World